யுனிசெப் மற்றும் "நாளந்தா-வே' அமைப்புகள் சார்பில், ( தன்னார்வத் தொண்டு நிறுவனம் ) அண்மையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பின் தங்கிய கிராமப்புற சிறுவர், சிறுமியருக்கு குறும்படங்கள் தயாரிக்க பயிற்சியளிக்கப்பட்டன.
அதில் நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு உள்பட திரைப்படத்தை உருவாக்கும் முறைகள் குறித்து கற்றுத் தரப்பட்டன.. அப்பயிற்சியின் அடிப்படையில் குழந்தைகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து 3 குறும்படங்களை அந்த சிறுவர்கள் இயக்கியுள்ளனர்.
பொருளாதாரக் காரணங்களால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்கள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவர்கள் இயக்கிய "பள்ளிக்கூடம்' என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
குழந்தைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து தருமபுரி மாவட்ட சிறுவர்கள் "சக்கை' எனும் குறும்படத்தை இயக்கி திரையிட்டனர்.
சேலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோர்களின் பராமரிப்பில்லாத குழந்தைகள் படும் வேதனைகள் குறித்து "செவ்வாழை" எனும் படத்தை இயக்கியிருந்தனர்.
இதுவரை தமிழகத்திலும் கேரளத்திலும் 12 பயிற்சி முகாம்களை இந்த அமைப்புகள் நடத்தியுள்ளன. இது குறித்து அவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுகையில் "சிறுவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் மற்றும் குறும்படம், ஆவணப்படம் உருவாக்க பயிற்சியளிப்பதன் மூலம் அவர்களிடையே தன்னம்பிக்கை வளர்கிறது. மேலும் அவர்களின் பிரச்னைகளைத் தெரிவிப்பதற்கான ஊடகங்களை அவர்ளே உருவாக்கிக் கொள்ள முடியும்' என்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் கூறுகையில் "அடிப்படைக் கல்வி, வாழ்வாதாரம், சுகாதாரமான வாழ்வு மற்றும் பாதுகாப்பு பெற ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உண்டு என்பதை இவர்கள் பயிற்சியளித்தபோது உணர முடிந்தது. தடையில்லாமல் கல்வி கற்க ஆர்வமாக உள்ளது' என்றனர்.
நிகழ்ச்சியில், பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் வி.முரளி, யுனிசெப் அமைப்பைச் சேர்ந்த சுகாதா ராய், வித்யாசாகர், நாளந்தா-வே தன்னார்வ அமைப்பின் தலைவர் ஸ்ரீராம் வி.அய்யர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.