Friday, October 26, 2012

2013 முதல் தபால் துறையில் ஏடிஎம் சேவை: விமான முன்பதிவு வசதியும் தொடக்கம்

இந்தியத் தபால் துறையில் 2013ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வங்கித் துறையைப் போன்றே ஏடிஎம் சேவை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

÷இந்தியத் தபால் துறை "இந்தியா போஸ்ட்' என்ற பெயரில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தபால் நிலையங்கள் இத்துறையின் கீழ்  செயல்படுகின்றன. அவற்றில் 89 சதவீதம் வரையிலான தபால் நிலையங்கள் ஊரகப் பகுதிகளிலும், 11 சதவீதம் வரை நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சராசரியாக 7,144 பேருக்கு ஒரு தபால் நிலையம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

÷தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை நகர், கோவை மேற்கு, மதுரை தெற்கு, திருச்சி மத்திய மண்டலம் என 4 மண்டலங்களாகத் தபால் துறை பிரிக்கப்பட்டுள்ளது.

÷இந்தியத் தபால் துறை வழங்கி வரும் சேவைகளில் "சேமிப்புத் திட்டங்கள்' பொதுமக்களுக்கு அதிக பயன் அளிப்பவை. அவற்றில் சேமிப்புக் கணக்கு, மாத வருமான வைப்புக் கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

÷இந்தியா முழுவதும் பல கோடி மக்கள் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி, மேற்கூறப்பட்ட திட்டங்களின் கீழ் சேமித்துப் பயன்பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 76,773 சேமிப்புக் கணக்குகள் உள்ளன.

÷இருப்பினும் தபால் துறையைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், பணம் தேவை எனில் அதே கிளைக்கு சென்று மட்டுமே எடுக்க முடியும். இதுபோன்ற ஒருசில காரணங்களால் பொதுமக்கள் தற்போது தபால் நிலையங்களைத் தவிர்த்து வங்கிகளை நாடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

÷இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தபால் நிலையங்களில் வங்கிகளைப் போன்றே ஏடிஎம் சேவை வரும் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து கோவை தலைமைத் தபால் நிலைய முதுநிலைக் கண்காணிப்பாளர் குருநாதன் கூறியது:

÷இந்தியத் தபால் துறையை வங்கிகளோடு போட்டி போடும் அளவுக்கு உயர்த்தும் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. அதற்காகப் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வங்கிகளில் உள்ளது போல் தபால் துறையில் ஏடிஎம் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சேவையால் தபால் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர், எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும்.

÷அதற்காகத் தபால் துறையில் உள்ள சேமிப்புக் கணக்குகளைச் சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் நவம்பர் மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, அவை புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பிறகு அந்த தகவல்கள் புதுதில்லி தவிர இந்தியாவில் உள்ள மற்றொரு முக்கிய நகரத்தில் பதிவு செய்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் முதல் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முதலில் அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்படும் ஏடிஎம் சேவை, நாளடைவில் அனைத்து தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

விமான முன்பதிவு தொடக்கம்: தமிழகத்தில் உள்ள முக்கியத் தபால் நிலையங்களில் விரைவில் விமான பயணத்துக்கான முன்பதிவு மற்றும் பயணச்சீட்டுப்  பெறும் வசதி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

÷இது தொடர்பான கடிதங்கள் தற்போது அந்தந்த மாவட்டத் தலைமையகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் இந்த சேவையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் தலைமைத் தபால் நிலையம், ராம் நகர், ஆர்.எஸ்.புரம் ஆகிய தபால் நிலையங்களில் இந்த சேவை வரவுள்ளது.                                                  

நன்றி:- தினமணி, 26-10-2012

ஒவ்வொரு அஞ்சல் நிலையமும் வங்கிகளாக்கப் படவேண்டும் என்பது

பலரது ஈண்ட நாள் ஆசை. இது நிறை வேற்றப்பட்டால் அதிகமான நிர்வாகச்

செலவுகளை  ஏற்படுத்தும் அரசு வங்கிகளின் தேவைகள் குறையும்.

மீண்டும், அஞ்சல் சேவைகளிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டால்

கூரியர் நிறுவனங்களை மக்கள் நாடிச் செல்வது குறையும்.                            


0 comments:

Post a Comment

Kindly post a comment.