Tuesday, September 25, 2012

தாய்மொழிக் கல்விதான் சாதனைகளுக்கு அடிப்படை விஞ்ஞானி ந.வளர்மதி பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் . கே.வைத்தியநாதன் !


தாய்மொழியில் கல்வி பயின்றால் தான் அடிப்படை அறிவியலைப் புரிந்து படிக்கவும், சாதிக்கவும் முடியும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

அண்மையில் ரிசாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இதன் திட்ட இயக்குநரான அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதிக்கு மக்கள் மன்றம் சார்பில் பாராட்டு விழா அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு விழாக்குழுத் தலைவரும், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்குழுத் தலைவருமான   
சீ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை அருட்சகோதரி வி. பாத்திமா முன்னிலை வகித்தார்.
"அச்சமில்லை' மாத இதழின் ஆசிரியரும், விழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான ந. இறைவன் அறிமுகவுரையாற்றினார். 
விழாவில், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய சிறப்புரை: தமிழ்மொழியைப் பாடமாக எடுத்துப் படித்தவர் வளர்மதி என  முனைவர் இராமசாமி குறிப்பிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, அவரும் தமிழ் வழியில் படித்தவர்தான் என்பதைத் தெரிவித்தார். 
 1975-ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் படித்த பெரும்பாலானோர் பள்ளி இறுதிப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள்தான். 
பட்டணத்தில் படித்தால்தான் சாதனைகள் படைக்க முடியும் என்ற ஒரு மாயை எல்லோரிடமும் உள்ளது. உலக அளவிலும், இந்திய அளவிலும் சாதனை படைத்தவர்கள் யாரும் பட்டணத்தில் படித்தவர்கள் அல்லர் என்பதுதான் வேடிக்கை. 
உதாரணமாக, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று தேடிப் பிடித்துப் பதிப்பித்த உ.வே.சா. உத்தமதானபுரத்தைச் சேர்ந்தவர். பாரதி எட்டயபுரத்துக்காரர். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, அண்ணா உட்பட யாரும் பட்டணத்தில் பிறந்தவர்கள் அல்லர். 
அரியலூரில் படித்தவராலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துள்ளார் இஸ்ரோ பெண் விஞ்ஞானி முனைவர் ந.வளர்மதி.
படிப்பவர்களில் இரு பிரிவினர் உண்டு. ஒருவர் சாதனை படைக்கப் படிப்பவர். மற்றொருவர் பணம் சம்பாதிக்க படிப்பவர். சென்னையில் படித்தால் பணம்தான் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிக்க நூறாயிரம் வழிகள் உள்ளன.  
நாம் வாழும் இந்தச் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணினால்தான் இங்கு ஏராளமான வளர்மதிகள் உருவாக முடியும். எனவே, பட்டணத்தில் படிக்கவில்லையே என இங்கே குழுமியிருக்கும் மாணவ, மாணவியர் கவலைப்படத் தேவையில்லை. 
கடந்த 15,16 தேதிகளில் தில்லியில் தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டைத் தில்லித் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து தினமணி சார்பில் நடத்தினோம். அதில் அனைவரும் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். 
தமிழ்நாட்டு மக்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வீட்டில் தமிழில் பேச வேண்டும் என்பதற்காக மாநாடு கூட்டித் தீர்மானம் போட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதற்கு நாம் எல்லோரும் வருந்த வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழுக்கு ஆபத்து.  

தமிழில் படித்த ஒருவர் விண்ணில் விந்தைகள் செய்து சாதனை படைத்துள்ளார். தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது; சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்பது நான் அரியலூருக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்டுள்ள பல்வேறு செயற்கைக்கோள்கள் விவசாயிகளுக்குத் தேவையான புதிய தகவல்களை அளிக்கிறது. பருவநிலை மாற்றம், வேளாண் குறிப்புகள் என விவசாயிகளுக்குத் தேவையான அரிய, பெரிய தகவல்களை அளித்து வருகிறது இஸ்ரோ. 
இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து விட்டு இங்கு வந்து அமர்ந்துள்ளார் வளர்மதி. பெண்களால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு வளர்மதி மூலமாக அரியலூர் பதில் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று ஒரு சாதனைப் பெண் இருந்துவிட்டால் பெண் அடிமைத்தனம் தானாகவே ஒழிந்து விடும்.
 
முனைவர் இராமசாமி குறிப்பிட்டது போல் அடிப்படைக் கல்வி சரியாக அமைந்து விட்டால், புரிந்துணர்வுடன் கூடிய கல்வியைப் பெற்று விட்டால், எத்தகைய அறிவியல் சாதனையையும் படைக்க முடியும். அதற்கு அடிப்படையில் தாய்மொழியில் கல்வி அவசியம். பள்ளிக் கல்வி தாய்மொழியில்தான் அமைய வேண்டும். 
விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் விண்ணும், மண்ணும் போற்றும் வகையில் வளர்மதி சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார், தினமணி ஆசிரியர், கே.வைத்தியநாதன்.. 
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் 
க. இராமசாமி பேசியது: 

