Friday, October 26, 2012

81 ஆண்டுகளுக்குப்பின் லாகூரில் தியாகி பகத்சிங் கெளரவிப்பு !


                                                  லாகூர் ஜெயிலில் பகத்சிங் 

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் ”ஷாட்மன் சதுக்கம்” உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பொதுவாழ்வு மற்றும் அரசியல் குழுக்கள், மேற்படி சதுக்கத்தைப் ”பகத்சிங் சதுக்கம்” என்று மாற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சதுக்கத்தில்தான் முன்னர் லாகூரின் மத்திய சிறை இருந்துள்ளது. பிரிஒட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சிறையில்தான் பகத்சிங், இராஜ குரு, சுகதேவ் ஆகிய மூவரும், 1931-ஆம் ஆண்டு மார்ச் 21-தேதி அன்று தூக்கிலிடப்பட்டனர்.                                                                    

                   பகத்சிங் சதுக்கம்

1961-ஆம் ஆண்டு அங்கிருந்த சிறைச்சாலை தகர்க்கப்பட்டு குடியிருப்பு வளாகமாக்கப்பட்டு, ஷாட்மன் சதுக்கம் என்று பெயரிடப்பட்டது.
தூக்கிலிடப்பட்ட விடுதலைப்போராட்ட வீரர்கள் நினைவாக ஆண்டுதோறும் பொதுவாழ்வுப் பிரமுகர்கள் அந்தச் சதுக்கத்தில் ஒளிவிடும் மெழுகு வர்த்திகளைக் கையில் ஏந்தி அஞ்சலி செலுத்தி வந்தனர். அவர்களே அந்த சதுக்கத்திற்குப் பன்முறை பகத்சிங் சதுக்கம் என்று பெயர்ப் பலகையை நட்டுள்ளனர். பன்முறை அரசிடம் கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

 பிரதமர் நவாஸ் ஷெரீப் மேற்கு பஞ்சாபில் ஆளுங்கட்சியாக இருந்தபோது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். பகத்சிங்கின் 105-வது பிறந்தநாளின் போது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

இந்த ஆண்டு செப்டம்பர் 18-ல் லாகூர் தயான் சிங் கல்லூரி அரங்கில் முதல் தடவையாக பகத்சிங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாக்கிஸ்தானின் தொழிலாளர் கட்சியும், 23 பிற அமைப்புக்களும் இணந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன..                       


விழாவில் பேசியவர்கள், “ ஆசியா முழுவதிலும் உள்ள போராடும் மக்களின் பிரதிநிதி பகத்சிங்” என்று புகழாரம் சூட்டினர். பெய்ஸ்லாபாத் மாவட்டத்தில் லயால்பூர் பங்கே பகுதியில் பகத்சிங் பிறந்த இடத்தில் ( சாக் எண் 105 ) ஓர் அரும் பொருட்காட்சிசாலை அமைத்திட வேண்டும் என்றும் விழா அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகத்சிங் பிறந்த இடத்தில் இப்பொழுது வசித்துவரும் இக்பால் என்பவரும் விழாவில் பங்குகொண்டு எல்லா ஒத்துழைப்பும் நல்கினார்.

ஆனால் இந்த விழாவில் பங்குபெற இந்தியாவிலிருந்து புறப்படுவதற்குத் தயாராக இருந்த 27 உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு விசா கிடைக்காமல் போனது வருத்தத்திற்குரியது. பகத்சிங்கின் உறவினர் கிரண்சித் சாந்துவும் குழுவில் இடம்பெற்றிருந்தார். லாகூர் செல்வதற்கு அனுமதி கிடைக்காமல் போனாலும் ”பகத்சிங் சதுக்கம்” என்று பெயரிடப்பட்டதை அறிந்து மேற்படிக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேற்படி குழுவில், பின்வருபவர்களும் இடம் பெற்றிருந்தனர்.  பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், ( பகத்சிங் பற்றி ‘அச்சமின்றி’ என்ற புத்தகம் எழுதியவர் ), ஓய்வு பெற்ற ஜஸ்டிஸ் ராஜீந்தர் சச்சார், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், பத்திரிக்கையாளரும், பகத்சிங்கைப் பற்றிப் பல புத்தகங்களை எழுதியவருமான சமன்லால், இந்தியா- பாகிஸ்தான் நட்புறவுக் கழக ஊழியர்கள், சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான பாகிஸ்தான் -இந்திய மக்கள் அரங்கு ஊழியர்கள், பகத்சிங்கின் குடும்ப உறுப்பினர்கள்.

நன்றி :- 03-10-2012 இந்து நாளிதழில் வந்த செய்தியை நமக்கு மொழியாக்கம் செய்து தந்தவர், இந்திய-சோவியத் நட்புறவுக் கழகத்தை சேர்ந்த முதுபெரும் தோழர்.வி.இராதாகிருஷ்ணன், ஜனசக்தியில் வெளிவந்தது..

 

0 comments:

Post a Comment

Kindly post a comment.