Monday, August 27, 2012

சிவாலயங்களில் தெற்குவாயில்கள் சொர்க்கவாசலுக்காக மட்டுமே திறக்கப்படும்?


http://www.shaivam.org 

 நாயன்மார்கள் வரலாறு, திருக்கோவில்கள் அனைத்தும் ஒரே இடத்தில் !

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சத்தியரூபமாகச் செய்தது.

திருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராண சூசனம்

. தத்தம் சாதிநெறி கடவாது சிவனை வழிபடுதல்

யாவராயினும், தங்கள் தங்கள் சாதிக்கு விதித்த விதிகடவாது நின்று சிவனை வழிபடின் முத்தி பெறுவர். அவ்விதி கடந்தோர் பயன் பெறார். இத்திருநாளைப்போவார் நாயனார் தாம் முற்பிறப்பில் செய்த புண்ணிய மிகுதியினாலே சிவனிடத்து மெய்யன்பு உடையராகி, தாம் இழிவாகிய புலையர் குலத்திற் பிறந்தமையால் அதற்கு ஏற்பச் சிவனுக்குத் தொண்டு செய்தலே முறைமையாம் என்று சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய ஒருமுகக் கருவிகளுக்கும் மிருதங்கம் முதலிய இருமுகக் கருவிகளுக்கும் தோலும், வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுத்தலும், ஆலயங்களின் திருவாயிற் புறத்திலே நின்றுகொண்டு ஆனந்த மிகுதியினாலே கூத்தாடிப் பாடுதலும் செய்தனர்.

வாத்தியங்கள் கொடுத்தல் புண்ணியம் என்பது "பொங்குபேரி பொருமுர சம்மிரு - தங்கமோடு திமில்பட காதியுஞ் - சங்கு தாளந் தகுமிசைக் காகளம் - விங்கு சீரொலி வேணுவும் வீணையும்." "சொன்ன வின்னவை சோதிநிலா வணி - மன்ன வற்கு வழங்கிய மாதவ - ரன்ன வன்றனை யொத்தயு தந்தருந் - துன்னுகற்ப மவன்பதி தோய்வரால்" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க.

ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது "நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும் - விரித்த பானு வயுதம் விரிகதிர் - பொருந்து தேரிற் புலவ ரரம்பையர் - கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி." "துதியுங் கீதமுஞ் சோதிமுன் பத்தியாற் - கெதியி னோதிடக் கேட்டவர் தாவர - மதியில் கீடங் கிருமி வரன்பதி - வதியு மோதினர்க் கென்கொல் வகுப்பதே" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. இவை எல்லாம் தம்மிடத்து இடையறாத மெய்யன்போடு செய்தமையால் அன்றோ; சிவன் திருப்புன்கூரிலே இவர் விரும்பியபடியே தமக்குமுன் உள்ள இடபதேவரை விலகச் செய்து இவருக்குக் காட்சி கொடுத்தருளினார்.

2. சிதம்பர தரிசனம்

சிவஸ்தலங்கள் எல்லா வற்றுள்ளும் சிதம்பரமே மேலானது. அது தில்லைவாழந்தணர் புராணத்துச் சூசனத்தில் விரித்துரைக்கப்பட்டது. இந்த ஸ்தலத்டிற் கனகசபையின் கண்ணே கருணாநிதியாகிய சபாநாயகர் செய்தருளும் ஆனந்த நிருத்தத்தை மெய்யன்போடு தரிசித்தவர் முத்தி பெறுவர்.

அது, "மெய்மைநற் சரியை பத்தி விளங்கிய ஞான மேவா - வெம்மையொப் பவர்க்கு முத்தி யிறையிலி யாகவிட்ட - மும்மைநற் பதிகடம்மின் முளைத்தவர் முடிந்தோர் மூவாச் - செம்மலர்க் கழல்கண்டோர்கள் சிவத்தினைச் சேர்வ ரன்றே. பிறந்தில மாரூர் தன்னிற் பேசிய காசி மேவி - யிறந்தில மிரண்டு முத்தி யின்பமும் பின்ப தாநா - முறைந்திடுந் தில்லை ஞான யோகமார் தான மாமாற் - செறிந்தடி காணச் சீவன் முத்தராய்த் திரியலாமே. தேசமார் மன்ற கன்று சிவகதி தேடியுற்றார்

காசியி லில்லை தில்லை கதிதரு மென்ற ணைந்தாற் - பாசமதகல முத்தி பணித்திடு மென்றா ரென்றா - லீசன தருளிரக்கத் தெல்லையார் சொல்லுவாரே. கன்றம ரன்பாலான்பால் கவர்தருங் கால மேனும் - வென்றிகொ ளம்பு வீழும் வேலையா யினுமி மைப்பிற் - சென்றுறு மமையமேனுந் திருவடி தெளிய நோக்கி - நின்றவர் காண நின்றார் நீள்பவ நீங்கி னாரே. ஆரண வுருவார் தில்லை யம்பல மெய்தப் பெற்றோ - ரோருணர் வாவ ரென்று மொன்றல ரொன்றா ரல்லர் - காரண ராகா ரொத்த கருத்திலர் நிருத்த வின்பப் - பூரண ரவர்கள் வாழும் புவனமும் பொதுவா மன்றே" என்னும் கோயிற் புராணத்து வியாக்கிர பாதமகா முனிவர் இரணியவன்ம சக்கிரவர்த்திக்கு உபதேசித்த பொருளையுடைய திருவிருத்தங்களானும், "பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தா - லுரை யுணர்வுக் கெட்டா வொருவன் - வரைமகடான் - காணும் படியே கருணையுருக் கொண்டாடல் - பேணுபவர்க் குண்டோ பிறப்பு." என்னும் உண்மை விளக்கத் திருவெண்பாவானும் உணர்க.

