Monday, September 3, 2012

நதிகளின் மரணம்-நல்லான் இராமசாமி, திருநின்றவூர்.
ஆறுகளைக் காப்பதற்கென்று 1884-ல் ஆற்றுப் பாதுகாப்புச்சட்டம் ஒன்றை அன்றைய ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இன்று வரை அச்சட்டம் நடைமுறையிலேயே இருந்து வருகிறது.

ஆடி கழிந்து ஆவணி மாதம் இது. அகண்ட காவிரி வற்றிக் கிடக்கிறது. இக்கரைக்கு அக்கரை தொட்டு தேனாய், திரவியமாய் உருண்டோடும் ஜீவநதி கட்டாந்தரையாய் காய்ந்து கிடக்கிறது.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை அது போர்த்து கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி என்று சிலப்பதிகாரம் வாழ்த்திய காவிரித்தாய் மாளாத காயங்களுடன் மரணித்துக் கிடக்கின்றாள்.

தண்ணீரையும், மணலையும், என்றைக்கு மனிதன் வணிகப்பொருளாக மாற்றினானோ அன்றே நதிகளின் அழிவுக்குச் சுருக்குக் கயிற்றையும் பின்னினான். காவிரி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அத்தனை நதிகளையும் இருக்கும் இடம் இல்லாமல் செய்து விட்டனர் பேராசை பிடித்த மனிதக்கும்பலைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசுகளாய் மாற்றம் பெற்றுள்ளன. விவசாயப் பெருங்குடி மக்கள் கூலிகளாக மாறி நகரங்களை நோக்கிப் பயணிக்கின்றனர். நதிக்கரையோரத்து கிராம மக்கள் குடிநீருக்காகத் தவிக்கும் சூழ்நிலை உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்தடி நீர் இன்றி கிணறுகள் வற்றிவிட்டன. கொஞ்ச நஞ்சம் இருக்கும் தண்ணீரும் உப்புத்தன்மை பெற்று விவசாயத்துக்கோ குடிநீருக்கோ பயன்படுத்திக் கொள்ள இயலாத மாசுத்தன்மை கொண்டிருக்கிறது.

உட்கார்ந்து பேசி ஒரு நாளில் தீர்க்க வேண்டிய நதி விவகாரங்களை அரசியல் செய்வதற்கான ஆயுதங்களாக மட்டும் இங்குள்ள மத்திய, மாநில அரசுகள் பார்த்து வருகின்றன. மாண்பமை பொருந்திய அரசியலார் இருந்தும் தகுதி படைத்த சான்றோர் பலர் இருந்தும் வல்லமை பொருந்திய நீதித்துறை இருந்தும் கூட தமிழ் மண்ணில் நதிகளின் மரணத்தைத் தடுக்க முடியாமல் போனது எத்தனை பெரிய சோகம்.

1957-ல் மத்திய அரசு ஆற்று மணலை, "சிறு கனிமம்' என்று வகைப்படுத்தியது. இந்திய அரசின் சுரங்கங்கள் கனிமங்கள் (பயன்பாடும் கட்டுப்பாடும்) 1957-ம் ஆண்டு சட்ட வழி காட்டுதலின்படி உருவான தமிழ்நாடு சிறு கனிமங்கள் பயன்பாட்டு விதிகளின் கீழ் ஆறுகளில் உள்ள மணல் சிறு கனிமம் என்று வரையறுக்கப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மணல் உரிமை ஆக்கப்பட்டது. ஆனால் ஆறுகளில் மணல் அள்ளப்படுவதைத் தடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்களே அக்கொள்ளைக்கு துணைபோகும் சம்பவங்கள்தான் காலங்காலமாக நடந்து கொண்டுள்ளது.

ஆறுகளைக் காப்பதற்கென்று 1884-ல் ஆற்றுப் பாதுகாப்பு சட்டம் ஒன்றை அன்றைய ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இன்று வரை அச்சட்டம் நடைமுறையிலேயே இருந்து வருகிறது.

அச்சட்டம் தொடர்பாக இடப்பட்ட அரசு ஆணையில் காணப்படும் விதிகளின்படி ஆற்றின் இருபுறமும் வெள்ளக் கரைக்கு அப்பால் 100 அடி வரை மண் அல்லது மணல் அள்ளக்கூடாது. தேவைக்காக மணல் எடுக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட ஆற்றுக்குப் பொறுப்பான அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அந்த அலுவலர் மணல் எடுக்க விரும்பிய இடத்தைப் பார்வையிட்டு மணல் எடுப்பதால் ஆற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ பாதிப்போ உள்ளதா என்பதை ஆய்வு செய்தபின் சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. விதிமுறைகளை மீறி மணல் அள்ளினால் சிறைத் தண்டனையும் ரூ.50 அபராதமாக விதிக்கப்படுவதும் 1911-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்துள்ளது.

1957-ல் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி ஆற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு அனுமதியில்லை. ஆனால் 19.4.2004-ல் வெளியிடப்பட்ட ஒரு அரசாணைப்படி அரசு தொழில்துறை செயலாளரின் அனுமதியுடன் இயந்திரங்கள் பயன்படுத்தலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

 தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி ஆட்சி செய்யும் இரு திராவிடக் கட்சிகளே மேலும் பல சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்தன. யாருக்காக இச்சட்டத்திருத்தம்?

