Saturday, August 18, 2012

தமிழ்ப் பாடநூலில் தமிழுக்குத் தட்டுப்பாடா?- திண்டுக்கல் தமிழ்ப் பெரியசாமிநீதித்துறையும் கல்வித்துறையும் மிகமிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய துறைகளாகும். எந்த நிலையிலும் குற்றம் செய்யாதவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிவிடக் கூடாது. அதேபோல, கல்வித்துறையின் தவறான முடிவுகளும் பிழையானவைகளும் கவனிப்பற்ற செயல்பாடுகளும் பள்ளி வளாகத்திற்குள்ளும் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் சென்றுவிடக் கூடாது.

 இதனால் சமூகமும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறை, பிரச்னைகள் எதுவுமில்லாமல் "அப்பாடா' என்று உட்கார்ந்து மூச்சுவிட்டுப் பல நாள்களாகிவிட்டன. பள்ளிக் கட்டண வழக்கு, ஆசிரியர் கொலை, மாணவர் தற்கொலை, பள்ளிப் பேருந்துப் பிரச்னை என்று மூச்சுமுட்டுகிறவரை பிரச்னைகள் மலையாகக் குவிந்துவிட்டன.

இவையனைத்தும் அவ்வப்போது நிகழும் சமூக நிகழ்வுகள் என்றாலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் பொதுமக்களுக்கு விளக்கம் தர வேண்டியதும் கல்வித்துறையின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.

 கல்வித்துறை, வல்லுநர்களைக்கொண்டு நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் நடைமுறைகளுள் பாடநூல் தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பத்துப்பேர் தயாரிக்கும் ஒரு பாடநூல், பல கோடி மாணவர்கள் கல்வி பயில அடிப்படைக் கருவியாக அமைகிறது. அதனால் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் கல்வித்துறை மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்
.
 தமிழகத்துப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களைப் பார்த்தால் நேர்த்தி தெரியவில்லை; நெருடலைத்தான் உணரமுடிகிறது. கிட்டத்தட்ட எல்லாப் பாடநூல்களிலும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழை, கருத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் களைத்துப் போய்விட்டது. இன்னும் பாடநூல்களில் உள்ள பிழைகள் முற்றிலுமாகக் களையப்படவில்லை.

 ஒன்று முதல் பத்துவரை இப்போதுள்ள பாடநூல்களுள் தமிழ்ப்பாட நூல்களில்தாம் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. புதிய அரசு பொறுப்பேற்றதும் தமிழ்ப்பாட நூல்களில் இருபத்தேழு பகுதிகள் நீக்கப்பட வேண்டியவை என அறிவித்தது

அதேசமயம் பாடநூல்களில் உள்ள கருத்துப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைப் பலரும் சுட்டிக்காட்டினர். அதன்பின்னர், மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் கூடி, நூல்களைப் படித்து ஆய்வு செய்து, பிழைகளைத் தொகுத்தனர். அவ்வாறு தொகுத்தவகையில், தமிழ்ப்பாட நூல்களில் மட்டும் நூற்றுஎழுபத்தேழு பிழைதிருத்தம், சேர்க்கை, நீக்கங்களை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து திருத்திய பதிப்புகள் வெளிவருவதற்கு முன்பே, ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை முப்பருவத் திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புக்கும் மும்மூன்று இயல்களை மட்டும் நூலாக்கிக் கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

பாடநூல்கள் தயாரிக்கத் தொடங்கிய நிலையிலேயே, ஒரு வகுப்பின் பாடநூலாசிரியர் குழுவுக்கும் பிற குழுவுக்குமிடையே பாடவைப்பு நிலை, பாட வளர்ச்சி தொடர்பான பொதுச்சிந்தனை இல்லாமற் போய்விட்டது. இதன் காரணமாக வகுப்புகளுக்கிடையே பாடப்பகுதிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடப்பொருளில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை

