Wednesday, October 10, 2012

புலவர்கள் உதவி இன்றியே படிக்க முடியும், திருக்குறளை !

  
முப்பாலில் முத்தெடுத்து பாமரனுக்கு வழங்கிய  தூத்துக்குடித்  தமிழன்பர்,!



  வாழ்த்தவும், வரவேற்கவும், , விமர்சிக்கவும், நட்பிற்கும், தொடர்பிற்கும் vce.projects@gmail.com


தில்லித் தமிழ்ச் சங்கமும், தினமணியும் ஒருங்கிணந்து,  இந்தியாவில் இயங்கிவரும் இலக்கிய அமைப்புக்கள் அனைத்தையும்
சென்ற செப்டம்பர் 15, 16 தேதிகளில் ஐக்கியப்படச் செய்தனர். இந்தியாவில் இயங்கும் இலக்கிய அமைப்புக்கள் ஓரிடத்தில் கூடியது இதுதான் முதல்முறை .

இருநாள் விழாக்களின் முடிவில் இயற்றிய தீர்மானங்களில் மிகவும் முக்கியமானது, “ தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வீட்டில் தமிழில்தான் பேச வேண்டும்” என்பதாகும்.  “தமிழ் செய்த பாவம், தமிழனுக்குத் தாய்மொழியாய் வந்து வாய்த்ததுதான் “ என்று ஈரோடு தமிழன்பன் கூறுவார், என எனது நண்பரொருவர் மேடையில் பேசியபோதுதான் அறிந்துகொள்ள முடிந்தது. புது தில்லியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இக்கருத்தைதானே பிரதிபலிக்கின்றது.

”தாத்தா, தமிழ் வேண்டாம் தாத்தா, ஃப்ரெஞ் எடுத்துக் கொள்கிறேன்” நேரமும் காலமும் மிச்சமாகும் என்ற இளைஞர்களின் குரல்கள்தான் தற்சமயம் தமிழகத்தில் அதிகம் ஒலிக்கின்றது. முதல் மதிப்பெண்கள் எடுத்தவர்களைவிட, அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நிலையிலும், தமிழை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளாதால், பரிசு கிடைக்காத மாணாக்கர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு செல்வதுதானே நாம் காணும் வரலாற்று உண்மை.

ஆங்கிலத்தில் மட்டும் புலமை இருந்து விட்டால் போதும் என்ற எண்ணம் தமிழர்களிடம் வேரூன்றி வெகுகாலமாகிவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியுமா?

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பேசிய மூத்த தமிழறிஞர் தமிழண்ணல், “ நான் பல பல்கலைக் கழகங்களுக்குச் சென்றிருக்கின்றேன். அங்கிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்குப் போதிய தமிழறிவு இல்லை. மீண்டும் தமிழிலக்கியங்களை அவர்களுக்குப் போதித்துத் தேர்வும் நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களையே, பல்கலைக் கழகங்களில் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்.” இக்கூற்றில் உண்மை இல்லாமலா இருக்கும் ?

1970-க்கு முற்பட்ட காலங்களில் எல்லாம் பள்ளிகளில் தமிழாசிரியரைச் சுற்றிலும் மாணாக்கர் குழாம் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது தமிழ் வகுப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். அட்டவணைப் பாடத் திட்டங்களுக்கிடையே தமிழாசிரியர் கூறிடும் பொது அறிவுத் தகவல்களைக் குறித்துக்கொள்ள தனி நோட்டினையே மாணாக்கர்கள் வைத்திருப்பர். மனப்பாடப் பகுத்திப் பாடல்களை மட்டுமன்றி, தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுமையுமோ / பெரும்பாலனவற்றையோ மாணாக்கர்கள் தாமாகவே விரும்பி மனனம் செய்திருப்பர்.  தமிழ்ப் பாடல்களை எளிய இனிய மெட்டுக்களுடன் பாடிக்காட்டிப் போதிக்கும் தமிழாசிரியர்கள் பலர் இருந்ததும் இதற்கெல்லாம் காரணமாகவும் இருந்தன..

இப்பொழுதெல்லாம் தமிழ் மாணாக்கர்கள் பலருக்குக் கசக்கிறது. ஏனெனில், அதில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தாலும் அவர்கள் கனவு காணும் மேல்படிப்பிற்கு அது உதவப் போவதில்லை என்ற உண்மைதான்!

இப்படிப்பட்ட சூழல் நிலவும் தமிழகத்தில், திருக்குறளுக்கு விளக்கம் தரும் புதுக்குறளைப் படைத்தளிக்கும் புதுமையில் வெற்றி பெற்றிருக்கின்றார், ஓர் கட்டிடக்கலை வல்லுநர். அவர் எழுதியுள்ள குறளுக்கு விளக்கம் சொல்ல எந்தத் தமிழாசிரியரும் தேவை இல்லை. அவ்வளவு எளிமையாகவே உள்ளது.

