Tuesday, August 7, 2012

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பீதி! !


 கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், ஐந்து தாலுகாவில் உள்ள, 123 கிரானைட் குவாரிகளில், நேற்று, சப்-கலெக்டர்கள் தலைமையிலான, ஐந்து குழுவினர், அதிரடி ஆய்வு நடத்தினர். மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில், முறைகேடாக கனிமங்களை வெட்டி எடுத்துள்ளதால், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, தற்போது கலெக்டராக உள்ள அன்சுல் மிஸ்ரா, 18 குழுக்களை அமைத்து, தனியார் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். இச்சோதனை தொடர்ந்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 300 குவாரிகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கும், "பாரடைஸ்' என்ற ரக கிரானைட்டுக்கு, உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இக்குவாரிகளில், கிரானைட் கற்கள் உற்பத்தி செய்ய, அருகில் உள்ள குவாரிகளில் இருந்து, அதிக அளவில் கற்கள், அனுமதி இன்றி வெட்டி எடுக்கப்பட்டு, இரவு நேரங்களில் கடத்தப் படுவதாகவும், அதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், புகார்கள் வந்துள்ளன.


ஆய்வுக்குழு: இந்த புகாரைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரா னைட் குவாரிகளில் ஆய்வு நடத்த, கலெக்டர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய, ஐந்து தாலுகாவிலும், சப்-கலெக்டர் அந்தஸ்தில் உள்ளவர் மற்றும் அந்தந்த பகுதி தாசில்தார்கள், மண்டலத் துணை தாசில்தார், பி.டி.ஓ., - ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், அந்தந்த தாலுகாவில் உள்ள, ஐந்து தனியார் கிரானைட் குவாரிகளில், நேற்று ஆய்வு நடத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில், ஆர்.டி.ஓ., சதீஷ், தாசில்தார் மணி தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.


ஆவணங்களும் சரிபார்ப்பு: ஆய்வில், அரசு அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே, கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பதை, குழுவினர் அளவீடு செய்து பார்த்தனர். மேலும், அரசு அனுமதி வழங்கிய காலத்தை கடந்து, கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பது குறித்த ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. ஆய்வுக்குப் பின், ஆர்.டி.ஓ., சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் ஆய்வு நடக்கும். ஆய்வில், ஒவ்வொரு கிரானைட் குவாரிகளில் கிடைத்த தகவல்கள் அனைத்தும், கலெக்டரிடம் அறிக்கையாக சமர்ப்பிப்போம். குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா அல்லது முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை, கலெக்டர் மீண்டும் ஆய்வு செய்து, முறைகேடுகள் நடந்திருந்தால், குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு சதீஷ் கூறினார்.


புதுக்கோட்டையில் பீதி: புதுக்கோட்டை மாவட் டத்தில், கீரனூர், குடுமியான்மலை, அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, திரு மயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அரசு அனுமதி பெற்று, 116 கிரானைட் குவாரிகளும், 


எட்டு வகையான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவற்றில், எல்லோ ஷேடு கிரானைட் கற்கள், உலகத்தரம் வாய்ந்தவை. நார்த்தாமலையைச் சுற்றிஉள்ள பொம்மாடி மலையில், இவ்வகையான கற்கள் உள்ளன. இங்கிருந்து வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்து வரும் ரெய்டை போன்று, புதுக்கோட்டை மாவட்ட கிரானைட் குவாரிகளிலும், ரெய்டு நடக்கலாம் என்பதால், அம்மாவட்ட கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பீதியில் உள்ளனர்.


நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.