படைப்பாளர்கள் மீத்திறன் உடையவர்கள், அறிஞர்கள், சமூகநலம் நாடுவோர் என்பதில் ஐயமில்லை. ஆனால், பாட நூல் குழுவினர் ஒருவருடைய படைப்பையே மீண்டும் மீண்டும் இடம்பெறச் செய்து, புதியவர்களையும் புதிய செய்திகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டதை அனைவராலும் உணரமுடிகிறது. தமிழ்மொழி வற்றாத களஞ்சியமாக இருக்க, பாடநூல்களின் கருத்தமைவு செயற்கைப் பற்றாக்குறையை - பொய்யான இலக்கியத் தட்டுப்பாட்டினை - வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

 பத்து வகுப்புகளிலும் செய்யுட்பகுதியில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் பாரதியாரின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. அதே பாடநூலில் கவிமணியின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே பாடப்புத்தகத்தில் இரு கவிஞர்களின் நான்கு பாடல்கள் இடம்பெறச் செய்ய வேண்டியதன் தேவையென்னவென்று தெரியவில்லை.

 திருக்குறளில் இன்பத்துப்பால் தவிர, நூற்றெட்டு அதிகாரங்கள் எஞ்சியிருக்க, ஒழுக்கமுடைமை, வாய்மை, சான்றாண்மை, காலமறிதல், கேள்வி ஆகிய ஐந்து அதிகாரக் குறட்பாக்கள்மட்டும் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டேயுள்ளன. பிற அதிகாரங்களை அறிமுகம்செய்ய குழுவினர் ஏன் தயங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது

 சமயக் குரவர்கள் நால்வர், ஆழ்வார்கள் பன்னிருவர், சிவப்பிரகாசர், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், காசிம் புலவர், செய்குத்தம்பி பாவலர், எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை எனப் பாவலர்களும் அற, சமய நூல்களும் பலவாக இருக்க, குமரகுருபரர் ஒருவரின் பாடல் மட்டும் ஐந்து, ஏழு, எட்டு என மூன்று வகுப்புகளில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது. வள்ளலாரைப் பற்றிய பாடப்பகுதியும் அவரது பாடல்களும் ஆறு, எட்டு, பத்து ஆகிய மூன்று வகுப்புகளிலும் இடம் பெற்றள்ளது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை யாராலும் உணர முடியவில்லை.

 நாட்டு வளம், மழை வளம், வேளாண்மை, வீரம், இயற்கை ஆகியவை பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கணக்கின்றி இருக்க, தாலாட்டுப் பாடல் ஒன்றே நான்கு, ஏழு ஆகிய இரண்டு வகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.
 கதைபொதி பாடல்கள் என்னும் தொடர்நிலைச் செய்யுட்பகுதி வகுப்பின் நிலைக்கேற்ப பாடநூல்களில் இடம்பெறுவது வழக்கம். செய்யுட்களைப் படித்து, அவற்றின் தொடர்பொருளை அறிந்து, இலக்கியத்தைச் சுவைக்க வழிகோலுவது தொடர்நிலைச் செய்யுட்பகுதி. அத்தகைய இனிய பகுதியை ஐந்தாம் வகுப்பில் அறிமுகம் செய்துவிட்டுத் தொடர்ந்தாற்போல ஆறு, ஏழு வகுப்புகளில் இல்லாமற் செய்திருப்பது எத்தகைய அணுகுமுறை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

செய்யுட்பகுதி இவ்வாறிருக்க, உரைநடைப் பகுதியிலும் இம்மாதிரியான குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆறாம் வகுப்பில் உள்ள "நாடும் நகரமும்' என்னும் பாடமும் ஏழாம் வகுப்பில் உள்ள "ஊரும் பேரும்' என்னும் பாடமும் ஒரே மாதிரியான பாடக் கருத்துடையவை. இவ்விரண்டும் ஊர்ப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை விளக்குகின்றன. இவை அடுத்தடுத்து இரு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளதை என்னவென்று கூறுவது? அதேபோன்று கோவூர்கிழார் பற்றிய பாடம் ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளில் பாடமாக அமைந்துள்ளது.