1996-ல் இருந்தே காவிரியாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. மாயனூர் தொடங்கி ஜீயபுரம் வரை கரூர்-திருச்சி சாலையில் இருந்து காவிரி ஆற்றின் நடுப்பகுதி வரை தனிச்சாலை அமைக்கப்பட்டு லாரிகள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 நூற்றுக்கணக்கான பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்காக லாரிகளில் மணல் அள்ளிக்கொட்டப்பட்டு இரவு முழுக்க கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மணல் அனுப்பப்படுகிறது. லாலாப்பேட்டை பகுதியில் இருந்து மட்டும் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு பொக்லைன் மூலம் மணல் ஏற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது
.
காவிரியில் கங்கு கரையில்லாமல் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து 1996-ல் கரூர் வழக்கறிஞர் பி.ஆர்.குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு குறித்து விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் நில-நீரியல் வல்லுநர்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அன்றைய கரூர் மாவட்ட ஆட்சியருக்கு காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த ஆணை பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவு ஆணையை ஏற்று காவிரி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திய கரூர் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மணல் மாபியா கும்பலுக்கு இரண்டரைக் கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். ஆறு மாதங்கள் கூட கடந்திருக்காது. சடங்குகள், சம்பிரதாயங்கள், சின்னச்சின்ன சட்ட திருத்தங்களுக்கு பின் அதே கும்பல் இன்று வரை காவிரி ஆற்றை கட்டாந்தரையாக்கி விட்டது.

காவிரி ஆற்றில் மட்டுமல்ல. அமராவதி, குடகு, நங்காஞ்சி, நொய்யல் போன்ற காவிரியின் கிளை ஆறுகளிலும் மணல் அள்ளப்பட்டுவிட்டது. வைகை, பாலாறு, தென்பெண்ணை ஆறுகள் பாதை மாறி, தோற்றம் மாறிக் கிடக்கின்றன.

120 மைல் நீளமுள்ள தாமிரபரணி ஆற்றில் வெண்மணல் பரப்பு அதிகம். 40 கிலோ மீட்டர் வனப்பகுதி நீங்கலாக 80 கிலோ மீட்டர் நீளமுள்ள சமவெளிப் பகுதியில் 15 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. தாமிரபரணியைக் காப்பதற்காக இதுவரை நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தொடர்ந்த வழக்கில் 5 ஆண்டு காலத்திற்கு தாமிரபரணியாற்றில் மணல் அள்ளுவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் 12.2.2010-ல் தடை ஆணை பிறப்பித்தது.

ஆனால் நீதிமன்ற ஆணையை மதிக்காத மணல் மாபியாக்கள் தொடர்ந்து மணல் திருட்டை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், வைப்பாற்றில் மணல் குவாரி நடத்த அரசின் அனுமதி இருந்தது. இயந்திரங்கள் மூலம் 20 மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டதால் கொதித்துப் போன பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதனால் அங்கு மணல் குவாரி மூடப்பட்டது. இருப்பினும் அங்கிருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவது நின்றபாடில்லை என்றே தகவல்கள் வருகின்றன.
நெல்லை மாவட்டம், நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராமத்துப் பெண்கள் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. கையில் கிடைத்ததை எடுத்து ஆண்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது மாபியா கும்பல்.
மணல் கொள்ளை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள இவ்வேளையில்தான் மணல் கொள்ளை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கேரள மாநில ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2005-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தடை உத்தரவு அம்மாநிலத்தில் அமலில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் மணல் கேரளத்தில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.

கர்நாடகம் உள்ளிட்ட வேறு பல மாநிலங்களுக்கும் தமிழக மணல் அனுப்பப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நிலத்தடி நீர் தேக்கமாகச் செயல்பட்ட ஆற்றுமணல் இல்லாது போனதால் விவசாயம் செயல் இழந்து விட்டது. தமிழகம் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

நதிகளைக் காப்பாற்றி உயிர்ப்பிக்கவும் போராடவும் யாருமில்லை இங்கு.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், நதிகளின் மீதுள்ள நமக்குள்ள உரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும் என்கிற நம்பிக்கை பெரும்பாலான சான்றோர்களிடம் உள்ளது.

வாழி உன்றன் வள நாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியா தொழுக உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல் வெய்யோன்
அருளே வாழி காவேரி

என்கிற சிலப்பதிகார வரிகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். காவிரி மட்டுமல்ல. தமிழக நதிகள் அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இரும்புக்கரம் கருணை கொள்ளட்டும். நதிகள் உயிர் பெறட்டும்.

நன்றி ;- தினமணி  03-09-2012 கருத்துக்களம்

தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை

முனைவர்-பழ கோமதிநாயகம்

விலைரூ.40/-

தமிழ்க்குலம்

33, நரசிம்மபுரம், சென்னை, 600 004

தொலைபேசி 044-2464 0575


0 comments:

Post a Comment

Kindly post a comment.