Tuesday, October 16, 2012

ஒரு மத்திய அமைச்சருக்கு 71 லட்சம் என்பதெல்லாம் ஊழலா? 71 கோடி என்றால் கொஞ்சம் நம்பலாம். -பேனி பிரசாத் வர்மா !


ஊழலுக்கு இலக்கணம் வகுக்கும் காலக்கட்டம் !



மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு தன் ஆதரவைத் தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் பேனி பிரசாத் வர்மா, ரூ.71 லட்சம் மோசடி என்ற குற்றச்சாட்டெல்லாம் ஒரு மத்திய அமைச்சர் லெவலுக்கு மிகச் சிறிய தொகை; ஏதாவது நம்பும்படியாகக் குற்றச்சாட்டைச் சுமத்துங்கள் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான பேனி பிரசாத் வர்மா, தனது மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் குர்ஷித்துக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். அதே நேரம் அவர் கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ.71 லட்சம் என்பது மிகச் சிறிய தொகை. சல்மான் குர்ஷித்தைப் போன்ற ஒரு மனிதர், வெறும் ரூ.71 லட்சம் அளவுக்கு எந்த ஊழலையும் செய்ய வாய்ப்பில்லை. அது ஒரு ரூ.71 கோடி என்று சொல்லுங்கள்...! ஓரளவுக்கு நாம் நம்பலாம். இதை நான் மிகவும் சீரியஸாகவே சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஊழலுக்கு எதிரான இந்திய அமைப்பு என்ற நிலையில் இருந்து ஒரு அரசியல் வாதியாக அவதாரம் எடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கூறியுள்ள கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “அவர் ஒவ்வொரு நாளும் தெருமுனையில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் குலைக்கக் கூடாது” என்று கூறியுள்ளார் பேனி பிரசாத் வர்மா.

அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தும் சில புகைப்படங்களை ஆதாரமாக நேற்றுக் காட்டினார்கள். ஆனால், அவற்றை மறுத்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், அவை அனைத்தும் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்டவை என்று ஆதாரத்துடன் விளக்கினார்.

இருப்பினும், இந்த விவகாரத்துக்காகக் குர்ஷித் பதவி விலக வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சி தனது நிலையைத் தெளிவாக்கியுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, அரவிந்த் கேஜ்ரிவால் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பதிலளித்துள்ள குர்ஷித்தை நினைத்துப் பெருமைப் படுகிறோம்... என்று கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங்கோ ஒரு படி மேலே போய், குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மீதே ஒரு குற்றச் சாட்டை முன்வைத்தார்.

கடந்த 2010ம் ஆண்டில் என்னிடம் வந்த அரவிந்த் கேஜ்ரிவால், எனக்கு எப்படியாவது தேசிய ஆலோசனைக் கவுன்சிலில் ஒரு இடம் வாங்கித் தந்து என்னுடைய பெயரைப் பிரபலப்படுத்துங்களேன் என்று கெஞ்சினார் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

மேலும், அரசியலில் நிலவும் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்காகக் கேஜ்ரிவால் போடும் வேஷம் இது என்றும் கூறியுள்ளார். அடுத்து, வெறும் ஒரு 150 பேரைத் திரட்டிக் கொண்டு பார்லிமெண்ட் தெருவில் ஒரு கூட்டத்தைக் கூட்டி குற்றம் சாட்டுவதாலும், ஊடகத்தின் குற்றச்சாட்டுக்காகவும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை. எனவே சல்மான் குர்ஷித்தை ஏன் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடங்குளம் விவகாரத்தில், என்.ஜி.ஓ. அமைப்பு வைத்திருந்த காரணத்தாலேயே ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும், ஒவ்வொரு முறை விமான நிலையத்துக்கு வந்து விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் விமான நிலைய வாசலில் பத்திரிகையாளர்களைக் கூட்டிவைத்து உதயகுமாரை ஒரு பிடி பிடிக்கும் அமைச்சர் நாராயணசாமி, ஏனோ இந்த முறை அறக்கட்டளை என்ற பெயரில் முறைகேடுகள் செய்ததைப் பலமாக முன்வைத்த போதும் சல்மான் குர்ஷித் விவகாரத்தில் வாய் திறக்கவில்லை.  


  நன்றி :- தினமணி, 

 By செங்கோட்டை ஸ்ரீராம்

First Published : 15 October 2012 04:03 PM IST

0 comments:

Post a Comment

Kindly post a comment.