Tuesday, September 25, 2012

பள்ளிக்கூடத்தில் சொல்லப்படாத வரலாறுகள்...தியாகி ஐ.மாயாண்டி பாரதி


    பரிசைப் பெற்றுக் கொள்பவர்,   தியாகி  ஐ. மாயாண்டி பாரதி
             
இந்திய விடுதலைப் போராட்டம் வெறும் அகிம்சைப் போராட்டமல்ல; இந்திய விடுதலை அதனால் மட்டும் கிடைத்ததல்ல; எண்ணற்ற வீரர்களும் வீராங்கனைகளும் மக்கள் திரளும் செய்த தியாகத்தினாலும் நடத்திய வீர தீரப் போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் ஆயுதமேந்தியப் புரட்சிகளாலும்தான்.

இதைச் சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்ட, இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிற தியாகி ஐ.மாயாண்டிபாரதி தம்முடைய பாணியில் இன்றைய இளம் தலைமுறைக்கு மட்டுமல்லாது

50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் நினைவூட்டும் வகையிலே உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறார்.

"50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கட்டாயம் தெரிந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை எல்லாம் தெரிந்திருக்கிறார்களா?" என்று கேட்கிறார்.

அவரே பதில் கூறுகிறார். "ஆம்... அறிந்திருக்கிறார்கள்... மேம்போக்காக... அங்கொன்றும் இங்கொன்றுமாக. காரணம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கவில்லை."

அப்படிச் சொல்லிக் கொடுக்காத நிகழ்வுகளை எல்லாம் ஐ.மா.பா, தனது "விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும்" நூலில் எடுத்துரைத்திருக்கிறார்.

1757 பிளாசிப் போர்இந்தியாவில் பிரிட்டிஷார் தங்கள் ஆட்சியை நிலைப்படுத்த உதவியது. சரியாக நூறாண்டு கழித்து 1857ல் முதல் சுதந்திரப் போர் நிகழ்ந்தது. தோற்றது. எனினும் பற்பல எழுச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் சரஞ்சரமாய் ஒன்றன்பின் ஒன்றாய் நாடு முழுவதும் நடந்தன.

வழக்கமாக வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறப்படுபவர்களால் எழுதப்பட்ட ஒரு சார்பு வரலாறாக இல்லாமல் சாதாரண மக்கள் முதல் பாளையக்காரர்கள் வரை, பகத்சிங் முதல் பல்வேறு புரட்சிக்காரர்கள் வரை பங்கேற்ற போராட்டங்கள் பற்றி எளிமையாக, ஆனால் வலிமையாக சுருக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கத் தொடுத்த சதி வழக்குகள் என 36 வழக்குகளைப் பட்டியல் இட்டிருக்கிறார்.

கலை -இலக்கிய உலகில் நடந்த எதிர்ப்புகளை குறிப்பாக விஸ்வநாததாஸ் பற்றிய நிகழ்வு மூலம் விளக்குகிறார். அவர் வள்ளி திருமண நாடகத்தில் முருகனாக நடித்துக்கொண்டு பாடும் ‘கொக்கு பறக்குதடி பாப்பா' பாடலை முழுமையாகத் தந்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களை குறிப்பிட்டிருக்கிறார். சென்னை சதி வழக்கு பற்றி விவரித்திருக்கிறார். சிங்காரவேலர், ஜீவா, பி.ராமமூர்த்தி போன்றவர்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவில் புரட்சி நடத்திய மாமேதை லெனின் , இரண்டாம் உலகப் போர் காலத்தில் உலகையே ஹிட்லரிடமிருந்து காப்பாற்றிய சோவியத் நாட்டை ஆண்ட ஜோசப் ஸ்டாலின், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான அந்த ஆட்சி உலக நாடுகளின் சுதந்திரத்துக்கு வித்திட்டதுபற்றி எல்லாம் எடுத்துரைக்கிறார்.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், அதன் பெண்கள் பிரிவுத் தலைவி கேப்டன் லட்சுமி, அவர்களது போராட்டம், அதன் தோல்விக்குப்பிறகு போடப்பட்ட வழக்கை எதிர்த்த போராட்டம், 1946 - கப்பற்படை எழுச்சி, அதன் பிறகு பிரிட்டனில் ஏற்பட்ட ஆட்சியாளர்களின் தற்காப்பு மனோநிலை, இதன் விளைவாகவே 1948ல் வழங்கப்படுவதாக இருந்த சுதந்திரம் 1947ல் இந்தியாவுக்குக் கிடைத்தது. ஒரு வருடத்துக்கு முன்பே பழம் பழுக்கக் காரணம் என்ன? என்று அவரது அர்த்தப்பூர்வமான எளிமையான கேள்வி நமக்கு ஆயிரமாயிரமாய் உணர்த்துகிறது.

பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் இந்திய சுதந்திரத்தின் நோக்கம் என்ன? அதன் நிலைமை எப்படி உள்ளது? எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் அழகாகச் சுருக்கமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் உரைத்திருக்கிறார்.

எண்பது பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதும் ஆர்ட் பேப்பரில் பொருத்தமான படங்களுடன் இளைய தலைமுறைக்கு மனதில் பசுமரத்தாணி போல் பதிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

விடுதலைப்போரில் வெடிகுண்டுகளும் வீரத்தியாகங்களும்

ஆசிரியர் : ஐ.மாயாண்டிபாரதி

வெளியீடு: பாரதி பதிப்பகம்,

பாரத மாதா இல்லம், காக்காதோப்புத்தெரு,

மதுரை - 625 001

கைபேசி - 99449 91949

பக்கம் - 80, விலை - ரூ.50/-

நன்றி;- தீக்கதிர் நாளிதழ்

0 comments:

Post a Comment

Kindly post a comment.