கோனார் உரைநூல் இல்லாமல் எந்த மாணாக்கரும் தமிழ்த் தேர்வை எதிர் கொள்வதில்லை. கோனார் உரை நூலை வைத்தே தமிழாசிரியர்களும் பாடம் நடத்துகின்றனர். விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியும் துவங்காமலும் இருக்கும் நிலையிலேயே, அத்தனை தமிழாசிரியர்களுக்கும் கோனார் உரைநூல் புத்தகம் இலவசமாகச் சேர்ப்பிக்கப்பட்டுவிடும். வேறு உரைநூல்கள் சில இருந்தாலும், இதுவே முன்னணியில் இருப்பதால் , அதுவே குறிப்பிடப்படுகின்றது..

நமது கட்டிடக்கலை வல்லுநர் கதைக்கு வருவோம். இணையத்தில் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் போது, விளையாட்டாக ஒரு புதுக் கவிதையை எழுதினார். தமிழ் அறிஞர் ஒருவர் ”இது கவிதையே அல்ல. வேண்டுமானால் பாத் ரூம் சுவற்றில் கிறுக்கிக் கொள்ளலாம் “ என்று சாடினார். கவிதை எழுதச் சொல்லித் தர வேண்டினார், இஞ்சினியர், தமிழறிஞரிடம்!. அந்தத் திறமை எல்லாம் உடம்பில் இருக்கும் உயிர்போன்று துவக்கத்திலிருந்தே வரவேண்டும் ; இடையில் எல்லாம் செருகமுடியாது என்று சொல்லிவிட்டார்.

உலகில் எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவதில் முதலில் வருபவன் தமிழன்தான். அவ்வுணர்ச்சி சரியான திசைவழியில் செயல்படுத்தும் தமிழனாக இருந்துவிட்டால் சாதனையை நிகத்திக் காட்டுவதில் முதலில் வருபவனும் தமிழன்தான்.

வந்தது ரோஷம், இஞ்சினியருக்கு. சவாலே, விட்டுவிட்டார். ”இன்னும் இரு மாதங்களில் மரபுக் கவிதை எழுதிக் காட்டுவதாக. அது மட்டுமல்ல, அதற்கும் மேல் ஒரு படி சென்றார். ஒரே ஆண்டில், நீங்களே பாராட்டும்படி, தமிழ் இலக்கியத்தில் ஒருவகையில் சாதனை நிகழ்த்த்திக் காட்டுவதாகவும் முழக்கமிட்டார்.”

அப்படிச் சவால் விட்டவர் பிறந்த மண்ணின் மாண்பு அது. பண்டிதருக்கே உடைமைப் பொருளாக இருந்த தமிழைப் பாமரருக்குச் சொந்தமாக்கியவர்கள் பலரைப் பெற்றெடுத்த பூமியது.அந்தப் புண்ணிய பூமி தமிழுக்குத் தந்த தவப்புதல்வர்களைப் பற்றித் தனியாகத்தான் எழுதல் வேண்டும். இன்றையத் தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டம்தான் அது.

அவர்களின் வரிசையில் தற்பொழுது  ந.உ. துரை ஆற்றியுள்ளது ஓர் அருஞ்சாதனை ! திருக்குறளுக்குக் குறள் வடிவிலேயே பொருள் கூறியுள்ளார். அந்தக் கருத்துரை கொண்ட குறள் வெண்பாவைப் படித்தாலே, திருக்குறளின் பொருளினை, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், எந்த கோனார் உரைநூல் மற்றும் தமிழாசிரியர் உதவியின்றிப் புரிந்து கொள்வர்.

திருவள்ளுவர் காலந்தொட்டு இன்றளவும் இவரைப்போல் யாரும் எழுதியதில்லை., திருக்குறளுக்கு, உரை!

தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் இரு வாரிசுகளுடனும், இல்லத்தரசியுடனும் இனிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார், ந.உ.துரை. 

எடுத்துக்காட்டாக  மூன்று குறட்பாக்கள் !  

அதிகாரம் 056  கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. - திருவள்ளுவர்.  ( 056.01  )

அறமழித்து துன்புறுத்தி ஆளும் அரசு
கொலைசெய்வோர் காட்டிலும் தீது. - ந.உ.துரை.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு.         - திருவள்ளுவர்.        ( 056.02 ) 

வேலொடு கள்வன் பொருள்பறித்தல் போன்றாம்;செங்
கோல்மன்னன் கேட்கும் வரி.      - ந.உ. துரை.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்                -திருவள்ளுவர்        (056.03)

நாளும் நடப்பறிந்து நீதிசெய்யா மன்னவன்
நாடும் அழிந்து கெடும்                   - ந.உ.துரை.  

சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்
புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ ?

- மகா கவி சுப்பிரமணிய பாரதியார்

ந.உ. துரையின் தமிழ் உணர்வைத் தூண்டிவிட்ட அந்த நற்றமிழ்ப் புலவருக்கும், 

ந.உ. துரையைப் புவிக்கோளில் பிறப்பித்த பெற்றோருக்கும்
நல்வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்திடுவோம் !

0 comments:

Post a Comment

Kindly post a comment.