Wednesday, October 24, 2012

1991-ஆம் ஆண்டு :- ஈராக் தாக்குதல்-வி.பி.சிங் மந்திரிசபை கவிழ்ப்பு- ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு இழப்பு !

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலவராக  இராஜீவ் கந்தி இருந்த நேரம். அப்போது வி.பி.சிங் பாரதத்தின் பிரதமராக இருந்தார். அதுசமயம், ஈராக்கிற்கும், குவைத்துக்கும், செளதி அரேபியாவுக்கும் இடையில் தகராறு இருந்தது. ஈராக் குவைத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகக் கூறியதாலும். அதே மாதிரி அச்சத்தை செளதி அரேபியாவும் தெரிவித்ததோடு பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைகளை அந்த நாடுகள் அழைத்தன. இது போதாதா அமெரிக்காவிற்கு ? ஈராக் மீது கடுமையான விமானத் தாக்குதலைத் தொடங்கியது. மக்கள் வாழும் பகுதிகளையும், எண்ணெய்க் கிணறுகளையும் குறிவைத்துத் தாக்கியது. ஈராக் அதிபர் சதாம் உசேன் அரண்மனையும் தாக்கப்பட்டது. கடற்பரப்பில் வெடித்துப் பரவிய எண்ணெய் வளத்தை நாசப்படுத்திக் கடலில் வாழும் உயிரினங்களையும் சாகடித்துக் கொண்டிருந்தது.

இந்தியா அது பற்றி முதல் மூன்று நாட்கள் எதையும் சொல்லாது மெளனம் சாதித்தது,உலகில் எங்கு கலவரம் மூண்டாலும், தன் சமாதான அறைகூவலை வெளியிடுவதும், ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதும் இந்தியாவின் வழக்கம். ஆனால் வி.பி.சிங் தலைமையிலான மந்திரிசபை மெளனமாக இருந்தது. எனவே, போர் தொடங்கிய இரண்டாம் நாள் எதிர்க்கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி எழுந்து, இந்திய அரசு ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல் குறித்துத் தன் கருத்தைத் தெரிவிக்கும் படியும், மெளனத்தைக் கலைக்கும் படியும் கேட்டார். “இந்திய மக்களைக் காப்பாற்ற இந்திய விமானங்களை அனுப்பி, அவர்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் ” எனவும் கேட்டார்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அமைச்சர் ஆரிப்கான் அறிவித்தார். அப்பொழுது 320 ரக ஜெட் விமானங்களை, ராஜீவ் காலத்தில்வாங்கியதில் தவறு நடந்துவிட்டதாகவும், அது விபத்துக்குள்ளாகிறது என்றும் கூறி, 320 ரக விமானங்களைப் பறக்க விடாமல், பயன்படுத்தப்படாமல் விட்டு விட்டார்கள். இவ்வாறு விமானங்களை ஓட்டாததால் நாட்டிற்கு ஏறத்தாழ 1200 கோடி நட்டம் என்றும் கணக்கிட்டது. தொழில் நுட்பக் குழு 320 ரக விமானங்கள் மிகச் சிறந்தவை என்றும், போதிய பயிற்சி அற்ற விமானிகள் ஓட்டியதாலேயே இரு விபத்துக்கள் ஏற்பட்டன என்றும் கூறியது. இது குறித்து விவாதம் நடத்திடக் கோரினார், ராஜீவ் காந்தி. ஆளுங்கட்சி மறுத்துவிட்டது.

மூன்றாம் நாள், ஈராக் மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா ? எதுவும் சொல்ல மாட்டீர்களா? எனக் கேட்ட ராஜீவ் காந்தி, இந்தியாவின் குடிமகன் என்ற முறையில் ஈராக், குவைத், செளதி அரேபியா நாடுகளுக்குப் போய் மக்களைச் சந்தித்து, இந்திய மக்களின் கவலைகளைத் தெரிவிக்கப் போகிறேன். இதற்கு அரசுக்கு ஆட்சேபணை உண்டா ? என்று கேட்டார். இந்திய மக்களை, விமானம் மூலம் கொண்டு வருவதற்கு 800 கோடி செலவாகும் போல இருக்கிறதே என்ற பதில் மட்டும் வந்தது.

ஒரு வாரத்திற்குள் ராஜீவ் காந்தி குண்டு வீச்சுக்கு ஆளான நாடுகளைப் பார்க்கப் புறப்பட்டார். ஈராக் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே, குவைத், செளதி அரேபியா போகாமல் பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு மட்டும் போய்விட்டுத் திரும்பினார். சென்ற இடமெல்லாம், ஒரு பிரதமருக்குத் தரப்படும் வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது.

 அவர் திரும்பியவுடன் யாசர் அராபத்திடமிருந்து ஒரு தகவல் வந்திருந்ததைக் கூறினார். ஈராக் விவகாரத்தில் ராஜீவ் காந்தி எடுத்த நடவடிக்கைகள், மேற்கொண்ட பயணம் காரணமாக, ஒரு வல்லரசின் ரகசிய இலாகா, அவரைத் தீர்த்துக் கட்டிவிட இறுதித் திட்டம் தீட்டிக் ம்கொண்டிருப்பதாகவும், எனவே ராஜீவ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் அராபத் அனுப்பிய தகவல். ரசஜீவ் கொல்லப்பட்டபின், இறுதி மரியாதை செலுத்த டில்லிக்கு வந்த யாசர் அராபத், இந்தத் தகவலை தான் பல மாதங்களுக்கு முன்னரே சொன்னதாகப் பத்திரிக்கைகளுக்குச் சொன்னார்.

