Tuesday, September 25, 2012

வேண்டாம் இனி சலுகைகளும் மானியமும் -எஸ்.ஸ்ரீதுரை, வேலூர்பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் - ""இன்று எது உன்னுடையதாக நினைக்கிறாயோ நாளை அது வேறொருவருடையதாகிறது...''

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பகவான் கூறியது இன்று அவ்வப்போது நினைவுபடுத்தப்பட்டு வருகிறது - நம்மை ஆளும் அரசாங்கங்களால்.

கேஸ் சிலிண்டருக்கு அரசு வழங்கிய மானியத் தொகை நேற்றுவரை நம்முடையது -  இன்று அது எரிவாயு கம்பெனிகளுக்கு.

பெட்ரோல், டீசல் வரிச்சலுகைகளும் மானியமும் நேற்றுவரை மக்களுக்கு - இன்றோ அது எண்ணெய் நிறுவனங்களுக்கு.

மின் கட்டணச் சலுகை நேற்றுவரை நமக்கு. இன்றோ அத்தொகை மின்வாரியத்துக்கு.

பால் விலை, பஸ் கட்டணம், உரம், சிமென்ட் என்று இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வோட்டுப்போட்டு அரியணை ஏற்றும் மக்களுக்கு அவ்வப்போது அளித்துவரும் சலுகைகளை - மானியங்களைத் திரும்பப் பெறுவது எமது தனியுரிமை என்கிறார்கள் நம்மை ஆள்பவர்கள்.

வடமொழியில் ஒரு பழமொழி உண்டு. "தானம் தாத்ரு வசேத்'! தானமும் தருமமும் அதைக் கொடுக்கிற புண்ணியவானின் கையில் அல்லது மனத்தில்தான் இருக்கிறது என்பது அதன் பொருள்.

தானம் தருபவர் கொடுத்தாலும் கொடுக்கலாம்; கொடுக்காமலும் போகலாம். அந்தப் பழமொழிக்கு வேறொரு பரிமாணமும் சேர்ந்துவிட்டது. கொடுத்ததை மீண்டும் வாங்கியும் கொள்ளலாம். ஆம். சமீபத்திய விலையேற்றங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

"கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டி'' - என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?  சலுகைகளிலும் மானியங்களிலும் மனம் மயங்கி நின்ற வாக்காளப் பெருமக்களுக்கு இன்னொரு திரைப்படப் பாடலையும் அர்ப்பணிக்கலாம்.

 "சட்டி சுட்டதடா! கை விட்டதடா!' என்ற பாடலே அது. நமது கரங்களில் இதுவரை தரப்பட்ட சலுகைகள் யாவும் சூடேறிக் கொண்டிருந்த பாத்திரங்களே. இதோ அவற்றை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதைத் தருமமாகக் கருதிய நமது தேசத்தில், எப்போது குடிதண்ணீர் விலைக்கு விற்கப்படத் தொடங்கியதோ அப்போதே நமக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இனி எதுவும் இலவசம் இல்லை! இலவசம் எனப்படுவது நிரந்தரமும் இல்லை என்று.

நமக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. என்றாவது ஒருநாள் இன்னின்ன பொருள்களின் விலையை ஏற்றித்தான் ஆக வேண்டும் என்பது தெரிந்த விஷயம்தான்.

பின் எதற்காக நம் நாட்டு அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகளாய் இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்க வேண்டும்?

 நாளையே இந்த எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினரானால் இதைத்தானே செய்யப் போகிறார்கள்?

இன்னும் சில கட்சியினர் தமது ஆட்சிக்காலம் முழுவதுமோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரங்களிலோ எந்த விலையும் ஏறாமல் பார்த்துக்கொள்வதும், அதற்கு அடுத்துவரும் ஆட்சியினர் ஒன்றுக்குப் பத்தாக விலைகளை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று கைவிரிப்பதும் ஒவ்வோர் ஐந்தாவது ஆண்டிலும் நடக்கத்தானே செய்கிறது?

ஒன்றுமட்டும் நிச்சயம் புரிந்துவிட்டது நமக்கு. எந்தச் சலுகையும் இலவசமும் நிஜமும் இல்லை. நிரந்தரமும் இல்லை.

பேசாமல் ஒன்று செய்து விடலாம்.

நமது மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளில் மட்டுமன்றி, நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும்கூட ""இலவசம் - மானியம்''  என்ற வாக்குறுதிகளைத் தடைசெய்துவிட வேண்டும்.

செய்யுமா நமது தேர்தல் கமிஷன்?  

நன்றி;- தினமணி, கருத்துக் களம். 24 Sep 2012 02:37:55 AM IST0 comments:

Post a Comment

Kindly post a comment.