பல சிவஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்தலே தொழிலாகக் கொண்ட இந்நாயனாருக்குச் சிதம்பர தரிசனத்திலே வேட்கை மிக்குற்றது. இவ்வேட்கையின் மிகுதி, அது விளைந்த அன்றிரவு இவருக்கு நித்திரை இன்மையானும்; மற்ற நாள் இவர் தாம் தில்லைக்குச் செல்லில் கோயிலுனுள்ளே புகுதல் தமது சாதிக்கு இயையாது என்பதை நினைந்து, போகாதொழிந்தாராயினும், அவ்வாசை குன்றாது மேன்மேலும் வளர்தல் பற்றி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று பல நாள் கழித்து, ஆசையை அடக்கல் கூடாமையால் பின் தில்லையின் எல்லையை அடைந்தமையானும்; தெளியப்படும்

இவ்வாறு மிக்க ஆசையுடன் சென்றும்; தில்லையினுள்ளே வேதவிதிப்படி ஓமம் செய்யப்படுதலைக் கண்டு, உட்புகாதொழிந்து, இரவு பகல் திருவெல்லையை வலஞ் செய்து வணங்கினமையால், வேதாகம விதிக்கு அஞ்சி, சாதிநெறி கடவாது நின்ற இவரது பெருந்தன்மை துணியப்படும். பின்னும் இவருக்குச் சிதம்பர தரிசனத்தில் ஆசை குன்றாது மேன்மேலும் வளர்ந்தமை பெருவியப்பாமே!


இவ்வாறே சிவனிடத்து இடையறாது மேன்மேலும் பெருகும் மெய்யன்பினால் வளர்ந்தோங்கிய ஆசையினாலன்றோ; கருணாநிதியாகிய நடேசர் இவர் கருத்தை முற்றுவித்தருளத் திருவுளங் கொண்டு, தில்லை மூவாயிரரைக் கொண்டு திருமதிற்புறத்த்லே திருவாயிலுக்கு முன் அக்கினி வளர்ப்பித்து, இந்நாயனாரை அதிலே புகுவித்து, இவர் புலை உடம்பை ஒழித்துப் பிராமண முனிவடிவங் கொண்டு எழுந்து, கனகசபையிற் புகுந்து தமது திருவடிகளை வணங்கிக் கொண்டிருக்கும் பொருட்டு அருள் செய்தார்.

இதனால், சிவன் தம்மை வழிபடும் அடியார்கள் கருத்தை முடித்தருளுவர் என்பது துணியப்படும். "வாயானை மனத்தானை மனத்து ணின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் - தூயானைத் தூவெள்ளை யேற்றான் றன்னைச் சுடர்த் திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற - தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ் - சேயானைத்ட் தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேனானே" என்றார் திருநாவுக்கரசுநாயனார்.

ஆதலால், சிவ புண்ணியங்களை நாம் செய்வது அருமை என்று விரும்பாதொழிதல் குற்றம் என்பதும், இடைவிடாது விரும்பின், சிவனது திருவருளினால் அது முற்றும் என்பதும், இப்பிறப்பின் முற்றாதாயினும் மறுபிறப்பின் முற்றுதல் ஒருதலை என்பதும், தெளிக. "நொந்தபங்கயனை நோக்கி நுடங்குட லளவே யன்றோ - வந்தமில்காலஞ் சேய்த்தன்றதுவுமென் றயரக் கண்டு - மிந்தநீ யிறந்தாற் பேறிங்கென்னென வனந்த னின்றென் - சிந்தையிங் கிதுவாச் செத்துந் திருநடங் காண்பே னென்றான்" எனக் கோயிற் புராணத்திற் கூறியவாற்றானும் உணர்க.

திருச்சிற்றம்பலம்.
நந்தனார் சரித்திரம் என்பது ஒரு தமிழிசைக் காவியமாகும். இது திருநாளைப் போவார் என்ற பெயரால் 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் நந்தனார் வாழ்க்கையில் இறைவனோடு நிகழ்ந்தாக சொல்லப்படும் சில அதிசய சம்பவங்களை இசைப் பாடல்கள் கொண்டு விளக்கும் தொகுப்பாக கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றினார்.
நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு:
1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை
2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ
3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே
4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ
5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி
6. எப்போ தொலையும் இந்த துன்பம்
7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர
8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா
9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன்
10. கட்டை கடைதேறவேணுமே
11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்
12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே
13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம்
14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு
15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை
16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ
17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும்
18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம்
19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு
20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்
21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம்
22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி
23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு
24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும்
25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்
26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம்
27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது
28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா
29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி
30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள்
31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள்
32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி
33. மற்றதெல்லாம் பொறுப்பேன்
34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்
35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ


உதவி :-தமிழ் விக்கிபீடியா
எனக்குத் தெரிந்தவரை சிவாலயங்களின் தெற்கு வாசல்கள் எப்பொழுதும் பூட்டப்பட்டே இருக்கும். சொர்க்கவாசல் தினத்தன்று மட்டுமே திறக்கப்படும் உற்சவ மூர்த்தியின் ஊர்வலமும் உண்டு. சிதம்பரம் தெற்குவாசலுக்கு ஏன் இத்தனை கலாட்டா? கைது விவகாரங்கள். கோவிலுக்குள் எல்லோரையும் சரிநிகர் சமானமாக அனுப்புகின்றார்களா? விபரம் அறிந்தோர் கூறுக.

[தொகு]

0 comments:

Post a Comment

Kindly post a comment.