சென்னை, செப். 24: நாளுக்கு நாள் அரிசி உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதால் தமிழகத்தில் நடுத்தரக் குடும்பத் தலைவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் அரிசி உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி விலை உயர்வு காரணமாக மாதாந்திர செலவைக் கணக்கிட்டுச் செலவிடும் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரேஷனில் ஒரு ரூபாய் அரிசி வாங்குவதையே தவிர்த்த மக்கள், தற்போது இலவச அரிசியை வாங்கி அதில் தினமும் காலை, இரவு வேளைகளில் சிற்றுண்டி செய்யப் பயன்படுத்தும் மனப்பக்குவத்துக்கு வந்துள்ளனர்.
அரிசி விலை உயர முக்கிய காரணங்கள்: வீட்டு மனைகளாக மாறிப் போன விளை நிலங்கள், 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயக் கூலித் தொழிலை மறந்த கிராம மக்கள், சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடை, உரங்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யக்கூடிய நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள் எனப் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் அரிசி உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெல் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக அரிசி விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. அரிசித் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அடிக்கடி டீசல் விலை உயர்வு ஏற்படுவதால் வாகன வாடகைச் செலவு அதிகரிப்பதாலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குடும்பத்தின் மாதச் செலவுகள்:
கணவன் மனைவி, 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு மாதச் செலவாக அரிசி ரூ.1,000, மளிகைப் பொருள்கள் ரூ.1,500, காய்கறி, பழ வகைகள் என ரூ.1,000, ரேஷன் ரூ.400, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.400, பால் செலவு ரூ.1,000, படிப்புச் செலவு ரூ.2,000, மருத்துவச் செலவு, பயணச் செலவு ரூ.1,000, வீட்டு வாடகை குறைந்த பட்சம் ரூ.4,000 முதல் அதிகபட்சமாக ரூ.8000, மின்சார கட்டணம் ரூ.500 முதல் 1,000 வரையிலும் எதிர்பாராத செலவாக ரூ.600 எனச் செலவாகிறது.
இவைகளை மொத்தமாகக் கணக்கிட்டால் குறைந்தபட்சமாக ரூ. 15 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரையிலும் ஒரு குடும்பத்துக்கு செலவாகி வந்தது.
இதே செலவுகள் நடப்பாண்டில் 30 சதவீதம் வரை கூடியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் செலவுகள் கூடிய அளவில் வருமானம் கூடவில்லை என்று குடும்பத் தலைவர்கள் கூறுகின்றனர்.
மேலும் மத்திய அரசின் டீசல் விலையேற்றம், மாநில அரசின் மின் கட்டண உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, குடியிருப்புகளில் வீட்டு வாடகை உயர்வு எனப் பல செலவுகள் வாட்டி வருவதால் மிகவும் திண்டாட வேண்டியுள்ளது என குடும்பத் தலைவர்கள் கூறுகின்றனர்.
அரிசி விலை நிலவரம்
கடந்த 2011-ம் ஆண்டில் 2012-ம் ஆண்டில்
(75 கிலோ)
ஏடிடி 39 ரகம் ரூ.1100-1300 - ரூ.2100-2200
ஏடிடி 43 ரகம் ரூ.1350-1400 - ரூ.2250-2300
ஏடிடி 37 குண்டு ரகம் ரூ.1900-2000 - ரூ.2100-2200
பாபட்லா பொன்னி ரூ.1450-1550 - ரூ.2400-2500
வெள்ளை பொன்னி ரூ.2400-2500 - ரூ.3150-3200
25 கிலோ எடை கொண்ட சிப்பங்கள் நாகராஜா, தாமரை, ஒளிவிளக்கு, ஜாஸ்மின், மகாராஜா, தங்கமயில் உள்ளிட்ட ரகங்கள் கடந்த ஆண்டு ரூ.700 முதல் ரூ. 850 வரை விற்கப்பட்டு வந்தன. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மேற்கண்ட சிப்பங்கள் அனைத்தும் ரூ. 900 முதல் ரூ. 1100 வரை விற்கப்படுகின்றன.
நன்றி : தினமணி, 25 Sep 2012 02:18:44 AM IST
0 comments:
Post a Comment
Kindly post a comment.