Saturday, October 20, 2012

விலைவாசி உயர்வால் இந்தியாவில் 80 லட்சம் பேர் வறுமையால் தவிப்பு: ஐ.நா. அமைப்பு தகவல் !


ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா, பசிபிக் கண்டங்களில் பொருளாதார மற்றும் சமுதாயக் கமிஷன் சமீபத்தில் நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் வேளாண்மை தொழில் சுருங்கிக் கொண்டே வருகிறது. மேலும் புறக்கணிக்கப்படுகிறது. அதே வேளையில் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு இதுவே மூலகாரணம். செழிப்பான விளை நிலங்களின் பற்றாக்குறை, உரங்களின் விலை உயர்வு, நீர் ஆதாரங்கள் குறைந்தது போன்றவை உணவுப் பொருள் உற்பத்தியை கடுமையாகப் பாதித்துள்ளது.

சீரான விநியோகம் செய்யத் திட்டம் தீட்டப்படாததும், யூக பேர வணிகமும் உணவுப் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர வைக்கின்றன. இது மக்களைப் பாதிக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் மதிப்பீட்டில் ஒரு குடும்பத்தின் 65 சதவீத வருமானம் உணவுக்காகவே செலவிடப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் மலிவான உணவுப் பொருட்களையே மக்கள் நாடுகின்றனர்.

இதர செலவுகளையும் சேமிப்பையும் குறைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தின் தாக்கம், இந்தியா, வங்காளதேசம் போன்ற நாட்டின் குழந்தைகள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 40 சதவீதம் குழந்தைகள் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களை வெகு சுலபமாக வாங்கும் வசதி படைத்தவர்கள் மத்தியில் அவற்றை வாங்கச் சக்தியின்றிப் பலர் வறுமையால் வாடுகின்றனர்.

இந்தியாவில் மட்டும் 80 லட்சம் மக்கள் வறுமை நிலையை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். உணவு கிடைக்காமல் கிராம மக்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.