Saturday, September 1, 2012

பி.ட்டி கத்தரிக்குத் தடை செய்! 10 ஆண்டுத் தாக்கமும் தற்கொலைகளும்!



 நன்றி.:-ஆர். செல்வம்
First Published : 28 Aug 2012 12:43:57 AM IST

வாதப் பிரதிவாதங்கள், எதிர்ப்புகளுடன் பி.ட்டி பருத்தி அரசு அனுமதியுடன் இந்தியாவில் நுழைந்து 10 ஆண்டுகளாகிவிட்டது.

 பி.ட்டியின் மீது விமர்சனங்கள் தொடர்ந்த நிலையிலும் வேகமாகப் பரவி 95% பரப்பு பருத்தி பி.ட்டி என்றானது. இந்தியாவில் பி.ட்டி பருத்தியைக் கடுமையாக விமர்சித்தவர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆடைகளும் பி.ட்டி பருத்தியால்தான் ஆனது என்பதே உண்மை.

 "அடுத்த பத்தாண்டுகளில் எல்லா விதைகளும் எங்களுடையதாவே இருக்க வேண்டும்' என்று மான்சான்டோ அதிகாரியொருவர் கூறியது பருத்தி ஆடைகளில் நடந்துள்ளது.

 உண்மையில் பி.ட்டி பருத்தி இந்தியப் பருத்திப் பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. 2 லட்சம் பருத்தி விவசாயிகள் தற்கொலைகளுக்கு மத்தியில் இந்தியா பருத்தி ஏற்றுமதி நாடாக மாறியுள்ளதென்பது நேரெதிர் உண்மைகள்.

 "பி.ட்டி பருத்தியால்தான் இந்தியா பருத்தி விளைச்சலில் உச்சத்தை எட்டியுள்ளது. ஆகவே, இந்திய விவசாயத்தை ஒட்டுமொத்தமாக மரபணு மாற்று விவசாயமாக மாற்ற வேண்டும்' என்ற கருத்து வளர்க்கப்பட்டு 50-க்கும் மேலான உணவுப் பயிர்கள் உள்ளிட்ட 83 பயிர்களின் மரபணு மாற்றப்படுகிறது. ஆனால், பி.ட்டி பருத்தியின் 10 ஆண்டுகால தாக்கம் பற்றி எவரும் பேச மறுக்கிறார்கள்.

 பிட்.டி பருத்தியின் பத்தாண்டுகள் பற்றி நடுநிலையாக ஆராய்ந்த வெகு சிலரின் முடிவுகள் மக்கள் அமைப்புகள் கூறிய, "பி.ட்டி மரபணுவால் விளைச்சல் உயரவில்லை, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு குறையவில்லை, ரசாயன உரத் தேவை அதிகமாகியுள்ளது' போன்ற விமர்சனங்களை உண்மையென்கிறது.

 ஆரம்பத்திலேயே ஆராய்ந்திருந்தால் பல்லாயிரம் தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். 10 ஆண்டுகளாக நம் விஞ்ஞானிகள் ஏன் ஆராயவில்லை என்பதற்குப் பதில் நமக்கே தெரியும்.

 2000-ல் ஹெக்டேருக்கு 278 கிலோவாக இருந்த பஞ்சு உற்பத்தி இன்று 480 கிலோவில் நிற்கிறது. திணிக்கப்பட்ட பி.ட்டி மரபணுக்கள் காய்ப்புழுக்களைக் கொன்று அதனால் காய்களைக் காப்பாற்றி விளைச்சலை 20 சதவீதத்துக்கு அதிகரிக்கும் என்றனர்.

 காய்ப் புழுக்கள் கட்டுப்பட்டுத்தப்பட்டதாகக் கொண்டாலும் விளைச்சல் 20 சதவீதம் உயர்வுதானே இருக்க முடியும். ஏறத்தாழ 100 சதவீதம் அதிகம் என்பது பொருந்தி வரவில்லையே? இது குறித்து ஆராய்ந்த மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர். கேசவ் கராந்தி உண்மைகளை அடுக்குகிறார்.

