Monday, September 3, 2012

ஊடகங்கள் மூலம் வீட்டுக்கு வீடு பிரசாரம்! - அருண் நேரு


!நன்றி :- தினமணி

First Published : 27 Aug 2012 01:30:03 AM IST


 பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியம், சமூக வலைதளங்களின் பயன்பாடு ஆகியவை குறித்து லட்சக்கணக்கான வார்த்தைகள் இனி அச்சிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து இடம் பெறும்.


 டுவிட்டர், ஃபேஸ்புக், யூ டியூப், கூகுள் ஆகியவை மூலம் சராசரி குடிமகன், கருத்துச் சுதந்திரத்தின் முழுப்பலனையும் அனுபவிக்க முடிகிறது என்பது உண்மைதான். அதே சமயம் எந்த ஒரு நல்லதும் கூடவே தீமையையும் கைப்பிடித்து அழைத்து வந்துவிடுகிறது. எனவே இந்த நவீன யுகத்து தகவல் தொடர்பு வசதிகளை அனுபவிக்கும் மக்கள் கூடவே அதன் கெடு பலன்களுக்கும் ஆளாக நேர்கிறது.


 அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்றுசேரவும், ஒருங்கிணைந்து செயல்படவும் இந்த வலைதளங்களும் இன்ன பிற இணைப்புகளும் பெரிதும் உதவின. அதே சாதனங்களால்தான் பிரிட்டனில் வதந்திகள் வேகமாகப் பரவி பெரிய வன்முறைக் கலவரங்கள் ஏற்பட்டன.


 அதே போன்றுதான், வட கிழக்கு மாநில மக்களுக்கு எதிராக தென்னிந்திய மாநிலங்களில் கலவரம் நிகழப்போகிறது என்று வதந்தி பரவி அனைவரும் அச்சத்துடன் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப நேர்ந்தது. இந்த விஷமத்துக்குப் பின்னணியில் பாகிஸ்தான் மண்ணிலிருக்கும் சில அமைப்புகள்தான் இருந்தன என்பது சில மணி நேரங்களுக்குள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இத் தகவல் வெளியான பிறகு மக்களிடையே அமைதியும் நிம்மதியும் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் ஊர் திரும்பிய வட கிழக்கு மாநிலத்தவரை மீண்டும் தென்னிந்திய மாநிலங்களும் திரும்ப அழைத்தன. இதையடுத்து அசாமிலிருந்து சில சிறப்பு ரயில்கள் விடப்பட்டு அவை பிரச்னை ஏதும் இல்லாமல் சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன.


 பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேவும் உடனடியாகத் தலையிட்டு இந்த விஷமத்துக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார், அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன, உள்நாட்டில் அவர்களுக்கு உதவுகிறவர்கள் யார் என்றெல்லாம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்
.
 இந்த விசாரணை முழுமைபெற்றதும் இந்தியாவில் குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்க திட்டமிட்டு சதி செய்த பயங்கரவாத கும்பல் எது, அதற்குத் துணைபோன அமைப்புகள் எவை என்பது அம்பலமாகிவிடும். அதே சமயம் தீவிரவாதிகள் நவீனத் தொழில்நுட்பத்தையும் தங்கள் நாசகர வேலைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்பதை இது வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது.


 தவறான தகவல்களை வேண்டுமென்றே வெளியிடும் வலைதளங்களைத் தடை செய்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் உலகின் எந்தப் பகுதியிலாவது, யாராவது அதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்களா?


 உலகமே அதிர்ச்சி அடையும் அளவுக்கு மிகப்பெரிய மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு வேண்டுமானால் அதைப்பற்றி உலகம் பரிசீலிக்கக்கூடும்!
 ******
 புதிய தொழில்நுட்பங்கள் வருகை காரணமாக நிர்வாக நடைமுறைகளும் மாறிவருகின்றன என்பதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். நாட்டின் நிர்வாகத்தில் இப்போது மிகக்குறைவான ரகசியங்கள்தான் இருக்கின்றன, புதிய தொழில்நுட்பத்தால் வரும் பாதிப்புகளைவிட நன்மைகளே அதிகம் என்றுதான் மக்கள் நினைக்கின்றனர்.


