கிழக்கு மலைத் தொடர்............
இந்திய
நாட்டை வேளாண் பெருநாடாகக் பொலிவுறச் செய்யும் தகுதிவாய்ந்த வாய்ப்புகளைத்
தந்து உணவுப்பொருள் உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இடத்தையும், தொடர்ந்து
கொடுத்துக்கொண்டு இருப்பவை இயற்கை வளங்கள் அத்தனையும் தனக்குள்ளே
கொண்டுள்ள மலைகளும் அதன் காடுகளுமென்றால் அது மிகையாகுமா?
சைபீரியாவின்
கடுங்குளிர் மிகுந்த உலர் மற்றும் கோடைக்காற்றை இந்தியத் துணைக்
கண்டத்திற்குள் அண்டவிடாமல் நின்று நிலைத்துத் தடுக்கும் பணியை காலங்கள்
கடந்து மேற்கொண்டு, ஈரப்பதம் மிக்க பருவகால மழைக்காற்றை நாடு முழுவதும்
கொண்டு செலுத்துவது இமயமலையன்றி வேறில்லை.
இமயமலைக்கு அடுத்தபடியாக
உன்னதமான மலைச்சிகரங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கி தென்னகத்தை வளங்கொழிக்கச்
செய்தது நீலகிரி மற்றும் ஆனைமலைத் தொடர்கள், மேற்குக்கரை எல்லையான அரபிக்
கடற்கரைக்கு இணைச் சுவரினைப்போல சங்கிலித் தொடராய் இம்மலை விளங்குகிறது.
மும்பைக்கு
சற்று மேற்கே தோன்றி முக்கடல் சங்கமிக்கும் குமரி முனைவரை இம்மலை நீண்டு
காணப்படுகிறது. இம்மலைத் தொடர்கள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால்
சைபீரியாவின் ஸ்டெபி சமவெளிபோல வறண்ட பாலைவனமாக இந்தியா இருந்திருக்கும்.
இமயமலைத்
தொடர் முழுவதுமே ஒரே ஒரு தனிவகையைச் சார்ந்தவை. ஆனால், மேற்குத் தொடர்ச்சி
மலைகள் உலகத்திலுள்ள இன்னபிற மலைத் தொடர்களுக்கு நிகராக விளங்குபவை.
இதனுடைய எழிலும், தோற்றமும், இயற்கையின் பசுமைச் செழுமையும், தனியிடம்
பெற்றிருப்பது பெருஞ்சிறப்பாகும்.
இமயமும், நீலகிரி மலையும் நமது
தீபகற்பத்தின் இயற்கையின் அரும்பெரும் கொடை எனக்கொண்டாலும், கிழக்குத்
தொடர்ச்சி மலைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
சாத்புரா,
விந்தியம், ஆரவல்லி மலைத்தொடர்களும், காசி, காரோ போன்ற மலைக்குன்றுகளும்
குறைவில்லாமல் இந்திய உயிரின மேன்மைக்குத் துணையாக இருக்கின்றன என்பதையும்
மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு மலைத்தொடர்கள்
சூழ்ந்துள்ளன. ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைகள், இரண்டாவது கிழக்குத்
தொடர்ச்சி மலைகள். வடகிழக்காகத் தொடங்கி தென்மேற்காக அமைந்துள்ள மலைகளை
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்கிறோம். உண்மையில் இஃது தொடர்ச்சியாக,
அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போன்று அமையப் பெற்றதல்ல. மகா நதி
தொடங்கி வைகை நதி வரையிலான பகுதிகளில் உள்ள பல்வேறு மலைகளின் தொகுப்பே
இம்மலைத் தொடர்ச்சி.
இம்மலைத் தொடரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஒரிசாவில் (ஒடிசா) தொடங்கி ஆந்திரத்தின் குண்டூர் வரையிலான மலைகளை வடக்குப்
பகுதியாகவும், குண்டூரில் இருந்து தமிழக எல்லை வரையிலானவற்றை
நடுப்பகுதியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைந்துள்ளவற்றை
நிறைவுப்பகுதியாகவும் வரையறுத்துள்ளனர்.நிறைவுப் பகுதியானது தென் மேற்காகச் சென்று நீலகிரி மலையைச் சந்திக்கிறது.