 பி.ட்டி அனுமதிக்கு முந்தைய ஆண்டான 2000-01-ல் பருத்தி உற்பத்தி ஹெக்டேருக்கு 278 கிலோ. 02-03ல் பி.ட்டி பருத்தி அனுமதிக்கப்பட்ட முதல் ஆண்டில் பி.ட்டி பருத்தி பயிரிடப்பட்ட பரப்பு 1 சதவீதம். அப்போது பருத்தி உற்பத்தி ஹெக்டேருக்கு 302 கிலோ.

 03-04ல் பி.ட்டி பருத்தியின் பரப்பளவு 1.1 சதவீதம். உற்பத்தி அளவு 399 கிலோ. அதாவது 33.7 சதவீதம் அதிகரிப்பு. 04-05ல் பி.ட்டியின் மொத்த பரப்பு 5.7 விழுக்காடாக உயரும்போது விளைச்சலின் அளவு 18 சதவீதம் அதிகரித்து 470 கிலோவானது.

 இவ்விரு ஆண்டுகளில் விளைச்சல் அதிகரிப்பு 52 சதவீதம். இத்தகு அதிர்ச்சியூட்டும் விளைச்சல் அதிகரிப்பு இந்தியாவில் எக்காலத்திலும் எப்பயிரிலும் நடக்கவில்லை.

 இக்காலகட்டத்தில் கோதுமை, நெல் போன்ற பயிர்களில் விளைச்சல் 4 சதவீதம் கூட உயராதபோது, பருத்தியில் மட்டும் விளைச்சல் 52 சதவீதம் உயர்வு எப்படி?

 பி.ட்டியின் பரப்பு வெறும் 5.7 சதவீதம் ஆக இருக்கும்போதே 52 சதவீதம் அளவுக்கு உயர்ந்த விளைச்சல் பி.ட்டியின் பரப்பு 95 சதவீதத்துக்கு உயர்ந்தபோது இன்னும் அதிகரித்திருக்க வேண்டுமல்லவா?

 பி.ட்டி பருத்தியின் பரப்பு 90 சதவீதத்துக்கு வந்தபோது விளைச்சல் அளவு 481 கிலோ மட்டுமே. எப்படியிருப்பினும் 278-லிருந்து 481-க்கு உயரக் காரணம் என்ன?

 1951-52-ல் இந்திய விளைச்சலின் அளவு ஹெக்டருக்கு 92 கிலோ. அப்போதிருந்தது குட்டை இழைப் பாரம்பரிய பருத்தி ரகங்கள். நூற்பு இயந்திரங்களுக்கான நீண்ட இழை பருத்திக்காக வீரியவிதை என்ற பெயரில் ஹைபிரீடுகள் நுழைக்கப்பட்டதால் விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது.

 ஹைபிரீடுகளில் ஹைபிரீடு விகர் என்ற தன்மையால் விளைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் விதை வாங்க வேண்டும், அதிக தண்ணீர், உரம், பூச்சிக்கொல்லிகள் வேண்டும். இல்லாவிடில், வீரியமில்லா வெற்று விதைகளே. ஹைபிரீடுகளுக்கு மாறுவது 1950-களின் ஆரம்பத்திலேயே தொடங்கினாலும் 2000-க்குப் பிறகே வேகமெடுத்தது.

 2000-த்தில் 40 சதவீதத்தில் ஹைபிரீடுகளும் பிற பரப்பில் மேம்படுத்தப்பட்ட பாரம்பரிய ரகங்களும் விதைக்கப்பட்டன. பி.ட்டி பாரம்பரிய ரகங்களில் திணிக்கப்படாமல் ஹைபிரீடுகளில் திணிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது 2002-ல். 2009-ல் 85.6 சதவீதம் பரப்பும் 2011-ல் 95 சதவீதம் பரப்பும் பி.ட்டி ஹைபிரீடுக்குள் வந்தது.

 ஆகவே இந்திய பருத்தி விளைச்சல் உயர்வு ஹைபிரீடுகளுக்கு மாறியதற்கேற்ப உயர்ந்துள்ளது. அதிக பரப்பு ஹைபிரீடு பி.ட்டிக்குள் வந்ததால் விளைச்சல் உயர்ந்தது என்று கிராந்தி கூறுகிறார்.

