Sunday, September 23, 2012

என்.பி.ஆர்: நாட்டின் முதல் உயிர்க்கோளக் காப்பகத்திற்கு வயது 25!







ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுதும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இந்த உயிர்க்கோளத்தின் கடைசி வாழ்விடமாக அவை நீலகிரி உயிர்க்கோளத்தில் இருக்கும்.''

 இந்த வார்த்தைகள் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விலங்கியல் வல்லுநர்களின் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவலாகும்.

 அந்த அளவுக்கு உலகிலுள்ள உயிர்க்கோளங்களில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் அல்லது உயிர்க்கோள காப்பகம் (என்.பி.ஆர்) என அழைக்கப்படும் பகுதி சிறப்பு மண்டலமாக அமைந்துள்ளது.

நாம் வாழும் பூமிக்கு உயிர்க்கோளம் (பயோஸ்பியர்) என்றொரு பெயரும் உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் பூமியைத்தவிர வேறு எந்தப் பகுதியிலும் உயிரினங்கள் இருப்பது தொடர்பாக இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படாததாலேயே பூமிக்கு மட்டும் இத்தகைய பெயர் உள்ளது.

 நாம் வாழும் புவியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 800 கோடி மனித இனமும்  ஒன்றாகும்.

 உயிர்க்கோளத்தில் உயிர் வாழத் தேவையான சூழலை உருவாக்கித் தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். அந்த இடங்களே உயிர்க்கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோளக் காப்பகங்கள் என யுனெஸ்கோ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோளக் காப்பகம் நீலகிரி. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோவின் அங்கீகாரம் இந்த மலைக்கு கிடைத்து தற்போது 25 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளது.

 தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அரவணைத்து நிற்கும் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். சுமார் 5,560 ச.கி.மீ பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதிகளில் 1,527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 1,455 ச.கி.மீ. பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள மண்டலம்.

 இப்பகுதியைக் குறித்து முழுமையாக ஆய்வை நடத்தி வரும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் துணைத் தலைவர் ம.கணேஷ் கூறுகையில், ""இந்த உயிர்க்கோள மண்டலத்தில் 100 வகையான பாலூட்டிகளும், 50 வகையிலான பறவைகளும், 80 வகையான ஊர்வனவும், 39 வகையான மீன்களும், 316 வகையிலான பட்டாம்பூச்சிகளும் உள்ளன. அதேபோல, 3,300 வகையிலான பூக்கும் தாவரங்களும் இங்குள்ளன. இவற்றில் 1,232 வகையான தாவரங்கள் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மட்டுமே காணக் கிடைப்பவை'' என்றார்.

 இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலுமே குறைந்து வரும் சூழலில் நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதே இப்பகுதியின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழந்துவரும் ஒரே பகுதி நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே என்றால் மிகையல்ல.

 அதனால்தான் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழவிடமாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மைதான். இப்போது 25 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மேலும் பல நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இதே பெருமையுடன் திகழ வேண்டுமென்பதே இயற்கை ஆர்வலர்களின் பேராசையாகும்.

-ஏ.பேட்ரிக்

நன்றி :- 16-09-2012 தினமணி  ஞாயிறு கொண்டாட்டம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.