Friday, August 24, 2012

தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை: முதல்வர் அவசர ஆலோசனை!


சென்னை, ஆக. 23: தமிழகத்தில் திடீரென 4 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் கடுமையாக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மின்சார பற்றாக்குறையைச் சமாளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 23) அதிகாரிகளுடன் மின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அவசர ஆலோசனை நடத்தினார்.

தொழில் நிறுவனங்கள் முடக்கம்:

தொழிற்சாலைகள் நிறைந்த கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. கோவையில் 14 மணி நேரம், நாமக்கல்லில் 12 மணி நேரம், திருப்பூரில் 9 மணி நேரம், சேலத்தில் 8 மணி நேரம், ஈரோடு-தருமபுரி-கிருஷ்ணகிரியில் தலா 10 மணி நேரம் என பல மாவட்டங்களில் மின் வெட்டு செய்யப்படுவதால் தொழில் நிறுவனங்கள் முடங்கி பல கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் மட்டும் தினமும் ரூ.35 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின் வெட்டு செய்யப்படுகிறது. போடியில் 12 மணி நேரமும் காரைக்குடியில் 11 மணி நேரமும் மின் வெட்டு செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கைவிட்ட காற்றாலைகள்: காற்றாலைகளில் இருந்து கிடைத்து வந்த 4 ஆயிரம் மெகாவாட் அளவு மின்சாரம் திடீரென கிடைக்காமல் போனதே கடும் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்று மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். காற்றாலைகள் மூலம் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அளவுக்கு மின்சாரம் கிடைத்து வந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 23) பகலில் வெறும் 600 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது.

தமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11 ஆயிரத்து 500 மெகாவாட் அளவாக உள்ளது. ஆனால், மின்சார உற்பத்திக்கும் மின்சார தேவைக்குமான இடைவெளி 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உள்ளது. பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் மாநிலத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருகிறது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மழை மற்றும் காற்று போதிய அளவுக்கு இருக்காது. கோடை காலம் போன்றே இப்போதும் வறட்சி தொடருவதால் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையம் முடங்கும் அபாயம்: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு: மின்சார உற்பத்தி குறைந்து திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து மேற்கொண்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட வள்ளூர் அனல்மின் திட்டத்தின் மூன்று அலகுகள், 600 மெகாவாட் திறனுடைய மேட்டூர் அனல்மின் திட்டம் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் திட்டத்தின் இரண்டு அலகுகள் ஆகியவற்றில் உள்ள முன்னேற்றம் குறித்தும், தமிழகத்தில் நிலவும் பொதுவான மின் நிலைமை பற்றியும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக விவாதித்தார்.

இப்போது வள்ளூர், மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களின் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொண்டு விரைவில் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

நன்றி :-தினமணி, 24-08-2012

http://rssairam.blogspot.in/2012/04/blog-post_25.html 

மின்சாரக் கட்டணம் தனியார் துறையின் வேட்டைக் காடு -சா.காந்தி

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் சங்கம்,

45/28, பாலகுரு கார்டன், பீளமேடு

கோயமுத்தூர்- 641 004.

 தொடர்பு எண்:- 9443003111


http://rssairam.blogspot.in/2012/08/blog-post_4973.html

மின்வாரியத் துறையச் ச்ந்தைக்க்காடாக ஆக்குவதா ?

http://rssairam.blogspot.in/2012/06/blog-post_29.html

மின்மீட்டருக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மின்வாரியமும்

மீட்டர் விற்பனையாளர்களும்

0 comments:

Post a Comment

Kindly post a comment.