Friday, September 21, 2012

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் , ”தமிழ் இலக்கியச் சிந்தனைகள் “ தமிழண்ணலின் தலைமை உரை ! ”நல்ல ஊதியம் கிடைக்கிறது; ஆனால், புலமை இல்லை “: தமிழாசிரியர்கள் குறித்து தமிழண்ணல் கவலை!,

 தமிழாசிரியர்களுக்குத் தற்போது நல்ல ஊதியம் கிடைக்கிறது.ஆனால் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் புலமை இல்லாதவர்களாக உள்ளனர். ஆகவே, தமிழாசிரியர்கள் புலமை பெற வழிவகை காணுவது அவசியம என பேராசிரியர் தமிழண்ணல் வலியுறுத்தினார்.

தில்லித் தமிழ்ச் சங்கமும், "தினமணி'யும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் "தமிழ் இலக்கிய சிந்தனைகள்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:

  தினமணியும், தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு மற்ற மாநாடுகளில் இருந்து மாறுபட்டது. ஆகவே இம்மாநாடு மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வழி காணப்பட வேண்டியது அவசியம். மாநாடு செயல்நோக்கம் பெறவேண்டும். நமது குறைகள் களையப்படவேண்டும். தமிழாசிரியர்களுக்கு நல்ல ஊதியம் தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் தமிழாசிரியர்கள் தமிழ் பழங்கால இலக்கியங்களில் புலமையும், பயிற்சியும் இல்லாதவர்களாகவே உள்ளனர்.

   செம்மொழி ஆய்வு மையம் அளிக்கும் ஆராய்ச்சி உதவி நிதியை வாங்குவதற்காக மாணவர்கள் சங்க இலக்கிய நூல்களில்  இருந்து ஆய்வுக்கு தலைப்பைத் தேர்வுசெய்தாலும் அதற்கு வழிகாட்டியாகச் செயல்படுவதற்கு தமிழாசிரியர்களுக்கு போதிய பழந்தமிழ்ப்புலமை இல்லாத நிலையே உள்ளது.

ஆகவே, தமிழாசிரியர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியப் புலமை அளிப்பதற்கான வழிவகையை மாநாடு மூலம் காணவேண்டும். தமிழை தற்போது பொழுதுபோக்கு மொழியாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது சரியல்ல. தமிழ் என்பது நகைச்சுவைக்கான மொழியும் அல்ல. ஆகவே தமிழாசிரியர்கள் ஆழ்ந்த புலமை பெறுவதற்குரிய பயிற்சி, தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.


 குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டவேண்டும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும், பிற மொழி அறிஞர்களது நல்ல நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட பாரதி பாடிய பத்துக்கட்டளைகளை நாம் செயல்படுத்த முன்வரவேண்டும்.

 ஆகவே, தமிழ் ஆசிரியர்கள் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழிகளிலும் புலமை பெற்றுத் திகழ்வது அவசியம். அதன்மூலமே தமிழின் பெருமையை உலகத்தாருக்கு எடுத்துக்கூற முடியும்.
 நம்மிடம் உள்ள மிகப்பெரிய குறையானது நாம் நமது மொழிப்பெருமையை பேசியதோடு நின்றுவிடுகிறோம். நமது பெருமையை மற்ற மொழி அறிஞர்கள் உணரும் வகையில் எடுத்துக்கூறத் தவறிவிட்டோம். இக்குறை இந்த மாநாடு மூலம் களையப்பட வேண்டும் என்றார் தமிழண்ணல்.


 தில்லித் தமிழ்ச் சங்கமும், "தினமணி'யும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில்,கலந்துகொண்ட ஒரே தமிழ் வலைப்பதிவர், தொகுத்தது.

உதவி.தினமணி , புதுதில்லி, 16, செப்டம்பர், 2012

தமிழண்ணல் நூல்கள்

தமிழண்ணல் தமிழ் இலக்கியம்,இலக்கணம்.திறனாய்வு,நாட்டுப்புறவியல்,உரை,படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூல்களை வழங்கியுள்ளார்.அவற்றுள் சில :

வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்

சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்(2005)
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்(2004)
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்

தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை
இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன

முனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி :

முனைவர் தமிழண்ணல் அவர்கள்
ஏரகம்,
4/585 (732) சதாசிவ நகர்,
வண்டியூர்ச்சாலை,
மதுரை - 625 020

நூல்கள் கிடைக்குமிடம் :
மீனாட்சி புத்தக நிலையம்
48,தானப்ப முதலி தெரு,மதுரை - 625 001,தமிழ்நாடு






0 comments:

Post a Comment

Kindly post a comment.