Friday, September 7, 2012

திருப்திதரும் விதிமுறைகள் பாகுபாடின்றி அமுல்படுத்திடவும் வேண்டும், உயிருக்கு விலை இல்லை !



கட்டுரையாக்கம். எஸ்.இராஜாராம், நன்றி, தினமணி, 07-09-2012

பள்ளிக்கூட பஸ்களுக்கான புதிய விதிமுறைகளாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த வரைவு விதிமுறைகள் திருப்தி அளிப்பதாக நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.

 ஆனால், இந்த விதிமுறைகள்தான் என்றில்லை, ஒவ்வொரு தவறையும் கட்டுப்படுத்தும் எந்த விதிமுறைகளுமே எழுத்தில் சிறப்பாகத்தான் உள்ளன. அதை அமல்படுத்துவதில் ஏற்படும் தொய்வுதான் பிரச்னைகளுக்குக் காரணம்.

மக்கள்தொகையும், வாகனங்களும் அதிகரித்துவிட்ட இன்றைய நாளில் தினந்தோறும் விபத்துகள் நடக்கின்றன. அதில் வாகனங்கள் பழுதடைவதால், சாலை சரியில்லாததால் நடக்கும் விபத்துகள் என்பது குறைந்தபட்சம்தான்.
மாறாக விதிமுறைகளை மீறுதல், அலட்சியம் ஆகியவற்றால்தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன.

அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், வாகனத்தை இயக்குவதில் போதிய தேர்ச்சியின்மை, சாலை விதிகளை மதிக்காதது, போதையில் வாகனத்தை இயக்குவது, செல்போனில் பேசிக்கொண்டே அல்லது ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே கவனத்தைச் சிதறவிடுவது போன்றவையே விபத்துக்கான முக்கிய காரணங்கள்.

தனிமனித ஒழுக்கத்துடன் ஒவ்வொருவரும் தாமாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாலன்றி, இந்த அலட்சியத்தை எந்த விதிமுறைகளையும் கொண்டு கட்டுப்படுத்திவிட முடியாது.

இரவில் வாகனத்தை ஓட்டும்போது எதிரில் வாகனம் வந்தால் முகப்பு விளக்கின் ஒளியை மங்கச்செய்து செல்ல வேண்டும் என்கிற விதிமுறையை எத்தனை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்கள்? எத்தனை வாகனங்களில் முகப்பு விளக்கின் மத்தியில் கறுப்பு பொட்டு ஒட்டப்பட்டுள்ளது?

சைக்கிளைக் கண்டால் மோட்டார் சைக்கிள்காரர்களுக்கு அலட்சியம், மோட்டார் சைக்கிள்களைக் கண்டால் காரில் செல்பவர்களுக்கு அலட்சியம், கார்களைக் கண்டால் பஸ், லாரி ஓட்டுபவர்களுக்கு அலட்சியம்.

கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம்களை ஒட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் ஏராளமான வாகனங்கள் கறுப்பு பிலிம்களுடன்தான் வலம் வருகின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வாகனங்களை வைத்திருக்கும், ஓட்டும் அனைவருக்குமே தெரிந்திருந்தும் அதை அகற்றாமல் இருப்பது எத்துணை பெரிய அலட்சியம்?

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் மட்டுமன்றி, வாகனப் போக்குவரத்துச் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒரு விபத்து நிகழ்ந்தால், அது ஓட்டுநரின் கவனக்குறைவால் அலட்சியத்தால் நிகழ்ந்தது எனத் தெரியவரும்பட்சத்தில் அந்த ஓட்டுநர் இனி வாகனத்தை இயக்கவே தகுதியற்றவர் என அறிவித்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

குடிபோதையில் ஒருவர் வாகனம் ஓட்டியது தெரியவந்தால் அவருக்கு வெறும் அபராதம் மட்டும் போதாது; உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

பள்ளி பஸ்களுக்கு என வரையறை செய்துள்ள விதிமுறைகள் அனைத்துவகை வாகனங்களுக்கும் பொருந்தும். அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்களிலும் பல இயக்கத் தகுதியற்ற வகையில் இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு "எப்.சி.'க்கு போய்விட்டு வந்த பின்னரும் வாகனங்கள் அதே நிலையில்தான் இருக்கின்றன.ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மூலம் பயிற்சிபெற்று ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் "செல்வாக்கை'ப் பொருத்து, ஓரளவு சுமாராக ஓட்டத் தெரிந்தவர்களுக்கும் உரிமம் வழங்குவது அத்தனை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நடக்கிறது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உரிமம் வழங்கியும்கூட ஒருவர் வாகனத்தை ஓட்டத் தகுதியானவர் என்று கூறிவிட முடியாத அவலம் இன்று நிலவுகிறது.

சென்னை சிறுமி ஸ்ருதி முதல் அதே சென்னை மாணவி பெரியநாயகி வரை ஒவ்வொருவரையும் பலிகொண்ட அனைத்து சம்பவங்களுமே இந்த விதிமுறைகள் மீறப்பட்டதால் நடந்தவைதாம்.

ஓராயிரம் கனவுகளை புத்தகப் பை, சாப்பாட்டுக் கூடையுடன் சுமந்துகொண்டு பள்ளிக்குச் செல்லும் சிறார்கள், இதுபோன்ற அலட்சியத்தால் நிகழும் விபத்துகளில் சிக்கி சிதைந்துபோவதை இனியும் எத்தனை நாள்களுக்குத்தான் பார்ப்பது?

வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் உணர்ந்தால்தான் விபத்துகள் குறையும்.விபத்தில் ஓர் உயிர் பறிபோவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால், அந்த விபத்து ஏற்படுத்தும் இழப்பானது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தரும் வலி ஆண்டாண்டு காலத்துக்கும் ஆற்ற முடியாதது. இதை வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் உணர்ந்தால்தான் விபத்துக்கள் குறையும்

0 comments:

Post a Comment

Kindly post a comment.