 சமூக வலைதளங்கள் என்பவை தனிமனித சுதந்திரத்தை வெளிப்படுத்தும் கருவிகளாகத் திகழ்கின்றன. மிகத் தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தாலொழிய எந்த அமைப்பும் நடவடிக்கை எடுக்காது என்றே கருதுகிறேன்
.
 24 மணி நேர செய்தி சேனல்கள் மக்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எப்போதோ மறக்கப்பட்டுவிட்ட விஷயங்களுக்கெல்லாம் அவை புத்துயிர் ஊட்டுகின்றன. பல கொலை வழக்குகள் மீண்டும் தோண்டி எடுக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் அப்படியே தோலுரித்துக் காட்டப்படுகின்றன. பணம் கேட்டு மிரட்டுவது, காரியத்தைச் செய்துமுடிக்க லஞ்சம் கேட்டு வாங்குவது, அரசியல்ரீதியாக பேரம் நடத்துவது என்று எல்லாமே "கேமராக்களில் படம் பிடிக்கப்பட்டு' மக்கள் முன் திரையிடப்படுகின்றன.


 இதற்கு நல்ல உதாரணம் "விக்கிலீக்' டேப்புகள். அமெரிக்க அரசுக்கு பல்வேறு நாடுகளின் அமெரிக்கத் தூதர்கள் அனுப்பிய ரகசியத் தந்திகளின் விவரங்கள் உள்ளிட்ட ரகசியத் தகவல்கள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் அமெரிக்க அரசின் நிர்வாகத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் அந்த ரகசியங்களைக் கைப்பற்றி விக்கி லீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவிடம் அப்படியே தந்துவிட்டார்.


 அவற்றை உலகம் முழுக்க பகிரங்கப்படுத்திய அசாஞ்சேவைத் தண்டிக்க அமெரிக்க அரசு விரும்பினாலும் நேரடியாக அதைச் செய்ய முடியவில்லை. எனவேதான் 2 பெண்கள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பாக அசாஞ்சே மீது சுவீடன் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. அசாஞ்சேவை பிரிட்டனிலிருந்து வெளியேற்றி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுவீடன் கோருகிறது. லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில் அசாஞ்சே இப்போது தஞ்சம் புகுந்திருக்கிறார்.


 பிரிட்டனின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு எதிராக இருந்தாலும் மக்களுடைய ஆதரவு என்னவோ அசாஞ்சேவுக்குத்தான். நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து ஈக்வடார் நாட்டுத் தூதரகத்துக்குள் பிரிட்டிஷ் அரசு அதிரடியாக நுழைந்து அவரைக் கைது செய்யுமா என்று பார்க்க வேண்டும்.
 ******
 நாட்டின் நிர்வாக விதிகள் அனைத்தும் மாறிவிட்டன; அது 24 மணி நேர செய்தி சேகரிப்பாக இருந்தாலும், சமூக வலைதளங்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடாக இருந்தாலும், நம்மை நிர்வகிக்கும் அரசுமுறையாக இருந்தாலும், நீதிவழங்கும் தீர்ப்பாக இருந்தாலும் - எல்லாமும் - மாறிவிட்டன. பதவியில் இருப்பவர்கள்தான் ஏதும் மாறாததைப்போல மறுத்துப் பேசிவருகின்றனர்.

 இப்போதைய சூழலில் எது சரி, எது தவறு என்று நமக்குத் தெரியவில்லை. கழுத்து வெட்டப்பட்ட கோழியைப்போல நாம் வட்டமடித்துச் சுற்றிசுற்றி வருகிறோம்.


 மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கோஷமிட்டு அமளி செய்தபோது, ""அவையை ஒத்திவைத்துவிடுங்கள்'' என்று மாநிலங்களவையின் புதிய துணைத் தலைவர் குரியனிடம் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா காதோரம் சொன்னது குரியனின் முன்பிருந்த அணைக்காத "மைக்' மூலம் எல்லோருக்கும் கேட்டுவிட்டது. 

