Friday, September 28, 2012

”விழிப்புணர்வு “ பெற ஒரு கையேடாகும் !

நூலாசிரியர் .. கண்ணன் விருதுநகர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கப் பொறுப்பாளராக இருந்தபோது, நான் மூட்டா சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தேன். எனவே அப்போதே அவருடன் நெருக்கமான அறிமுகம் இருந்தது.

 பின்னர் அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணி யாற்றிய போதும் எங்களுக்கிடையே தோழமை தொடர்ந்தது. இயக்கப் பணியாற்றுவதோடு எழுதுவதிலும் ஆர்வம் மிக்கவர் கண்ணன் என்பது அவரது எழுத்துக்களைப் பல்வேறு இதழ்களில் படித்து வருபவர்களுக்குத் தெரியும். தன்னுடைய அனுபவங்களி லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையான வேலையின்மை குறித்து இந்த நூலில் அலசி ஆராய்கிறார் கண்ணன்.

எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் ஆட்கள் பற்றாக்குறை என்ற குரல்
கேட்பதையும், மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு சேவை வழங்குவதற்குத் தேவையான அரசுக் கட்டமைப்பு பற்றிய ஆய்வை அரசு மேற்கொள்ளாததையும் முன்னுரை எழுதியுள்ள வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் நய மாக எடுத்துரைக்கிறார்.

வளர்ச்சி என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கும் ஆசிரியர், வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி, வேலை இழப்பு வளர்ச்சி, ஒழிக்கப் படும் சமூக நீதி, கொடிய முதலாளித்துவம், இடம் பெயர்தலின் வலி என வேலையின்மையின் பல் வேறு அம்சங்களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு முத்தாய்ப்பாக சமூகப் பாதுகாப்புட னான வேலையைப் பெறுவதற்கான பயணம் எத்தகையதாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

காங்கிரஸ், பாஜக என எந்த அரசானாலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை பெருகி வந்துள்ளது, ஐ.நா.வின் மனித வளர்ச்சி அறிக்கையில் இந்தியா 138வது இடத் தில் கீழே இருப்பது, 92 சதமானக் குடும்பங்களின் வருமானம் முறைசாராத் தொழில் களைச் சார்ந்தே  இருக்கின்றன 

பன்னாட்டு நிறுவனங்களின் நவீன தொழில்களில் தொழிற் சங்க உரிமைகள் பறிபோவது, வேலையின்மை காரணமாக சாதி, இன, மத வன்முறைகள் அதிகரிப்பது, பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுவதால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் சுருங்குவது, மாறாகப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் பெருகி வருவது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அரசு செய்யும் ஏமாற்று வேலைகள், நிலக்குவியல்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் கை கோர்த்து உழைப்பாளி மக்களைச் சுரண்டுவது, உலகமயமாக்கலுக்குப் பின் நடக்கும் இடம் பெயர்தல் - அதனால் ஏற்படும் இன்னல்கள்.. என வேலையின்மையின் அனைத்துப் பரிமாணங்களையும் நூலாசிரியர் தெளிவாக நம்முன் எடுத்துவைக்கிறார்.

இளைஞர்கள் ஏதாவதொரு வேலை கிடைத்ததுமே திருப்தியடைந்து விடக்கூடாது. அந்த வேலைக்குக் கொடுக்கப்படும் ஊதியம், ஆண்டு உயர்வூதியம், விடுப்பு வசதிகள், ஓய்வூதியப் பலன்கள் எல்லாம் அடங்கிய சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையாக அது இருக்கி றதா? என்பது முக்கியம் என வலியுறுத்துகிறார் கண்ணன்.

“சமூக மாற்றம் இல்லாமல் அரசு பின்பற்றும் கொள்கை மாறாது. கொள்கை மாறாமல் வேலை வாய்ப்பை அரசு உத்தரவாதம் செய்யாது. எனவே, ஒட்டு மொத்த சமூகப் பிரச்ச னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை மாற வேண்டும்” என்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இலக்கைக் கூறி இந்தப் பரிசீலனையை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

இந்தியாவில் சுமார் 54 கோடிப் பேர் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். ஆனால் அவர்கள் தங்கள் பலம் அறியாது அடிமைகளாகக் காலம் கழித்து வருகின்றனர்.

 வேலையின்மைக்குக் காரணமாக தலைவிதி, ஆண் டவன் அருள், பிறந்த நேரம், ஜாதகம் போன்ற பல்வேறு ஊர்போய்ச் சேராத நம்பிக்கைகளை அவர்கள் உதறித் தள்ளிவிட்டு, வாலிபர் சங்கம் காட்டும் பாதையில் அணிவகுத்தால் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை தங்களுக்கும் இந்தியாவுக்கும் பெற்றுத்தர முடியும்.

அதற்குத் தேவை விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வைப் பெற இந்த நூல் ஒரு கையேடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.நன்றி :- தீக்கதிர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.