Saturday, August 18, 2012

கேபிள் பற்றாக்குறை: புது இணைப்புகளைக் கொடுக்க முடியாமல் திணறும் பி.எஸ்.என்.எல். -எம்.மார்க் நெல்சன்


கேபிள்கள் மற்றும் "டிராப்' வயர்கள் பற்றாக்குறை காரணமாக புதிய தொலைபேசி இணைப்புகள் மற்றும் முகவரி மாற்றிக் கேட்கும் இணைப்புகளையும் கொடுக்க முடியாமல் பி.எஸ்.என்.எல். (சென்னை) நிறுவனம் திணறி வருவதாக அதன் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி சேவையை அளிப்பதில் ஏராளமான தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இத்துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் நாளுக்கு நாள் இந்த நிறுவனங்கள் புதிய சலுகைத் திட்டங்களை அறிவிப்பதோடு, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சேவையையும் அளித்து வருகின்றன.

இதுபோல் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்து வந்தாலும், வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவதில் பின்தங்கி வருகிறது என வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் தெரிவிக்கின்றனர்.
"டேட்டா கார்டு', இணைய வசதியுடன் கூடிய நவீன செல்பேசிகள் என தொழில்நுட்பம் வளர்ந்து விட்டபோதும், தடையற்ற மற்றும் தரமான இணையதளச் சேவையைப் பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள், தொலைபேசி இணைப்பையே விரும்பிப் பெற்று வருகின்றனர்.

இந்தத் தேவையை தனியார் நிறுவனங்கள் சிறப்பாக பூர்த்தி செய்து வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல பகுதிகளுக்கு புதிய இணைப்பு அளிப்பதையும், முகவரி மாற்றிக் கேட்டும் இணைப்பை வழங்குவதையும் தவிர்த்து வருகிறது என சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஜெகந்நாதன் என்பவர் புகார் தெரிவித்தார்.

அகண்ட அலைவரிசை தொலைபேசி இணைப்பு பெற்றுள்ள இவர், தான் புதிதாக குடியேறியுள்ள வில்லிவாக்கம் பகுதிக்கு அந்த இணைப்பை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவரின் புதிய குடியிருப்புப் பகுதியில் போதிய கேபிள்கள் பதிக்கப்படவில்லை என்று கூறி, அவருடைய கோரிக்கையை ரத்து செய்துள்ளனர். இதனால், பி.எஸ்.என்.எல். இணைப்பை ரத்து செய்த அவர், விண்ணப்பித்த இரண்டே நாள்களில் தனியார் நிறுவன தொலைபேசி இணைப்பைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து தேசிய தொலைத்தொடர்பு சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் சி.கே. மதிவாணன் கூறியது:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கேபிள் பிரச்னை என்பது பல மாதங்களாக நீடித்து வருகிறது. நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி வந்தவரை, வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டன. புதிய இணைப்பு ஒரே இணைப்பாக இருந்தாலும், தேவையான வயர்கள் பதித்து அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. கேபிள் பற்றாக்குறை, டிராப் வயர் பற்றாக்குறை காரணமாக, கேபிள்கள் பதிக்கப்படாத பகுதிகளில் புதிய இணைப்புகள் மற்றும் முகவரி மாற்றிக் கேட்கும் இணைப்புகளை கடந்த பல மாதங்களாக பி.எஸ்.என்.எல். கொடுப்பதில்லை
.
இதுபோன்ற காரணங்களால், புதிய இணைப்பு மற்றும் முகவரி மாற்றி கேட்கும் இணைப்புகளுக்கான பணி உத்தரவு வழங்கப்பட்ட 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளன.
"டிராப்' வயர்கள் இல்லாத காரணத்தால் 200 முதல் 300 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அண்மையில் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பணிக் குழு கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் குறைகளைப் போக்க முயற்சி எடுப்பதாக அவர் கூறினார்.

அதிகாரமில்லை...: அரசுத் துறையாக இருந்தவந்த தொலைத் தொடர்பு நிறுவனம், 2000-ம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனமாக மாற்றப்பட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனமாக உருவானது.

ஆனால், அதன் பிறகு 12 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் நிறுவனத்துக்கான முழு அதிகாரம் பி.எஸ்.என்.எல்.லுக்கு கொடுக்கப்படவில்லை. இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால், தனி வாரியம் இருந்தும் அது வலுவிழந்து உள்ளது. சிறிய திட்டப் பணிக்குக் கூட அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. தலைமை பொது மேலாளர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

இதுவே, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையைக் கொடுக்க முடியாமல் போனதற்கு காரணம் என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டபோதும், அதுகுறித்து பதிலளிக்க மறுத்து விட்டனர்

.நன்றி :-தினமணி :-First Published : 18 Aug 2012 03:55:46 AM IST


2 comments:

 1. varadaraja perumal

  lvp1941@gmail.com
  Retired BSNL


  உயர்திரு ராமசாமி அவர்களே வணக்கம்.உங்கள் வலைப்பூ ஏராளமான தகவல்களை அள்ளித்தருகின்றது. நீங்கள் தகவல் களஞ்சியத்தையே வழங்குகிறீர்கள்.மிக்க நன்றி.
  LVP

  ReplyDelete
 2. நன்றி, நண்பர் LVP அவர்களே! தொலைபேசியில் தாஙகள் கூறிய அறிவுரைகளைத் தவறாமல் நடைமுறைப்படுத்துவேன்.

  ReplyDelete

Kindly post a comment.