அதையே நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தி சேனல்கள், ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதைப்போலக் காட்டிக்கொண்டே இருந்தன. நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகளில் இவையெல்லாம் புதிதல்ல. இணையமைச்சர் சுக்லா இன்னும் சற்று நாசூக்காகச் செயல்பட்டிருக்கலாம்.
 ******
 இனி அடுத்த "தேர்தல் பருவம்' தொடங்கப்போகிறது. செய்தி ஊடகங்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் இப்போதே தகுந்த உத்தியை வகுத்துக்கொள்ளவேண்டும்
.
 தொலைக்காட்சிகளானாலும் செய்தித்தாள்களானாலும் நிருபர்களின் கேள்விகளுக்குத் தக்க பதிலைத் தரக்கூடிய திறமைசாலிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கவேண்டும். மூத்த காபினட் அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்குக் கட்சி வட்டாரங்களில் தரப்படவேண்டும். செய்தித் தொடர்பாளர்கள்தான் மக்கள் முன்னிலையில் கட்சிக்கு நல்ல பெயரை வாங்கித்தர முடியும்.


 அரசியல் என்பது மக்களுடைய யதார்த்தக் கண்ணோட்டத்தில் மதிப்பிடப்படுவது. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் அரசியல் விவாதங்கள், நேர் காணல்கள் போன்றவற்றின்போது கட்சிகளின் பத்திரிகைத் தொடர்பாளர்கள் சூடாக, சுவையாக, ஆழமாக, வலுவாகத் தங்களுடைய கட்சி சார்பில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். அங்கே தடுமாறுவதும், உளறிக்கொட்டுவதும், ஆத்திரப்படுவதும், வசைபாடுவதும் கட்சிக்கே இழுக்கை ஏற்படுத்திவிடும். தேர்தல் உத்தியில் இந்த ஊடகத் தொடர்பும் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும்.


 ******
 செய்தி ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பவை மாநில செய்திப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும்தான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. செய்தி ஊடகங்களில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் யார் என்று பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்.


 "டைம்ஸ் குழும'ப் பத்திரிகைகளுக்கு அடுத்தபடியாக மாநிலங்களைச் சேர்ந்த மொழிப் பத்திரிகைகள்தான் இடம் பெற்றுள்ளன. இவற்றின் சந்தாதாரர் எண்ணிக்கையைப் பார்த்தால் ஒவ்வொன்றும் பத்து லட்சங்களுக்கும் மேல்.
 நாடு முழுக்க தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிடவும் மேற்பார்வையிடவும் 30 முதல் 40 பேர் வரைகொண்ட மிகப்பெரிய குழுவை காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே ஏற்படுத்தவேண்டும் என்று கருதுகிறேன்.

புள்ளிவிவரங்களில் நான் கெட்டிக்காரன் அல்ல என்றாலும் 2014 பொதுத் தேர்தலில் செய்தி ஊடகங்களுக்காகக் கட்சிகள் செய்யும் செலவு 200% ஆக உயர்ந்துவிடும் என்று கணிக்கிறேன்.


 இன்னும் 20 ஆண்டுகளுக்குள் தேர்தல் பிரசாரம் என்பது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாகத்தான் நடக்கும், அதன்மூலம் ஒவ்வொரு வீட்டையும் இப் பிரசாரங்கள் நேரடியாகச் சென்று அடையும்.
 
தவறான தகவல்களை வேண்டுமென்றே வெளியிடும்
வலைதளங்களைத் தடை செய்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் உலகின் எந்த பகுதியிலாவது,


 யாராவது அதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்களா?

வலைப் பதிவர்களுக்கு நிருபர்கள் பத்திரிக்கைகளும், இணைய தளங்களும்தான். அவற்றில் வரும் தகவல்களைச் சேகரித்துத்தான் வலைப்பூவில் செய்திகள் வெளியாகின்றன. பத்திரிக்கைகளைக் கட்டுப்படுத்தாமல் இணையதளங்களையும், வலைப்பூக்களையும் கட்டுபடுத்திட முயன்றால் அதுவும் ஜ்னநாயகப் படு கொலைதான்!

என்ன,சரிதானே, நண்பர்களே ?  

0 comments:

Post a Comment

Kindly post a comment.