Saturday, September 1, 2012

கடந்த 10 ஆண்டுகளில் பாதாளச் சாக்கடைகளில் இறங்கிப் பலியானோர் 36 பேர் !





சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் உள்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை  தொழிலாளர் நலத் துறை ஆணைய உறுப்பினர் கே.பி. கிருஷ்ணமூர்த்தி  ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு எதிராக கடந்த 1993-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் இந்தியாவில் சரிவர பின்பற்றப்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் இந்த முறை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி கழிவுகளை அகற்றும் போது நிறைய விபத்துகளைச் சந்திக்க நேருகிறது. குறிப்பாக, விஷ வாயுக்கள் தாக்கி அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது
.
இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் சட்டத்தை வலுவாகச் செயல்படுத்துவதற்கான புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

10 ஆண்டுகள்: தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடவடிக்கைகள் பெரிய அளவில் இல்லை. ஆனாலும், கழிவுகளை அகற்றும் பணியில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன
.
கடந்த 10 ஆண்டுகளில் 36 பேர் வரை இறந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடுகளும், நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதுதொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து முடிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி. முதல் சாதாரண அரசு ஊழியர் வரை அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் கழிவு நீர் அகற்றும் பணிக்காக வெறும் 78 இயந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அவை போதாது. தனியாரிடம் போதுமான இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்துவதாக ஊராட்சிகள் கருத்துத் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

உதவித் தொகை விவகாரம்: நாமக்கல்லில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உதவித் தொகையில் முறைகேடு செய்ததாக தலைமை ஆசிரியர்களும், உயரதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதுபோன்று அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழு அளவில் கிடைப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று கே.பி.கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளர் ஜீவரத்தினம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நன்றி :-தினமணி 01-09-2012 சனிக்கிழமை

0 comments:

Post a Comment

Kindly post a comment.