 2002-03-ல் 4-வது இடத்தில் இருந்து இன்று முதலிடத்திலுள்ள குஜராத்திலிருந்துதான் இன்றைய விளைச்சலில் பெரும்பகுதி கிடைக்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு லட்சம் சிறுசிறு தடுப்பணைகள் மூலம் பாசனத்தைப் பல லட்சம் ஏக்கர்களுக்கு உறுதிப்படுத்த, அதுவரை மானாவாரியாகக் கடலை, பயறு போன்றவை விளைந்த நிலத்தை விவசாயிகள் பருத்திக்கு மாற்றினர்.

 ரசாயனங்களால் பாதிப்புறாத வளமான நிலம், பாசன வசதி, விதை நேர்த்தி செய்யப்பட்ட ஹைபிரீடுகள் போன்ற காரணங்களால் அம்மாநிலம் பருத்தி விளைச்சலில் (ஹெக்டேருக்கு 700 கிலோ பஞ்சு) முதலிடம் கண்டது.

 முதலிடம் வந்த குஜராத், "சாதகமான பருவ நிலை, இயற்கையாகவே பூச்சித் தாக்குதல் குறைவாக இருந்தது போன்றவைகளே விளைச்சல் உயர்வுக்குக் காரணம் என்றும் பி.ட்டி அல்ல' என்றும் மத்திய அரசுக்கு எழுதியது.

 இந்தியாவெங்கும் இந்நிலை இருந்திருக்கிறது. அனைத்திந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டுத் திட்டம் தனது 2002-க்குப் பிந்தைய அறிக்கைகளில், பொதுவாகவே காய்ப்புழுக்களின் தாக்குதல் குறைவாகவே காணப்படுகிறது என்கிறது. அதாவது பி.ட்டி அறிமுகமான ஆண்டிலிருந்தே இயற்கையாகவே காய்ப்புழுக்களின் தாக்குதல் குறைவாக இருக்க மான்சான்டோ அதை பி.ட்டியால்தான் என்று விளம்பரப்படுத்தியது.

 குஜராத்தின் விளைச்சலில் 84 சதவீதம் பருத்தி 65 சதவீதம் அளவிலான பாசனப் பரப்பிலிருந்து ஹெக்டேருக்கு 689 கிலோவாக இருக்க, 35 சதவீதம் மானாவாரிப் பரப்பிலிருந்தோ 16 சதவீதம் அளவில் ஹெக்டேருக்கு 247 கிலோ பருத்தி கிடைக்கிறது. பாசன வசதியால் குஜராத் முதலிடம் பெற்றது.

 நெடுங்காலமாகவே பருத்தி, விதை நேர்த்தியின்றியே விதைக்கப்பட்டு வந்தது. இதனால் சுமார் 20-30 சதவீதம் இளம் பயிர்கள் பூச்சிகளுக்கு இரையாயின.

 2000-ல் இமிடோகுளோபிரிட் என்ற பூச்சிக்கொல்லி விதை நேர்த்திகென வந்தது. இமிடோகுளோபிரிட் இளம் செடிகளை 40-45 நாள்களுக்கு பல வகையான பூச்சிகளிடமிருந்து காத்தது.

 இமிடோகுளோபிரிட் விதை நேர்த்தியால் விளைச்சல் சுமார் 20-30 சதவீதம் அதிகரிக்கிறது என மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் ஏற்கெனவே கண்டறிந்ததால் இமிடோகுளோபிரிட் பூசப்பட்ட பி.ட்டி ஹைபிரீடு விதைகளை மட்டுமே நிறுவனங்கள் விற்றன. இமிடோகுளோபிரிட் தந்த 20-30 சதவீதம் கூடுதல் விளைச்சலை பி.ட்டி நிறுவனங்கள் "பி.ட்டியால்' என்றன.

 விளைச்சல் உயர்வுக்கு ரசாயன உரப் பயன்பாடும் ஒரு காரணம். பி.ட்டி ஹைபிரீடுகள் அதிக ரசாயன உரமிட்டால் மட்டுமே அதிகம் விளையும்.

