Wednesday, October 24, 2012

மண்டல் கமிஷன் வரலாற்றை ராஜீவிற்கு விளக்குகின்றார், தா.பாண்டியன், எம்.பி. UCPI.


மண்டல் கமிஷனைப் பற்றி நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி பேசி முடித்த மறுநாள், அவரிடமிருந்து,  மாலை வேளையில் தா.பாண்டியனுக்கு அழைப்பு வந்தது. அவர் போய்ச் சேர்வதற்குள் விவாதமும் தொடங்கிவிட்டது. அவர் அமர்வதற்கு அங்கே நாற்காலியும் இல்லை. ராஜீவ் காந்தி , தா.பாண்டியனின் கையைப் பிடித்து இழுத்து தான் உட்கார்ந்திருந்த சோபாவின் கைப்பிடியின் மீது அமருமாறு சொன்னார். ஆனால், அதனைத் தா.பாண்டியன் ஏற்கவில்லை. பக்கத்தில் நெருக்கியடித்துக் கொண்டு அடுத்த நாற்காலியில் அமர்ந்தார். விவாதம், மண்டல் கமிஷன்  பரிந்துரை பற்றியும், ராஜீவ் காந்தியின் விரிவான உரைபற்றியும், பாராட்டியும்  புகழ்ந்தும் போட்டிபோட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். எல்லோரும் பேசி முடித்தபின், ராஜீவ் காந்தி, பாண்டியனின் கருத்ததைக் கேட்டார். “என்னை மன்னிக்க வேண்டும். நான் முற்றிலுமாக மாறுபடுகிறேன். கசப்பான உண்மைகளைச் சொல்கிறேன். கேட்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என்றார். ராஜீவ் பரபரப்படந்தார். தயக்கம் இல்லாமல் “சொல்லுங்கள். நாந்தானே விரும்பிக் கேட்கிறேன் “ என்று சொன்னார்.

“ நீங்கள் மண்டல் குழுவின் பரிந்துரைகளை எதிர்த்தும் கண்டித்தும் பேசியது தவறு” என்று பேசத் துவங்கினார் தா.பாண்டியன். “ எதிர்க்கவில்லை; குறைகளைத்தான் சுட்டிக் காட்டினேன்” என்றார், ராஜீவ். “அதற்கு என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தீனீர்கள் என்பதைவிடப் பேச்சைக் கேட்டவர்கள் எந்த மாதிரி புரிந்து கொண்டு திரும்பினார்கள் என்பது முக்கியம். எனவே மிக அக்கறையுடன் கேட்ட தா.பா. “ மண்டல் குழுவின் பரிந்துரைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றே பட்டது “ என்றார்.. ேலும் நிறுத்தாமல் பதில் சொல்லவும் தொடங்கினார்.

”மண்டல் குழுவிற்கு ஒரு வரலாறு உண்டு.அந்தக் குழுவை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டவர்,மொரார்ஜி தேசாய்தான். ஆனால் மண்டல் தனது விசாரணையை முடித்து அறிக்கையை தயாரிப்பதற்குள் மொரார்ஜி தேசாயின் மந்திரி சபை கவிழ்ந்துவிட்டது. அந்தக் குழுவிற்குக் கொடுக்கப்பட்டிருந்த காலவரம்பும் காலாவதியாகிவிட்டது. ஆனால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த உங்கள் அம்மா இந்திரா காந்தியார், மண்டல் குழு மேலும் தொடர்ந்து இயங்க கால அவகாசம் கொடுத்து மறு உத்தரவு போட்டார். பின்னர், மண்டல் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தபோது, பெற்றுக் கொண்டவர் பிரதமராக இருந்த உங்கள் அம்மா இந்திரா காந்தியார்தான். அந்தக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர் வைத்தபோது அது ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுதான் நடந்த வரலாறு. உங்கள் தாயால், அன்றையப் பிரதமரால் அங்கீகரிக்கப்பட்ட குழுவையும்,  அவரால் ஏற்கப்பட்ட அறிக்கையையும் ,உங்கள் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏகமனதாக ஒப்புக்கொண்ட பின்னர் 10 ஆண்டுகள்பத்திரமாக வைத்திருந்துவிட்டு, இப்பொழுது அதை எதிர்த்துப் பத்தாண்டுகளுக்குப் பிறகு பேசுகிறீர்களே, இது நியாயமா ? “ எனக் கேட்டார், தா,பாண்டியன்,

இந்திய நாட்டின் முதல் அரசியல் சட்ட திருத்தமே , இட ஒதுக்கீடுக்காகத்தான் வந்தது என்பதையும், அதைக் கொண்டுவர ஒப்புக் கொண்டவர் உங்கள் தாத்தா நேருதான் என்பதையும் மறந்து விடாதீர்கள் ” எடுத்துரத்தார், தா.பாண்டியன்.இந்தப் பேச்சின் போது அப்துல் சமதும் உடன் இருந்தார். பாராட்டினார்.

இதைக் கேட்ட இராஜீவ் மிகவும் அதிர்ச்சி அடைந்தவராக தவறு நடந்து விட்டதே என முணுமுணுத்தார். வெளியே வந்தபோது நரசிம்மராவ், “நல்ல முறையில் செய்தாய்” என த.பாண்டியனைப் பாராட்டினார். த.பா. அவருக்கு நன்றி ம்கூறிவிட்டு “ உங்களைப் போன்ற மூத்த தலைவர்கள் இத ஏன் சொல்லக்கூடாது?” என்று கேட்டபோது “எங்கள் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள உனக்கு வயது போதாது ” எனக் கூறிவிட்டுப் போய் விட்டார்.                                              

இந்தியாவின் முதல் பிரதமரின் பேரன் நான். முதல் இந்தியப் பெண் பிரதமரின் மகன் நான். மிகக் குறந்த வயதில் ஒரு பெரும் நாட்டின் பிரதமராக ஆனவன் நான். இன்றைக்கும் ஒரு பெரும் கட்சியின் தலைவன் நான். என்று அகங்காரம் எதுவும் இல்லாமல், என் தயவில் இடம்பெற்ரு, என் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு வ்பெற்றி பெற்ர நீயா பேசுகிறாய் ? என்று இளப்பச்மாக நினைக்காமல், அகம்பாவமாகப் பார்க்காமல், விமர்சனத்தை ஏற்கின்ற முதிர்ந்த பண்பினை ஏற்றுப் பக்குவத்தோடு வளர்ந்து கொண்டிருந்த ஒரு நல்ல தலைவரை நன்றி கெட்ட அநாகரீகக் கும்பல் கூட்டம் கொன்றுவிட்டதே என்ற கவலைதான் இந்தச் சம்பவங்களை ம்ன்நினைக்கும் தோறும் வருகின்றது. 


தகவல் உதவி :- ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்-தா.பாண்டியன்

நிவேதிதா பதிப்பகம், சென்னை-600 083 விலை ரூ.35/- 2002 வெளியீடு


0 comments:

Post a Comment

Kindly post a comment.