உலகிலேயே ஆதி மண் என்ற பெருமை அரியலூரையே சேரும். இங்கு பெருமளவு கிடைக்கும் டைனோசர் முட்டைகள் இதற்குச் சாட்சிகளாக உள்ளன. உலகத் தொல்லுயிர்களின் கோட்டை என்று உலக வரலாற்றில் அரியலூர் மெச்சப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட தொல்லுயிர்களின் எச்சம் இங்கு கிடைத்துள்ளன. இங்கு இன்னும் நிறையத் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 
11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் ராஜேந்திர சோழன் தொடங்கி, இன்று வரை அரியலூருக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு, பெருமைமிகு மனிதர்களைத் தந்த பூமி. தமிழ்த்தாத்தா உ.வே.சா., நீண்ட காலம் வாழ்ந்த பகுதி இது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான சி. ரங்கராஜன், முன்னாள் துணைவேந்தர் பொற்கோ உள்பட அறிஞர்கள் பலரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே. 
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்புகளுக்கெல்லாம் மகுடம் சேர்த்ததுபோல் இந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந. வளர்மதி விளங்குகிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க பல வீடுகளில் அனுமதி கிடையாது. இந்த பின்னணியில் பின்தங்கிய இந்தப் பகுதியிலிருந்து உலக அளவில் கொண்டாடும் அறிவியல் விஞ்ஞானியாக வளர்மதி உருவெடுத்துள்ளார். இவருக்கு நோபல் பரிசு கிடைக்கும். 
தினமணிக்குப் பாராட்டு: ஒரு பல்கலைக்கழகம் அல்லது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தினமணி செய்து முடித்துள்ளது. தில்லியில் அண்மையில் 105 தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து அகில இந்திய அளவிலான மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தப் பெருமை அதன் ஆசிரியரையே சாரும். 
தொடக்க நிலையிலேயே குழந்தைகள் ஆங்கில வழியில் கல்வி பயில்வது இரண்டும்கெட்டான் நிலையை உருவாக்குகிறது. தொடக்கக் கல்வியை தமிழில் பயின்று, 6-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக கற்றால் அது நன்மை தரும் என்றார்.  
நினைவுப் பரிசுகளை அரியலூர் மகளிர் மன்றத் தலைவர் அனுராதா பார்த்தசாரதி வழங்கினார். 
விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதிவிழாக் குழுச்  செயலரும்,   மொழியியல் ஆய்வாளருமான  முனைவர்    ம.சோ. விக்டர் வரவேற்றார். அரியலூர் வணிகர் சங்கத் தலைவர் பெ. தங்கவேல் விழாவைத் தொகுத்து வழங்கினார். அரியலூர் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் இல. தியாகராஜன் நன்றி கூறினார்.


பெண் படித்தால் குடும்பமே முன்னேறும்

 இஸ்ரோ பெண் விஞ்ஞானி முனைவர் ந.வளர்மதி. விழாவில்  வழங்கிய ஏற்புரை:
1975-ல் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, இதே மேடையில் ஏராளமான பரிசுகளை வாங்கி இருக்கிறேன். இப்போது, அந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறேன். 
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே நன்றாக முன்னேறும். படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நான் அப்படித்தான் படித்தேன். என்னுடைய இளநிலைப் பொறியியல் பட்டத்தைக் கோவையிலும், முதுநிலைப் பொறியியல் பட்டத்தைச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்றேன். 
அரியலூரில் இருந்து கல்லூரியில் படிப்பதற்காகவே வெளியூருக்குச் சென்ற எனக்கு அங்கு கண்ட அனைத்துமே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பல மொழிகள் பேசும் மாணவர்களைப் பார்த்து எனக்கு அச்சமாக இருந்தது. ஆனாலும், தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு படித்தேன். 
நான் படிக்கும் போது எனது தாய், தந்தையரும், பணிக்குச் சென்ற பிறகு எனது கணவர் மற்றும் குழந்தைகளும் எனது பணியைப் புரிந்து கொண்டு ஒத்துழைத்தனர். 
1992-ம் ஆண்டில் இன்சாட் - 2ஏ திட்டத்தில் நான் பணியாற்றினேன். பிரெஞ்சு கயனாவில் 40 நாள்கள் தங்கியிருந்து பணிபுரிந்தேன். அதேபோன்று 1995-ல் ஐஆர்எஸ் 1சி செயற்கைக்கோள் வடிவமைப்புக்காக ரஷியாவில் 40 நாட்கள் தங்கியிருந்தேன். 1997-ல் பிஎஸ்எல்வி - சி1 மூலம் ஐஆர்எஸ் -1டி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. 
ஓய்வில்லாமல் உழைத்தேன்; அதற்காக வருத்தப்படவில்லை. எதையும் மனம் ஒன்றிச் செய்தால் அதில் நூறு சதவீதம் வெற்றி கிடைக்கும். மாணவ, மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்: நிறைய மதிப்பெண்கள் பெற நன்கு படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும். பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். 
 போட்டிகள் நிறைந்த உலகில் ஜெயிக்க வேண்டுமானால் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் சாதனைகள் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்றார் இஸ்ரோ விஞானி முனைவர் வளர்மதி.


நன்றி ;- தினமணி 24 Sep 2012 01:07:47 AM IST 

0 comments:

Post a Comment

Kindly post a comment.