Tuesday, October 16, 2012

நெல்லையில் துப்பாக்கிக்கலாசாரம்! *266 பேருக்கு லைசென்ஸ் வழங்கல்: சமூக ஆர்வலர்கள் அச்சம்

நெல்லை மாநகரத்தில் 262 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்ட விவகாரம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கு அரசு பல்வேறு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தனி நபருக்குத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

லைசென்ஸ் துப்பாக்கி வாங்கும் நபர் மீது வழக்குகள் ஏதும் உள்ளதா, அவரது பின்னணி, கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறதா, சொத்து ஆவணங்கள், ஆடிட்டிங் ரிப்போர்ட் உட்பட பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.சம்பந்தப்பட்ட நபரின் எல்கைக்கு உட்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விசாரித்து உதவி கமிஷனர், துணை கமிஷனர் அறிக்கை அளித்த பின் கமிஷனரின் உத்தரவின் பேரில் விண்ணப்பித்த நபருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 36 பேருக்குப் புதிதாகத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வக்கீல் பிரம்மா கேட்ட தகவலின் அடிப்படையில், பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் 67, அரசு ஆஸ்பத்திரி ஸ்டேஷன் 19, பேட்டை 7, தச்சநல்லூர் 12, நெல்லை டவுன் 19, ஜங்ஷன் 32 என மொத்தம் 156 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாளை., மேலப்பாளையம் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் துப்பாக்கி லைசென்ஸ் எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்கப்படவில்லை.போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, பாளை., யில் 88 பேர், மேலப்பாளையத்தில் 22 பேர் என மொத்தம் மாநகரம் முழுவதும் 266 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாவட்டப்பகுதியில் இந்த ஆண்டு ஒரு நபருக்கு மட்டுமே துப்பாக்கி லைசென்ஸ் அளிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் ஒருவருக்கு லைசென்ஸ் அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நெல்லை மாநகர எல்லைக்குள் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 8 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் சம்பவ இடத்திற்கு அதிகபட்சம் அரைமணிநேரத்திற்குள் போலீசார் சென்று விடலாம். இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான நபர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுத்திருப்பது, எதிர்காலத்தில் தேவையற்ற பதட்டம், வன்முறைக்கு வித்திடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.


"பந்தா' பேர்வழிகள்:>நெல்லை மாநகரத்தில் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பவர்களில் சிலரை தவிர பெரும்பாலானோர் "பந்தா' காட்டுவதற்காகவே லைசென்ஸ் வாங்கி வைத்துள்ளனர். விஐபி.,என்றாலே துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். மற்றவர்களை மிரட்டுவதற்காக அல்லது துப்பாக்கி வைத்திருக்கிறேன் என மற்றவர்களிடம் காட்டுவதற்காக துப்பாக்கி வைத்துள்ளனர்.பொதுநிகழ்ச்சிக்கு செல்பவர்கள் துப்பாக்கி வெளியே தெரியும்படி வைத்து மற்றவர்களை மறைமுகமாக மிரட்டி தோரணை காட்டிய சம்பவங்களும் நடந்துள்ளது.

வக்கீல் பிரம்மா கூறுகையில், ""தென் மாவட்டங்களில் எங்கு ஜாதி,மத மோதல் நடந்தாலும் அதன் பாதிப்பை நெல்லையில் உணர முடியும். இந்தச் சூழ்நிலையில் நெல்லையில் 200க்கும் மேற்பட்டோருக்குத் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

துப்பாக்கி வழங்கப்பட்டுள்ள நபர்கள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றியே துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கவேண்டும். ''என்றார்.போலீஸ் தரப்பில் கேட்ட போது, ""துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லைசென்ஸ் தரப்படுகிறது. விதிமீறல் எதுவும் இல்லை'' என்றனர்.


 நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.