இலங்கை விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மற்றும் தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதற்குத் தமிழக முதல்வர் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை
(ஆகஸ்ட் 25) எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
""இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜூலை 16-ம் தேதியன்று தங்களுக்கு கடிதம் எழுதினேன். இதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
என்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இலங்கை விமானப் படை வீரர்கள் 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு பதில் இடமாற்றம் செய்த நடவடிக்கையானது, அந்த நாட்டு வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்வதில் இந்தியாவுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
தமிழக அரசுக்குத் தெரியாமல்...இந்திய அரசின் கண்டிக்கத்தக்க அந்தப் போக்கானது, இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதன் மூலம் தொடர்கிறது.
இலங்கை ராணுவ அதிகாரிகளான தெசநாயகா மொஹட்ட லாலக வெங்க்ரா, ஹேவ வாஸம் கண்டாடக ஆகியோர் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் 11 மாத பயிற்சி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் கடந்த மே 19-ம் தேதி முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்தப் பயிற்சி குறித்த உண்மைகள் எனது தலைமையிலான அரசுக்கு தெரிவிக்காமலேயே மறைக்கப்பட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை: இந்தச் செயல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது.
எனவே, வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிடவேண்டும். மேலும் இலங்கை ராணுவ வீரர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
முதல்வரின் கோரிக்கையே எங்களது கோரிக்கை: தி.மு.க.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதே திமுகவின் முடிவு என்று அக் கட்சியின் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வெலிங்டன் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடாது, அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்தக் கருத்துத்தான் திமுகவினுடையதும்.
டெசோ மாநாட்டில் இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றியுள்ளோம். அந்தக் கருத்தை இப்போதும் வலியுறுத்துகிறோம்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.