நுட்பமான பதிப்பு வரலாறு
புத்தகங்கள் வாங்கும்போது எல்லோரும் பார்ப்பது விலையைத்தான். வாங்குவதற்குக் கட்டுப்படியாகிற விலையா என்பதே பலரின் ஆர்வம். நல்ல புத்தகம் - படிக்க வேண்டிய புத்தகம் என்று மனம் சொன்னாலும் விலை வாசகனின் கையை இறக்கி விடுவதுண்டு. எந்தப் புத்தகமானாலும் பதிப்பிக்கப்பட்ட ஆண்டினையோ எத்தனையாவது பதிப்பு என்பதையோ பொதுவாக வாசக மனம் பொருட்படுத்துவதில்லை. ஆய்வு மனம் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட புத்தகங்கள் பல இப்போது முதற்பதிப்பு என்று குறிப்பிட்டு வெளிவருகிறது. இது ஏற்கெனவே வெளிவந்திருப்பதாகத் தெரிகிறதே என்று கேட்டால் எங்கள் பதிப்பகம் சார்பில் இதுதான் முதல் பதிப்பு என்கிறார்கள்.
ஒரு புத்தகம் முதற்பதிப்பு கண்டது எப்போது? அடுத்தடுத்த பதிப்புகள் எப்போது வந்தன - இதற்கான தேவை என்னவாக இருந்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதுவது வரலாற்றுக்கு உதவி செய்யும்.
சில ஆசிரியர்கள் பதிப்பு வாரியாக முன்னுரை எழுதியிருப்பார்கள். சிலர் நூலுக்குள்ளேயே திருத்தம் செய்திருப்பார்கள். சிலரோ நூலுக்குள் திருத்தாமல் அடுத்தப் பதிப்பின்போது எவை எவை செய்ய வேண்டிய திருத்தங்களாகவோ சேர்க்க வேண்டிய பகுதிகளாகவோ இருந்தன என்பதை முன்னுரையிலேயே எழுதி முடிப்பார்கள். இதையெல்லாம் பார்த்தால் ஏன் இப்படி பக்கங்களைச் சேர்த்துக்கொண்டே போக வேண்டும் என்று கேட்கத் தோன்றும்.
ஆனால், அண்மைக் காலமாகப் பெருகிவரும் பதிப்பு வரலாற்று முயற்சிகள் இது போன்ற குறிப்புகளும் முன்னுரைகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்த்தும்.
முனைவர் அ. செல்வராசு எழுதியுள்ள புறநானூறு பதிப்பு வரலாறு (1894-2010) ஆய்வு நூலினைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்தக் கருத்து மேலும் வலுவானது.
புறநானூற்றை தமிழ் தாத்தா உ.வே.சா தொடங்கி (1894) ம.வே. பசுபதி (2010) வரை 31 பேர் பதிப்பித்துள்ளனர். இத்தனைப் பதிப்புகள் எதற்காக? இவற்றின் சிறப்பு அம்சம் என்ன? இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? உண்டாயின் எத்தகைய வேறு பாடு? என நுட்பமாக அலசி ஆராய்வதாக இந்த நூல் அமைந்துள்ளது. உ.வே.சா உரை எழுதவில்லை. பெயர் தெரியாத ஒருவர் எழுதிய உரையை செம்மை செய்து பதிப்பித்தி ருக்கிறார். அந்தப் பெயர் தெரியாதவர் இன்னமும் தெரியாதவராகவே இருப்பதுதான் வரலாற்று விந்தை.
ஒவ்வொருவர் பதிப்பிக்கும்போது முன்னுரையில் காரணங்கள் குறிப்பிட்டிருப்பது அவர்தம் நேர்மையும் உதவியோர் பெயர்களைச் சுட்டி நன்றி தெரிவித்திருப்பது அவர் தம் பண்பையும் காட்டுகிறது. அதே சமயம் இன்று புறநானூற்றுச் செய்யுள்கள் பாட நூலாக இருப்பினும் இவை எந்தப் பதிப்பைஆதாரமாகக் கொண்டது என்ற குறிப்பின் மையை நூலாசிரியர் மறக்காமல் சுட்டிச் செல்கிறார்.
புறநானூற்று எளிய உரை கண்டவர் புலியூர்க்கேசிகன் என்றால், மரபுக் கவிதைகளிலேயே உரை எழுதியவர் ஆர். மதிசேகரன். புதுக்கவிதை பாணியில் உரை எழுதிய வர் சுஜாதா. பொதுவாகப் பாடலைத் தந்துவிட்டு பொருள் கூறுகிற மரபை மீறி முதலில் செய்யுளுக்கான உரை; அதன்பிறகு செய்யுள் என்ற நடையைக் கையாண்டவர் ரா. சீனிவாசன் அவர்கள்.
பாடல்; பாடியவர்; பாடப் பெற்றவர்; திணை; துறை என்ற வழமையாக பதிப்பு முறை யிலிருந்து மாறி ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு துணைத் தலைப்பு தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர் புலியூர்க்கேசிகன். இவரைத் தொடர்ந்து ஞா. மாணிக்க வாச கன், வ.த. இளங்குமரன், அ.ப. பாலையன் ஆகியோர் பாடல்களுக்குத் தலைப்பிட்டுள் ளனர். இவர்களிலும் ஞா. மாணிக்கவாசகனின் தலைப்புகளை ஆற்று மணலிலும் அதிக நாள் வாழ்க, புலவர் பாடும் புகழ் இருக்க போர் எதற்கு? யானையைப் போகவிடு சோழனை வாழவிடு போன்று கவித்துவமாக உள்ளன.
பாடியவர்களின் பெயர்கள், எண்ணிக்கை, பாடப் பெற்றோரின் பெயர்கள், திணை, துறை போன்றவற்றிலும் பதிப்புகள் பலவற்றிலும் வேறுபாடுகள் இருப்பதையும் முனைவர் செல்வராசு பட்டியலிட்டுள்ளார்.
முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்திருப்பினும் முழுமையான அதிகாரபூர்வ பதிப்பு இன்னமும் வெளிவரவில்லை என்பதையும் இறுதியாக எடுத்துரைத்துள்ள அவர்,
இனி செய்ய வேண்டிய பதிப்பு எப்படியிருந்தால் பயன் தரத்தக்கதாக இருக்கும் என்பதற்கும் 6 யோசனைகள் கூறியுள்ளார். இந்த யோசனைகளைக் கவனத்தில் கொண்டு புறநானூற்றுக்குப் புதிய பதிப்பினை செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்ப்போமாக!
நன்றி :- தீக்கதிர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.