 2005-ல் 4 சதவீதமாக இருந்த பி.ட்டியின் பரப்பு 10 சதவீதத்துக்கு உயரும்போது ரசாயன உரப் பயன்பாடு 107 சதவீதம் உயரும் என்றார் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவின் இணைத் தலைவராக இருந்த சி.டி.மாயி.

 ஆந்திர விவசாயப் பல்கலைக் கழகமோ பி.ட்டிக்கு 15 சதவீதம் கூடுதல் ரசாயன உரம் தேவை என்கிறது. ஆக இந்தியா பருத்தி விளைச்சலில் ஏற்றம் கண்டதற்கு ஹைபிரீடுகள், பாசன வசதி, விதை நேர்த்தி, காய்புழுத் தாக்குதல் குறைவாக இருந்தது, பொய்க்காத மழை ஆகியவைகளே ஒழிய பி.ட்டியல்ல.

 பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டைக் குறைக்கவே என்று கூறி வந்த பி.ட்டி இதையாவது செய்ததா? இந்தியாவில் தெளிக்கப்படும் மொத்த பூச்சிக்கொல்லிகளில் 50 சதவீதத்துக்கும் மேல் 5 சதவீதம் பரப்பிலுள்ள பருத்தியில்.

 ஆனாலும் காய்ப்புழுக்கள் எதிர்ப்பு சக்தியைத் தொடந்து உருவாக்கிக் கொண்டதால், கொள்வதால் கட்டுப்படவேயில்லை.

 பி.ட்டி பருத்தி வந்தால் பருத்தியில் பூச்சிக்கொல்லிகளின் அளவு குறையும், புதிய விடிவு மலரும் என்று விதை நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கான நம் விஞ்ஞானிகளும் கூற ஆட்சியாளர்களும் விவசாயிகளும் நம்பினார்கள்.

 ஆனால், 10 அண்டுகள் நிறைவில் இந்திய பயிர் பாதுகாப்பு இயக்குநரகமோ பருத்தியை முக்கிய பயிராகக் கொண்ட குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஆந்திரம் தவிர்த்து பிற மாநிலங்களில் பருத்தியில் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்கிறது.

 உண்மையில் பி.ட்டி பரப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆந்திரத்தில் குறைந்ததற்குக் காரணம் அந்த அரசு பரப்பிய பூச்சிக்கொல்லியில்லாத - பூச்சிக் கட்டுப்பாட்டு முறையேயொழிய பி.ட்டியல்ல.

 இதுமட்டுமல்ல, மான்சான்டோவின் விதை மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக தார்வாட் பல்கலைக்கழகம் உருவாக்கிய பி.ட்டி பருத்தி ரகம் தடுத்து நிறுத்தப்பட்டதும், காய்ப்புழுக்கள் பி.ட்டிக்கு எதிர்ப்பு சக்தி பெற்றது எனப் பலவும் இந்தப் பத்தாண்டுகளில் நடந்துள்ளது.

 பாரம்பரியப் பருத்தி விதைகளை இழந்ததும், 2 லட்சம் விவசாயிகளைக் கொன்றதும், வேளாண் பல்கலைக்கழகங்களை மான்சான்டோ பல்கலைக் கழகங்களாக்கியதும், மரபணு மாற்றம் மட்டுமே இந்திய விவசாயத்தைக் காக்கும் நுட்பம் என்று நம் விஞ்ஞானிகள் (???) மூளைச் சலவைக்குள்ளானதும், படித்தவர்களோ நவீனம், அறிவியல் என்ற முத்திரை குத்தினால் மூளையை மறுத்து முட்டாள்களானதும் பி.ட்டி பருத்தியின் 10 ஆண்டுகள் நமக்குச் சொல்வது.

 ""ரசாயனங்களால் பாதிப்புறாத வளமான நிலம், பாசன வசதி,

 விதை நேர்த்தி செய்யப்பட்ட ஹைபிரீடுகள் போன்ற

 காரணங்களால் குஜராத் பருத்தி விளைச்சலில்

 (ஹெக்டேருக்கு 700 கிலோ பஞ்சு) முதலிடம் கண்டது''

இயற்கையை  ஒருபோதும் 

மானுடம் வென்றிட இய்லாது;

ஆனால்,  அனுபவிக்கலாம்.





0 comments:

Post a Comment

Kindly post a comment.