Friday, September 21, 2012

தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள் !

தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்!

மனித உள்ளத்தைப் புனிதப்படுத்தும் பக்திப்பாக்கள் தமிழ்மொழியிற்போல, வேறு மொழிகளில் இல்லை. வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலி என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால், உலகில் பக்தியின் மொழி தமிழே ஆகும்.

-தனிநாயகம் அடிகள்

தமிழ் எழுத்துக்களின் ஒப்புயர்வில்லாதத் தனிச்சிறப்பைக் கண்டு வியந்து தாமும் தமிழ் மாணவர் என்று பெருமிதங்கொண்ட மேனாட்டறிஞர் பலர். இவர்களில், தூய அடிகளார் ஒருவர், தமிழ் எழுத்துக்களில் மந்திரப் பொருள்கள் ( Mystic  Signification) மறைந்து பொதிந்து கிடக்கின்றன வென்றும்; அவைகளைக் காண்பதற்கு நுண்ணறிவும் தெய்வத் தன்மையும் பொருந்திய முதல் மாணவர் ஒருவர் உதிக்க வேண்டுமென்றும் தமிழ்த் தாயை வாழ்த்துகின்றனர். முருகப் பெருமானின் திருவுருவமே தூய தமிழ் எழுத்துக்களாய் அமையப் பெற்றுள்ளன வென்று சிவ, ஆகம நூல்கள் ஐயந்திரிபற ஓதுகின்றன. -தி.இரா.அண்ணாமலைப் பிள்ளை

இன்றைய உலக மொழிகளில் தமக்கெனத் தனியாகத் தாமே எழுத்து வகுத்துக்கொண்ட மொழிகள் தமிழும் தமிழின் மொழிகளும் மட்டுமே. இஃது இன்றைய உலகப் பொது மக்களுக்குத் தெரியவராத செய்தி. மாணவருலகும் அறிஞரும் கூடக் கவனியாத மெய்ம்மை ஆகும். ஆயினும் இது வரலாறு காட்டும் உண்மை. தனக்கென எண் இலக்கமும் எண் மானமும் வகுத்துக்கொண்ட உலகின் ஒரே மொழிகூடத் தமிழே! மற்ற எல்லா மொழிகளும் அதை அப்படியே மேற்கொண்டோ, சிறிது திரிந்தோ இன்றுவரை வழங்குகின்றன. -கா.அப்பாதுரை

தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழ் அமிழ்தினும் இனியதென இமிழ்கடல் வரைப்பில் எல்லோராலும் போற்றப்பெறுவது. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே'யும், "முன்தோன்றி மூத்து'ப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருவது. பழமையும் பெருமையும் வாய்ந்த இது புதுமையும் பொருந்தி, இன்றும் உலக வழக்கழியாது என்றும் நின்று நிலவுதற்குரிய "உயர்தனிச் செம்மொழி' எனற்பாலது.    -சரவண.ஆறுமுக முதலியார்

சொற்பெருக்கும், கலைநுட்ப அழகும், பண்பட்ட தாய்மையும் உடையதாக மனிதர் பேசும் மொழிகளுள் ஒன்று தமிழ். -ஹட்சன் டெய்லர்

தமிழ்மொழியில் விளங்கும் அகத்துறைப்பாக்கள் (கர்ஸ்ங்-ல்ர்ங்ற்ழ்ஹ்), உலகப் பேரிலக்கியங்களோடு ஒப்பிடத்தக்க உயர்வுடையவை. தமிழில் உள்ள அறத்துறைப் பாக்கள் ( Ethical  Poetry  ) போன்று வேறு மொழிகளில் பாடல்கள் இல்லை. -வீரமாமுனிவர்

தமிழ், கிரேக்க மொழியினும் நயமான, நுட்பமான செய்யுள் நடையுடையது. லத்தீன் மொழியினும் நிரம்பி வழியும் இலக்கணச் செல்வமும் பூரணத்துவமும் உடையது. ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளுக்கு நிகரான நிறைவும் ஆற்றலும் உடையது. -வின்ஸ்லோ

திராவிட மொழிகளில் மிகத்திருத்தம் பெற்ற மொழியான தமிழ், வடமொழியின் துணையின்றித் தனித்தியங்கவும், ஏன் ஒலியுடன் திகழவும் வல்லமையுடையது. தமிழ்மொழியில் வரும் சுட்டு, வினாப் பெயர்களின் அழகான தத்துவார்த்தமான ஒழுங்குமுறை வேறு எம்மொழியிலுமில்லை.

-கால்டுவெல் 


 


 

சுருங்கச் சொல்லி, அதே சமயம் ஆற்றலையும், இணைத்துத் தருவதில் தமிழுக்கு நிகரான மொழி இல்லை. மனதின் இயல்பை விளக்கியுரைப்பதிலும் தமிழைப்போல், உள்ளத்தைத் தொட்டுத் தத்துவ விளக்கம் செய்வதிலும் வேறு மொழிகள் ஏதும் இல்லை.  -பெர்சிவல்

மிச் சீர்திருந்திய வளர்ச்சியும், தன் நாட்டுக்குரிய சொந்த இலக்கியங்களில் வளமும் செறிவும் நிரம்பியது தமிழ்.  -மாக்ஸ் முல்லர்

தமிழ் சொற்செல்வம் படைத்த ஒரு தனிமொழி. தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி. அது தென்னிந்திய மொழிகளை ஈன்ற அன்னை. -ஜி.யு.போப்

தமிழில் சொல்வளம் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதற்குரிய காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 தமிழர் வாழ்வில் புறவாழ்க்கைக்குரிய பொருள்களும் சிந்தனைக்குரிய கருத்துக்களும் நாளடைவிலே பெருகி வந்தது ஒரு காரணம்

 புலவர்கள் இலக்கியங்களை சிருஷ்டி செய்யும்போது பல திரி சொற்களை ஆக்கிக்கொண்டது மற்றொரு காரணம்

. வேற்று நாட்டுப் பொருளும் கருத்தும் இலக்கியமும் தமிழர் வாழ்க்கையிலே கலந்தது மூன்றாவது காரணம்.

தமிழ் மொழியிலே சொல்வளம் நிரம்பியிருப்பதற்குக் காரணம் தமிழர்களுடைய பரந்த நோக்கமே ஆகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளுக்குள் தமிழே சொல் வளத்தில் தலைசிறந்து நிற்கிறது.

-கி.வா.ஜகந்நாதன்

நன்றி :- தமிழ்மணி-தினமணி, 16-09-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.