இன்டர்நெட் மூலம் நடக்கும் "சைபர்' குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களால் தனிநபர்கள் பாதிக்கப்பட்டனர், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என்ற நிலை மாறி நாட்டையே உலுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றனர் இன்டர்நெட் குற்றவாளிகள்.
சமீபத்தில் வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக இன்டர்நெட் மூலம் பரவிய வதந்தியால் நாடே கொந்தளிப்பான சூழ்நிலைக்கு உள்ளானது. இதன் பாதிப்பை அனைவருமே உணர்ந்தோம்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை மகிழ்வுடன் அனுபவிக்கும் அதே தருணத்தில் இதுபோன்ற இணையதள சதிகாரர்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயம்.
இ-மெயில்கள், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள், புகைப்படங்கள், டுவிட்டர் தகவல்கள் உள்ளிட்டவை எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? அதன் பின்னணி என்ன? அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்காமல், நண்பர்களுடன் அதனைப் பகிர்ந்து, வதந்திகளை பரவச் செய்யும் ஒவ்வொருவரும் அவரை அறியாமலேயே சைபர் குற்றவாளி ஆகிறார்கள், சமூக விரோதிகளுக்குத் துணை போகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது சைபர் கிரைம். சர்வதேச அளவில் "சைபர் போர்' ஏற்படுவதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளதை வைத்தே பிரச்னை எந்த அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
சமீபத்தில் செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்து தாக்கியது "ஷமூன்' வைரஸ். இன்டர்நெட் மூலம் பரவிய இந்த வைரஸ் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை செயல் இழக்கவைத்து அதிர்ச்சி அளித்தது.
எண்ணெய் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வைரஸ்களை ஏவிவிட்டது யார் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட அந்நிறுவனங்களுக்கு ஒருவார காலம் பிடித்தது.
இக்காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பு பல ஆயிரம் கோடி.
இதற்கு முன் ஈரானின் அணுசக்தி மையத்தை முடக்க அமெரிக்கா ஏவிவிட்ட "ஸ்டக்ஸ்நெட்' வைரஸ், மத்திய கிழக்கு நாடுகளை உளவு பார்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தயாரித்து பரவிட்டதாக தெரியவந்துள்ள "ஃபிளேம்' வைரஸ் ஆகியவை இன்டர்நெட்டில் பரவியதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த வைரஸ்கள் குறித்த தகவல் வெளிஉலகுக்குத் தெரியவந்தது. ஃபிளேம் வைரûஸ முற்றிலுமாக ஒழிக்க இப்போது வரை வழியில்லாமல் திண்டாடும் நிலைதான் உள்ளது.
இன்டர்நெட் மூலம் தொடுக்கப்படும் இத்தகைய சைபர் போரால் பொருளாதார இழப்புகளை மட்டுமின்றி பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
எதிர்காலத்தில், தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து படகில் ஏற்றி அனுப்பியோ, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வெடிக்கச் செய்தோ தாக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை வழக்கொழிந்த ஆயுதங்கள் ஆகிவிடும்.
வேண்டாத நாடுகளைத் தாக்க வல்லரசு நாடுகளுக்குப் போர் விமானங்களோ, அணுகுண்டுகளோ தேவைப்படாது.
நமது அருகில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் மூலமே நம் மீது தாக்குதல்கள் நடத்தப்படும். இதற்கு, இன்டர்நெட் முக்கிய ஆயுதம் தாங்கும் கருவியாக இருக்கும்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பிறநாடுகளின் பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட ரகசிய தகவல்களைத் திருடுவதும், வெப்சைட்டுகளை முடக்குவதும் பழங்கதையாகிவிடும்.
மின்சாரம், எரிசக்தி, அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை பங்குச் சந்தைகள், ரயில், விமானப் போக்குவரத்து, அணுசக்தித் துறை, எரிபொருள், குடிநீர் சப்ளை என அனைத்துமே இப்போது மேலைநாடுகளில் முற்றிலுமாக கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் மிகவேகமாக அனைத்துத் துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகின்றன.
இதனால் இன்டர்நெட் மூலம் புகுந்துவிடும் பயங்கரவாதிகளால், தகவல் தொழில் நுட்பத்திலும், கம்ப்யூட்டர் வைரஸ்களை உருவாக்குவதில் கைதேர்ந்த ஒரு சிலரது உதவியுடன் நாட்டின் மின் இணைப்பை ஒரே நேரத்தில் முற்றிலுமாகத் துண்டிக்க முடியும்.
அரசு நிர்வாகம், பங்குச்சந்தை போன்றவற்றில் சில நொடிகளில் சீரழிவை ஏற்படுத்த முடியும். மின்சார ரயில்கள் அனைத்தையும் தடம்புரளச் செய்ய முடியும். வானில் பறந்து செல்லும் விமானங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நினைத்த இடத்தில் மோதச் செய்யவும் முடியும். எரிபொருள் பைப் லைன்களில் கூடுதல் வெப்பத்தை உருவாக்கி அவற்றை வெடித்துச் சிதறடிக்க முடியும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக அணுமின் நிலைய கம்ப்யூட்டர்களுக்குள் இவர்கள் புகுந்தால் நாட்டையே சுடுகாடாக மாற்றிவிட முடியும். இவற்றில் எதுவுமே மிகையான கற்பனையல்ல. இவை அனைத்துமே, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், புஷ் ஆகியோருக்கு சைபர் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த ரிச்சர்ட் ஏ.கிளார்க் "எதிர்காலத்தில் நடக்க சாத்தியமுள்ளவை' என்று உறுதியிட்டுக் கூறியிருப்பவை.
வளர்ந்த நாடுகளிலேயே சூழ்நிலை இவ்வாறு இருக்க, இந்தியா போன்ற நாடுகளில் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைக்கும் பயங்கரவாதிகளையே பிடிக்க முடியாத நிலையுள்ளது. இந்நிலையில் கண்ணுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர்களுக்கு புகுந்து தாக்கும் சைபர் பயங்கரவாதிகளை கண்டறிந்து தடுப்பது என்பது எளிதில் சாத்தியமாகாத விஷயம்.
அந்த அளவுக்கு சைபர் பயங்கரவாதிகளை அழிக்கும் தொழில்நுட்பமும் நம்மிடமில்லை. இப்போதும் கூட பல்வேறு முக்கியத் துறைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில்கூட சாதாரணமான வைரஸ் பாதுகாப்பு முறைகளே உள்ளன. சைபர் குற்றங்களில் கைதேர்ந்தவர்களுக்கு இதனை உடைப்பது என்பது மிகச்சாதாரணமான விஷயம்.
ஆபத்துகள் உள்ளன என்பதற்காக இன்டர்நெட் இணைப்பைப் பிடுங்கிவிட்டு, கம்ப்யூட்டர்களைப் பரணில் போடுங்கள் என்று கூறமுடியாது.
சைபர் பயங்கரவாதிகளால் எந்தவகையான தாக்குதல்களையும் நடத்த முடியும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே நினைவூட்ட வேண்டும்.
நன்றி :- தினமணி படைப்பு :- க.வெங்கடேஸ்வரன்
0 comments:
Post a Comment
Kindly post a comment.