Tuesday, September 25, 2012

தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழகம் முதலிடம்: தமிழகத்தில் 170 இடங்களில் ஆய்வு !

 
 இந்தியாவில் தமிழகம் மட்டும்தான் 170 இடங்களில் தொல் பொருள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பண்டைய வரலாற்றுத் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் சா.குருமூர்த்தி தெரிவித்தார்.

ஆலம்பரைக் கோட்டை பற்றிய "தொல்பொருட்களின் கண்காட்சி' எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின், தொல்லியல் துறையில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பண்டைய வரலாற்றுத் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் சா.குருமூர்த்தி தொடங்கிவைத்து பேசியது:

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே, 170 இடங்களில் அகழ்வாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அகழ்வாய்வுகள் மூலமாக அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, நாகரிகம், வழிபாடுகள் குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்காகத்தான் இந்திய தொல்லியல் துறை 1863-ம் ஆண்டிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1963-ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது. நாணயங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் அரசர்களின் வரலாறு பற்றியும், கல்வெட்டுகள் மூலம் கட்டடக்கலை, ஓவியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அகழ்வாய்வுகளால்தான், தொல் தமிழர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும், அவர்கள் வாணிபம் செய்தது குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும், வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப்பட வேண்டியவை. ஆனால், தற்போது அவ்வாறு செய்வதில்லை என்றார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் வசந்தி கூறியது: ஆலம்பரைக் கோட்டை புதுச்சேரி செல்லும் வழியில், கடப்பாக்கம் அருகில் உள்ளது. கி.பி.17-18ம் நூற்றாண்டுகளில் முகம்மதியர்களால் கட்டப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் ஆலம்பரை சிறந்த வாணிகத் துறைமுகமாக விளங்கியுள்ளது. ஆலம்பரை ஊரைச் சுற்றி களஆய்வு மேற்கொண்டபோது, அரிய தொல் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அதைத்தான் தற்போது கண்காட்சிக்காக வைத்துள்ளோம்.

செப்.24 (திங்கள்கிழமை) தொடங்கி செப். 28 வரை இந்தக் கண்காட்சி நடத்தப்படும். அழகன்குளம், ஆதங்கப்பள்ளி உட்பட ஐந்து இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

இந்தக் கண்காட்சியில், பானைஓடுகள், பீங்கான் ஓடுகள், பீரங்கி கல் குண்டுகள், கண்ணாடித்துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை மீனாட்சி கல்லூரி தொல்லியல் துறை மாணவிகள் பார்வையிட்டனர்.

நன்றி ;- தினமணி, 25 Sep 2012 02:23:45 AM IST

0 comments:

Post a Comment

Kindly post a comment.