 செம்மொழியின் தகுதிப்பாடுகள் பற்றிய விளக்கம் ஏழாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தெனாலிராமன் கதை ஆறாம் வகுப்பில் மட்டுமே இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. இராம்கி என்பவரது சிறுகதை ஏழாம் வகுப்பில் இரண்டு இடங்களில் பாடமாக உள்ளது. தமிழில் வேறு எதுவுமே இல்லை என்பதுபோல பாட வைப்பு நிலை அமைந்துள்ளது.

 மதுரையைச் சிறப்பிக்கும் உரைநடைப்பகுதி ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று அகராதிக் கலை, கலைக்களஞ்சியம் என்னும் ஒருதன்மைத்தாய் அமைந்த பாடப்பகுதி நான்கு, ஐந்து, எட்டு என மூன்று வகுப்புகளிலும் உள்ளன.

 நாடகக்லை, நாடகக் கலைஞர்கள் பற்றிய பாடப்பகுதி ஏழு, எட்டு வகுப்புகளில் இடம்பெற்றள்ளதைக் காணலாம். மேலும் பீர்பால் கதைகளும் இலட்சுமி எழுதிய கதைகளும் இரண்டிரண்டு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
 பாடநூல்களை

மேலும் ஆழமாகப் பார்த்தால், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஒரு சில செய்திகளையே பாடநூல்குழுவினர் திரும்பத்திரும்ப பாடமாக அமைத்துள்ளது தெளிவாகத் தெரியும். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர், ""கூறியது கூறல்'' என்பது நூலில் இடம்பெறக் கூடாத குற்றமெனக் கூறுகிறார். அந்த இலக்கண விதிமுறைகளைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பாடநூல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 தமிழறிஞர்களின் நூல்களிலிருந்து அவர்களது கட்டுரைகளைப் பாடமாக எடுத்தாள்வது பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சமச்சீர்க்கல்வி பாடநூல்களில் தமிழறிஞர்களின் கட்டுரைகள் எதுவும் பாடமாக இல்லை. அத்தகைய கட்டுரைகளால் மாணவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க. மு.வ. போன்றவர்களின் தமிழ்நடையையும் கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். மொழிப் பயிற்சியில் கொடுத்திருப்பது யானைப்பசிக்குப் போடப்பட்ட சோளப்பொரிபோல உள்ளது
.
 நான்காம் வகுப்பில் இடம்பெற்றுள்ள "சங்கப்பாடல் வர்ணனை' வகுப்பின் தரத்திற்கு ஏற்புடையதன்று. அதேசமயம் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர் குழுவினர் எழுதிய கட்டுரைகள் கருத்துச்செறிவின்றி வறட்சியாகத் தோன்றுகின்றன.

 அதியமானைப் பற்றி ஒளவையார் பாடிய புறப்பாடலில் காணப்படும் உவமை, பாடநூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
 நாளொன்றுக்கு எட்டுத்தேர்களைச் செய்யும் ஒரு தச்சன், ஒரு திங்கள் அரிதின் முயன்று, ஒரு தேருக்குரிய ஒரு சக்கரத்தை மட்டும் செய்வானாகில், அச்சக்கரம் எத்தகைய வனப்பும் உறுதியும் உடையதாக இருக்குமோ, அதுபோல பாடநூல்கள் சிறப்புடையதாக அமைய வேண்டும்.

 பலகோடி மாணவர்கள் பயன்படுத்தும் பாட நூலின் உள்ளடக்கம் பிழையற்றதாய், கருத்துவளமுடையதாய், வளர்ச்சிநிலையில் அமைந்ததாய், தமிழின் அனைத்துவகை இலக்கியங்களையும் அறிந்து கொள்ள இடந்தருவதாய் அமைவது அவசியம். என்ன வளம் இல்லை தமிழில், ஏன் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு? பாடநூல்களில் பள்ளங்கள் உண்டாக யார் காரணம்? இது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

நன்றி:-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.