காமராஜர் ஒரு எளிய குடும்பத்தில் தோன்றியவர். மிகவும் இள வயதில் விடுதலை வேட்கை கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டவர். கட்சிப் பணிகளை ஒருங்கிணத்துப் ( team work ) புரிவதில் வல்லமை வாய்ந்தவர். ஜஸ்டிஸ் கட்சியினருக்கு அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.
காமராஜைத் தீர்த்துக் கட்ட நடந்த ஒரு கொடிய முயற்சியை, விடுதலைப் போராட்ட வீரரும், தமது குடும்பச் சொத்தை அழித்துத் தேசிய இயக்கத்தை வளர்த்தவரும், சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் வாழ்க்கை வரலாற்று நூல் விவரிக்கின்றது. அது பின்வருமாறு :-
“ ஒரு முறை விருதுபட்டி ( விருது நகர் ) சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது, ஊர்ச் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலேங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப்போய் விட்டார்கள். மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுபட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.
முதல் உதவியாகச் சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். வண்டியை விரைவாக ஓட்டினார்கள். பள பள வென்று விடிகிற நேரத்தில். பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும் ஓடி வந்தார் பி.எஸ்.கே. வண்டியை நேராக மருத்துவ மனைக்கு விடும்படி வேண்டினார்.
மருத்துவ மனையில் ஏறத்தாழ நாற்பது நாட்கள் இருந்த காமரஜ், அங்கிருந்து “காங்கிரஸ் மாளிகைக்கு” வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருது பட்டிக்குச் சென்றார். விருதுபட்டி ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.
இவ்வாறு “பி.எஸ். குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்” தெரிவிக்கின்றது.
அன்று காமராஜைக் காப்பாற்றியவர்களை, அவர் தந்த இலவசக் கல்வியாலும், மதிய உணவுத் திட்டத்தாலும் கல்வி கற்கமுடிந்த எல்லோரும், அவர்தம் குடும்பத்தவர்களும், ஏன்? இன்று வாழும் எல்லோருமே நன்றியுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம்
நன்றி :- மூத்த பத்திரிக்கையாளர் , கே.சி. லட்சுமிநாராயணன்., எழுதியுள்ள,
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான “ வரலாறு ” Feb. 2012
எல்கேஎம் பப்ளிகேஷன், 15/4 (33/4 ) இராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17
தொலைபேசி :- 2436 1141 / 2434 0599
0 comments:
Post a Comment
Kindly post a comment.