Friday, August 24, 2012

மாலை முரசுத் தகவலுக்கு, மின்தமிழ்மடலாடற்குழு பொறுப்பாளர்குழுவினரின் பதில் !
N. Kannan
13:44 (0 minutes ago)

to mintamil 
இச்சேதியை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் சில சிக்கல்கள் உள்ளன.
காரணங்களை விளக்குகிறேன்.

மடலாடற்குழு என்பதைப் பற்றிய சரியான புரிதல் இன்னும் தமிழரிடம்
உருவாகவில்லை என்பதையே இது காட்டுகிறது. மடலாடற்குழுக்களின் இயக்கம் என்பது எழுதுவோரின் எண்ணவோட்டத்தைச் சாந்துள்ளது. இங்கு வெளிவரும் ஒவ்வொரு கருத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்து என்று சிறுகுழந்தை கூட எண்ணாது. இதே மாலைமுரசு பல்வேறு வகையான சேதிகளை வெளியிடுகிறது. அவையெல்லாம் மாலைமுரசு நிர்வாகத்தின் நோக்கமென்று யாரேனும் கொள்வாருண்டோ?

வ.கொ.விக்கு நான் பரிவு காட்டுகிறேன் என்றொரு குற்றச்சாட்டு. நான்
வ.கொ.வியை பார்த்தது இல்லை, பழகியதில்லை. என் எண்ணப்போக்கோடு அவர் என்றும் ஒத்துப்போனதுமில்லை. அதற்காக அவரை நான் குழுமத்திலிருந்து விலக்க வேண்டுமென்ற அவசியமில்லை. கருத்துக்களமாகிய ஒரு மடலாடகுழுவில் வகொவி ஒரு
கருத்து, அவ்வளவுதான்.

அவரை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்? என்றொரு கேள்வி. குடியாட்சி முறையில் மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வரவேண்டும். விமர்சனங்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி வேண்டும். அவர் தமிழகத்தில் வாழவில்லை. வெளிநாட்டிலிருந்து அவர் தமிழ் உலகைக் கண்டு சில மாற்றங்கள் அவசியம் என்கிறார். உதாரணமாக, தமிழர்களுக்கு அடைமொழியிலேயே பேசும் வழக்கமுள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பெயரால் அழைப்பது அவமானப்படுத்துதல் ஆகாது. நாம் அறிஞர் அண்ணா என்று அன்புடன் அழைத்தாலும் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு டாக்ட பட்டம் பெறும் போது அவரை வெறுமே திரு.அண்ணாதுரை என்றே அழைத்து பட்டமளித்திருப்பர். அது அவமானமாகாது.

வகொவி தன் கருத்து நிலைப்பாட்டை விளக்கியுள்ளார், அதற்கு பதிலளிக்கும்
பொறுமை நமக்கு உண்டு, அதை விடுத்து அவர் வாயை மூடுங்கள் என்பது என்ன நாகரீகமென்று புரியவில்லை.

பாவாணர் பற்றிய மிக உயர்ந்த கருத்துக்களும் மின்தமிழில் வந்துள்ளது.
அதைக் காணாமல் வேண்டுமென்றே இப்படியொரு வதந்தியைப் பரப்புவது
இச்செயலுக்குப் பின் எம் மீது காழ்ப்புக் கொண்டு சிலர் செயல்படுகின்றனர்
என்பதையே காட்டுகிறது.

டெக்கினிகலாக சில விசயங்கள்.

மின்தமிழில் வரும் ஒவ்வொரு கருத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின்
கருத்தென்று கொள்ளுதல் தவறு. தமிழ் மரபு அறக்கட்டளை என்பது சர்வதேச
இயக்கம். அது அரசு சாரா, கட்சி சாரா தொண்டூழிய இயக்கம். 11 ஆண்டுகளாக
எவ்வித சுயநலமும் இல்லாது செயல்பட்டு வரும் ஒரு நல்லியக்கமாகும். யாரோ ஒரு வகொவி சொல்கிறார் என்பதற்காக தமிழ் மரபு அறக்கட்டளையின் இயக்கத்தை முடக்க வேண்டுமென அறிஞர்கள் ஒரு அரசிடம் முறையிடுவது தமிழ் வளர்ச்சியைத் தடைசெய்யக் கோருவதற்குச் சமம்.

