Tuesday, September 25, 2012

சீனாவில் முன்னாள் துணைமேயருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை !



பெய்ஜிங், செப். 24: சீனாவில் அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் துணை மேயருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிரிட்டன் வர்த்தகர் நீல் ஹேவுட் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவரும், டோலியன் நகரின் மேயராக இருந்தவருமான
போ சிலாயின் மனைவி கூ கைலாய்க்குத் தொடர்பு இருப்பதாகப் போலீஸாருக்குச்  சந்தேகம் எழுந்தது.

இவ்வழக்கில் கூ கைலாயின் தொடர்பு குறித்து தசாங்கிங் நகர முன்னாள் துணை மேயரும் காவல்துறைத் தலைவருமான வாங் லிஜுன் (52) விசாரணை நடத்தினார்.

 இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய மேயர் போ சிலாய், வாங்கை அழைத்துக் கண்டித்தார். தன் மனைவி குறித்து எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்று கூறிக் கன்னத்தில் அறைந்தார்.

தொடர்ந்து விசாரணை நடத்தினால் நடப்பதே வேறு என்று அவ்வப்போது மிரட்டலும் விடுத்தார். மேலும், காவல்துறைத் தலைவர் பதவியில் இருந்து வாங்கை அவர் பதவிநீக்கம் செய்தார்.

மேயர் போ சிலாயின் மிரட்டலால் பயந்து போன வாங் கடந்த பிப்ரவரி மாதம், செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புக முயன்றார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது போ சிலாய் மீது குற்றம் சாட்டி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, மேயர் பதவியில் இருந்து போ சிலாயை சீன அரசு நீக்கியது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் மீது விரைவில் விசாரணை துவங்க உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தது, அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வாங் மீது சீன போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த செங்டு நகர நீதிமன்றம், வாங்கிற்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

நன்றி :-தினமணி  25 Sep 2012 12:27:50 AM IST





0 comments:

Post a Comment

Kindly post a comment.