Tuesday, October 16, 2012

ஸ்காட்லாந்து - பிரிட்டனுடனான 300 ஆண்டுகால உறவு முறியுமா? வாக்கெடுப்பு நடத்திட முடிவு !

கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமான ஸ்காட்லாந்து, தனி நாடாகச் செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும், ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சல்மோண்டும் கையெழுத்திட உள்ளனர்.

ஸ்காட்லாந்தில் 50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு சல்மோன்ட் தலைமையிலான ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (எஸ்என்பி) ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தனி நாடாகப் பிரிந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால், பிரிட்டன் பிரதமர் கேமரூன் இதை விரும்பவில்லை. எனினும், இதுகுறித்துத் தொடர்ந்து பேச்சுவார்த்ததை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஸ்காட்லாந்துக்குச் சுதந்திரம் கொடுப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்துக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் வழங்க உள்ளனர். அதன்பிறகு இந்த வாக்கெடுப்பு நடைபெறும். இதுதொடர்பான படிவத்தில் ஆம்/இல்லை என்று பதில் அளிக்கக் கூடிய வகையில் கேள்விகள் இடம்பெறும்.

இதுகுறித்துக்  கேமரூன் கூறுகையில், ""பிரிட்டனுடன் இணைந்திருக்க விரும்புகிறார்களா அல்லது தனி நாடாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை ஸ்காட்லாந்து மக்களின் விருப்பத்துக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருப்பதை விரும்புகிறேன்'' என்றார்.

கேமரூன் தலைமையிலான பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள், தனது கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பிரிட்டனுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கு ஆதரவு குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் 28 சதவீதம் பேர் மட்டுமே தனி நாடாப் பிரிய ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து தனியாகப் பிரிய ஆதரவு கிடைத்தால் பிரிட்டனுடனான 300 ஆண்டுகால உறவு முறியும்.

கடந்த 1707ஆம் ஆண்டு இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் ஒன்றாக இணைந்தது. பின்னர் வேல்ஸ் இணைந்ததையடுத்து கிரேட் பிரிட்டனாக உருவெடுத்தது. ஐக்கியப் பேரரசு (யு.கே.), வடக்கு அயர்லாந்தையும் உள்ளடக்கியது ஆகும்.        

நன்றி :- By தினமணி, எடின்பர்க்

First Published : 16 October 2012 05:12 AM IST






0 comments:

Post a Comment

Kindly post a comment.