மேலும் மின்தமிழ் தளம் என்பது கூகுள் தளம். அதைத்தடை செய்ய ஒரு அரசிடம் கூறமுடியாது. அது நமது அடிப்படை உரிமையான பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தடை செய் என்று சொல்வது போன்றது. நாளை மின்தமிழ் மூடப்பட்டால் வேறொரு தளத்தில் வகொவி எழுதுவார். யாரால் தடை செய்யவியலும்? தமிழில் எழுதாதே என்றால் ஆங்கிலத்தில் எழுதுவார், இல்லை ஜெர்மனில் எழுதுவார். யார் தடை செய்யவியலும்? நமக்கு கருத்தைக் கருத்தாகக் கொண்டு ஆரோக்கியமாக வாதாடத் தெரிய வேண்டும். தெரியவில்லை எனில் இதையொரு வாய்ப்பாகக் கொண்டு
கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு இயையாத கருத்துக்கள் வந்தால் வாயைமூடு என்று சொல்வது வன்முறையாகும். இதைக் கற்றறிந்தோர் செய்யலாகுமா?

ஒருவகையில் நாம் இவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம். 

தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி யாரும் இவான்சலிசம் செய்வதில்லை என்ற வருத்தமுண்டு. இப்போது தமிழக அளவில் எம் இயக்கம் பற்றிய கவன ஈர்ப்பு செய்துள்ளனர். நன்றி. 

முகநூலில் பலர் மின் தமிழை பகீஷ்கரிக்குமாறு விளம்பரம்
செய்துவருகின்றனர். அவர்களுக்கும் நன்றி. 

மின்தமிழ் என்றொரு குழு இருப்பதை இதுவரை அறியாதோர் இனி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பளித்துள்ளீர்கள்.

நாம் தனியாக இல்லை என்ற நல்ல உணர்வைத்தந்துள்ளார்கள். மின்தமிழ் கவனமாகப் படிக்கப்படுகிறது என்ற் தெரிகிறது, 
இப்பதிலையும் சேர்த்து. அதற்கும் நன்றி.


//
சமீபத்தில் (22.08.2012) மாலைமுரசு சென்னைப்பதிப்பில் வெளிவந்த
“தமிழறிஞர்களை இழிவுபடுத்தும் வலைத்தளத்தை தடை செய்ய வேண்டும்” எனும் சேதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச கழகம், வேண்டுமென்றே தங்களது சேவையைக் கொச்சபடுத்தும் நோக்கில் இச்செய்தி வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக
அமைதியாக தமிழ்ப்பணி ஆற்றிவரும் தன்னார்வக்குழு தமிழ் மரபு
அறக்கட்டளையாகும். அதன் முக்கிய நோக்கம் மறைந்து வரும் தமிழ் வளங்களை மின்னாக்கம் செய்து இனி வரும் சந்ததியினருக்காக நிரந்தரப்படுத்துவதாகும்.

இப்பணியின் துணைச்சேவையாக ‘மின்தமிழ்’ எனும் மடலாடற்குழு கூகுள் தளத்தில் இயங்கி வருகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆக்கங்களை வெளியிடும் முகப்பாக இம்மடலாற்குழு செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இயங்கும்