கொல்லிமலை,
பச்சைமலை, ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, சேர்வராயன்மலை, அழகர்மலை மற்றும்
கரூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள
சிறுமலை என்று வழங்கப்படும் மலைத்தொகுதி வரை உள்ள அனைத்து உயரங்குறைவான
மலைக்குன்றுகளும் கிழக்குத் தொடர்ச்சி மலை என்றே அழைக்கப்படுகின்றன. சுமார்
400 மீட்டர் முதல் 1,650 மீட்டர்கள் வரை உயரமுள்ள குன்றுகளால் ஆனது
இம்மலைக்குடும்பம்.
பூமத்திய ரேகை மழை மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள
இம்மலைப் பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையாலும், தென்மேற்குப் பருவ
மழையாலும் மழை பெறுகிறது. இம்மலைத்தொடரின் வடக்குப்பகுதி (ஒடிசா, ஆந்திரம்)
ஆண்டொன்றுக்கு 1,200 மில்லி மீட்டர் முதல் 1,600 மில்லி மீட்டர் வரை மழைப்
பொழிவைப் பெறுகிறது. ஆந்திரம் 600 மில்லி மீட்டரும், தெற்குப் பகுதியாக
உள்ள தமிழ்நாடு 1,000 மில்லி மீட்டரும் மழையைப் பெறுகின்றன. இதனால் மலை
உச்சிகளைத் தவிர, பிற பகுதிகளில் அரை வறட்சி தட்ப வெப்பநிலையே நிலவுகிறது.
வெப்பநிலையும்
வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகிறது. ஜனவரியில் 20 டிகிரி செல்சியஸ் முதல்
25 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உள்ளது. வடக்கிலிருந்து மேற்காகச்
செல்லச்செல்ல வெப்பநிலை அதிகரித்து 41 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையைப்போல ஆண்டு முழுவதுமான தட்பவெப்பநிலையை இம்மலை
கொண்டிருக்கவில்லை.
தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் மொத்த
பரப்பளவு 98,000 சதுர கிலோ மீட்டர்களாகும். சேர்வராயன் மலை தமிழகத்தின்
இதயம் போன்று அமைந்துள்ளது. திசைகள்தோறும் சமவெளியில் சூழப்பட்ட இம்மலை 900
மீட்டர் முதல் 1,624 மீட்டர் வரையுள்ள முகடுகளைக் கொண்டது. தகுதியான மழை
வளத்தின் மூலம் ஆரணியாறு, பாலாறு, பெண்ணையாறு, காவிரியாறு போன்றவை
நீர்வரத்துப்பெற வேண்டும். ஆனால், நடப்பதில்லை.
ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில் மேற்கண்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மீது அதிகமான
கவனம் செலுத்தப்படவில்லை. காரணம் இங்கு பழங்குடி மக்களாக வாழ்ந்து
வந்தவர்களுக்கு மலேரியா இருப்பதாக அறிந்து இம்மலைகள் மீது ஆதிக்கம் செலுத்த
அவர்கள் பயந்தனர்.
இருப்பினும் 1800-களில் இம்மலைத் தொடரை அளக்கும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் மலேரியா பயத்தால் தோல்வி அடைந்தன.
1820-1829களில் பல்வேறு வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
பின்னர் சேர்வராயன் மலைப்பகுதிகளில் நில அளவை செய்யப்பட்டது. தொடர்ந்து
1840-ம் ஆண்டுகளில் ரயில் பாதைகள் அமைப்பதற்கான (ஸ்லீப்பர் கட்டைகள்)
மரங்கள் இம் மலையிலிருந்து பெருமளவு வெட்டப்பட்டன.
முன்னதாக, அதாவது
1820-1829-ம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.டி.காக்பெர்ன்,
கிரேன்ஞ் எஸ்டேட் என்ற இடத்தில் தங்கினார். அவர்தான் காபிப் பயிரை இங்கு
அறிமுகம் செய்து வைத்தார். அவரே ஆப்பிரிக்காவில் இருந்து ஆப்பிள் பியர்
உள்ளிட்ட பழங்களையும் பயிர் செய்தார். இதன் காரணமாகவே இங்கிருந்து காபி
நீலகிரிக்கு அறிமுகமானது. மலையின் பூர்வீகக் குடிகள் கேழ்வரகு, சாமை
போன்றவற்றையே பாரம்பரியமாக பயிர் செய்துவந்த நிலை காபியால் முற்றிலும்
காலியானது. மலைவாழ் மக்கள் உழைப்பின் நிமித்தம் பிழியப்பட்டனர்.