இந்த எச்சரிக்கை பற்ரி உரிய கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியபோது, ராஜீவ் காந்தி, சிறிதும் சலனமின்றிச் சொன்னார். “ துப்பாக்கிக் குண்டு ஊடுருவாத சட்டையைப் போட்டு இருக்கிறேன். மேடையில் பேசும்போது, குடு ஊடுருவாத கண்னாடி வலைக்குள் நின்றுதான் பேசுகிறேன். ஆனால், தலையை எப்படி மூடுவது ? நெற்றியையும், கண்களையும், வாயையும் எதைக் கொண்டு மூடுவது ? நெஞ்சில், உடம்பில் குண்டு துளைக்காமல் பாதுகாக்க முயற்சிக்கலாம்.                                 
தலைதானே முக்கியம். அதற்கு ஏது பாதுகாப்பு ? எனவே, அஞ்சி அஞ்சி வாழ்ந்து பயனில்லை. நாம் செய்வதை, செய்ய வேண்டியதையும் செய்ய வேண்டியதுதான். பிறகு வருவது வரட்டும் “ என்றார்.


1991 நவம்பர் 7-ஆம் நாளன்று வி.பி.சிங் மந்திரிசபை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் தொடங்கியது. அவர் மீது மரியாதையும், அனுதாபமும் இருந்தாலும், கட்சிவாரியாக வாக்குச் சீட்டைக் கூட்டிப் பார்த்தால், வி.பி.சிங். வீழ்வது உறுதி என்று ஆகிவிட்டது.

மந்திரிசபை கவிழும் என்று தெரிந்திருந்தும், வி.பி.சிங். ஆற்றிய உரை தா.பா.வை மகிழ்வித்ததாகக் கூறுகின்றார்

.”விண்வெளியில் கலத்தை அனுப்ப இரண்டு, மூன்று ராக்கட் ஏவு கணைகள் பயன்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்டதூரம் பறந்தவுடன், அடுத்த ராக்கட்டை ஏவிவிட்டு, எரிந்த ராக்கட் விழுந்துவிடும். கலத்தை விடுவதுதான் ராக்கட்டின் வேலை. அது எரிந்து விழ வேண்டியதும் தவிர்க்க முடியாதது. அந்த முறையில், மண்டல் கமிஷன் என்ற கலத்தைப் பறக்க ஏவி விட்டபின்னர், வி.பி.சிங். ராக்கட் எரிந்து விழத்தானே வேண்டும்” என்றார்.

 தா.பா. பலகையைத் தட்டிப் பாராட்டியதாகவும், வீரனாக, வி.பி.சிங். வீழ்ந்ததாகவும் தா.பாண்டியன் குறிப்பிடுகின்றார். 

ஆனால், அதே வி.பி.சிங்கிடம், அவருக்குப் பதிலாக ஜோதிபாசு வருவதாக இருந்தால் ஆதரவு தர விரும்புகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. தெரிவிக்கப்பட்டு இருந்தால், சிங் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய அரசியல்வாதிதான்.

ஆனால், மார்க்ஸிஸ்டுக் கட்சி காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கண்ணாடியைக் கழற்றாமலேயே பார்த்ததால் அது நடக்கவில்லை. ஒரு கம்யூனிஸ்டு இந்தியாவின் பிரதமராக வருவதைப் பூர்சுவா கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா ? அமெரிக்கா அனுமதிக்குமா ? என்ற சூத்திர வாதங்கள்தான் நடந்தன.


பின்னர் தேவகெளடா மந்திரிசபையை மாற்ற வேண்டிய நிலை வந்தபோதும், ஜோதிபாசு பெயர் முன்மொழியப்பட்டது. அதைச் சகல கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. அரசியல் தலைமைக் குழுவிலிருந்த நான்கு மார்க்ஸிஸ்டுக் கட்சித் தலைவர்கள்தான் அதைத் தடுத்தனர். அரிய வாய்ப்பைக் கெடுத்தனர். இதை இன்று நாடறியும்.

இது பதவி ஆசையில் வந்தது இல்லை. அரசியல் கடமையில் சந்தர்ப்பம் வந்தபோது தவறவிட்ட இமாலயத் தவறு என்பதைச் சுட்டிக் காட்டாமல் எப்படி விட முடியும். ஜோதிபாசுவே, வரலாற்றில் பெரும் தவறு என்று கூறி விட்டார்.

இந்தியாவைப் புரிந்து கொண்டிருந்தால், மக்களோடு சேர்ந்து சிந்திக்கப் பழகினால், இத்தகைய தவறுகள் நிகழாது. என்று விவரிக்கின்றார், தா.பாண்டியன். 
                                                                                                                  


தகவல்கள் உதவி :- ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்-தா.பாண்டியன்

நிவேதிதா பதிப்பகம், அசோக் நகர், சென்னை-600 083.

2002 ஆம் ஆண்டு முதல் பதிப்பு. விலை ரூபாய் 35/-
0 comments:

Post a Comment

Kindly post a comment.