தமிழறிஞர்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டுவரும் குழுவாக இது
இயங்கி வருகிறது. இன்று 22 நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களின்
தேவைகளையொட்டி இக்குழு செயல்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும்
சேதி முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக இதன் சர்வதேச
இயக்குநர்கள் கருதுகின்றனர். மின்தமிழ் எனும் குழு தமிழர்களின்
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை மதித்து, மிகக்குறைவாக மட்டுறுத்தப்பட்டு
செயல்பட்டு வரும் குழுவாகும். உலக அளவில் தமிழ் மதிக்கப்பட வேண்டுமெனில் உலகின் தரத்திற்கு இருக்க வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் செயல்பட்டுவருகிறது. வடவேங்கடம், தென்குமரிக்கு இடைப்பட்ட பரப்பு மட்டும் தமிழ் உலகமல்ல, அதன் சமகால இருப்பு உலகளவில் இருக்கிறது. மின்தமிழில் பேசப்படும் கருத்துக்கள் முழுக்க, முழுக்க எழுதியவரையே சேரும். 

மாலைமுரசு  குறிப்பிடும்படி தமிழ் மரபு அறக்கட்டளைக்கு எந்தத்தமிழ் அறிஞரையும் இழிவுபடுத்தும் நோக்கம்கிடையாது. பாவாணரின் இலக்கண, வேர்ச்சொல் ஆய்வின் சிறப்பு பற்றி இதே குழுவில் உயர்வாக பேசப்பட்ட விஷயங்களை மறைத்து, விமர்சனம் செய்த ஒருவரின் கருத்தையே தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்து என்பது போல் திரித்துக்காட்டுவதை இக்குழு வன்மையாகக் கண்டிருக்கிறது.

மேலும் இச்சேதி கூறுவதுபோல் எவ்வித சர்வதேச சதியும் இதன் பின்னால் இல்லை. இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றதும், தமிழ் செம்மொழி ஆவதற்குப் பாடுபட்ட பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் போன்ற அயல்நாட்டு அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றும் இயங்கிவரும் தொண்டூழிய இயக்கமாகும் இது. பேரா.ழான் லூக் போன்ற பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் மின்தமிழின் தரம் கண்டு பாராட்டுத் தெரிவித்து 

மடலாடற்குழுவின் செயல்பாடு என்பது ஒரு பத்திரிக்கை போன்றோ, அல்லது
வலைத்தளம் போன்றோ, வலைப்பக்கங்கள் போன்றோ இயங்குவது அல்ல. மடலாடற்குழு என்பதன் நடை அதில் சிந்தனை பகிர்வோரின் பங்களிப்பைப்பொறுத்தே அமையும்.

அவ்வகையில், பாவாணர் குறித்து அக்கறை கொள்ளும் பெரியவர்கள், அச்சேதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தனிமனிதரிடம் கேள்வி கேட்டு தம் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமே ஒழிய, ஒரு மின்னாடற்குழுவையே தடை செய்ய வேண்டும் என்று கோருவது முறையல்ல.

ஏனெனில் 11 வருட கடின உழைப்பில் நிற்கும் இச்சர்வதேச இயக்கத்தின் பிற
ஆக்கபூர்வமான செயல்களைத் தடை செய்யக்கோருவது தற்கொலைக்குச் சமமாகும் என்று தமிழ் கூறும் நல்லுலகின் அறிஞர்கள் கருதுகின்றனர். 

இப்படிக்கோருவது தமிழரின் அடிப்படை சுதந்திரத்தை பறிப்பதற்கு ஒப்பாகும். 

மாலைமுரசு சேதியில் குறிப்பிடப்படும் நபரின் கருத்து, அவரின் தனிப்பட்ட 
இதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
குழந்தை அழுவதற்காக யாரும் தொட்டிலோடு குழந்தையை எறிவதில்லை என்று இந்த சர்வதேச இயக்கம் கருதுகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் சீரிய சேவை உலகத்தமிழர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதன் சேவையை அறிய, கீழேயுள்ள தொடுப்பு உதவும். www.tamilheritage.org


மின்தமிழ் மடலாடற்குழு பொறுப்பாளர்கள்.
N. Kannan
N. Kannan's profile photo
navannakana@gmail.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.