1841
மற்றும் 1866-ம் ஆண்டுகளில் மீண்டும் சர்வே செய்யப்பட்டது. 1900-ம் ஆண்டு
ஏற்காடு-சேலம் சாலைத்திட்டம் தொடங்கி 1903-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
1929-ல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 1930-ம் ஆண்டில்
இம்மலைக்கு மின்சாரம் வந்தது. பின்னடைவும் வந்தது.
மெல்ல மெல்ல
உலகத்தின் கண்களுக்கு தூரத்தில் இருந்து தென்பட்ட கிழக்குத் தொடர்ச்சி
மலைகளின் முக்கியப் பகுதிகள் மனிதரின் கரங்களுக்குள் சிக்கின. மலைகளின்
உயிர் நாடியாக இருந்த மரங்கள் நாளொன்றுக்கு பலநூறு டன் வெட்டப்பட்டு
கீழிறக்கப்படுகின்றன. இதனால் குறிப்பாக, சேர்வராயனின் சரபங்கா மற்றும்
திருமணிமுத்தாறு ஆகிய இரு நதிகள் காய்ந்து வறண்டுவிட்டன. இதே நிலைதான்
கிழக்குத் தொடர்ச்சி மலை முழுதும்.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின்
முக்கியப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட 204-க்கும் மேற்பட்ட களைகள் ஆதிக்கம்
செலுத்துகின்றன. பாரம்பரியமான பூவினங்கள் சுமார் 62 வகை முற்றிலுமாக
அழிந்துவிட்டன.
மேலும் 20 வகை பூவினங்கள் அரிய வகைகளாகிவிட்டன. 3
இனங்கள் உச்சபட்ச அழிவு நிலையில் உள்ளன என தமிழகத்தின் "சுற்றுச்சூழல்
ஆய்வறிக்கை - 2005' வேதனையுடன் தெரிவிக்கிறது. அதே ஆய்வறிக்கை கிழக்குத்
தொடர்ச்சி மலைத்தொடரின் பல்வேறு இடங்களில் அன்னியத் தாவர இனங்கள் அறிமுகம்
செய்யப்பட்டு உள்ளூர் இனங்களை ஆதிக்கம்செய்து அழித்து வருகின்றன என்று
தெரிவிக்கிறது.
லேன்டானா, காமரா என்ற வகையினம் வனங்களின்
உட்பகுதியையும், குளங்களை ஐகோர்னியா கிராஸ்பைஸ் என்ற தாவர வகையினமும்,
நீர்வளத்தைப் பாதித்து வருகின்றன. சமவெளிகளில் பரவிவரும் பார்த்தீனியம்,
வனங்களை ஆக்கிரமித்து கடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை
ஏற்படுத்துகிறது என்கிறது அறிக்கை.
மலைகளில் உள்ள இடங்களில் மேக்னசைட்
கல்லும், பாக்சைட் கனிமமும், டன் கணக்கில் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த
நிலை மலையின் உறுதித்தன்மையை நாளும் பாதித்து வருகிறது. காடுகள்
விரிவாக்கம் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவது
நிறுத்தப்பட வேண்டும். லட்சக்கணக்கான ஹெக்டேர்கள் அளவிலான அரசின் காட்டு
நிலங்கள் ஜட்ரோபா எனும் காட்டு ஆமணக்கு போன்ற எரிபொருள் தாவரங்கள் பயிரிட
அழிக்கப்படுகின்றது.
1864-ம் ஆண்டு வனத்துறையை ஆங்கில அரசு நிறுவியது.
"அறிவியல் பூர்வமான காடு மேலாண்மை' எனும் பெயரில் நமது மண்ணுக்கும்
மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்புடையதல்லாத செயல்களைச் செய்து
கோடிக்கணக்கில் லாபமீட்டி மலைவளம், காடுவளம் ஆகியவற்றை அழித்தொழித்தது.
இப்போது இதே பணியைத்தான் நம்மவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்பது
பெருந்துயரமாகும்.
""காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும்
எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி
வேறில்லை'' என்றார் பாரதி.
வனங்களும், மலைகளும் மனித குலத்தின்
வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனோபாவத்திற்கு நாம் உடனே மாற வேண்டிய
கட்டாயத்தில் உள்ளோம். மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் அவை நமக்குத் தகுந்த உதவிகள் செய்வது சீராக இருக்காது. அதற்கான
வாய்ப்புகளைத் தொடர்ந்து நாம் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கப் போகின்றோமா
என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி.
நன்றி, தினமணி, 15 Sep 2012 12:00:00 AM IST
0 comments:
Post a Comment
Kindly post a comment.