Monday, August 27, 2012

ஆண்டுதோறும் புதுமை! அத்தனையும் அருமை! -ஈரோடு


2005-லிருந்து  ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை  நிகழ்த்திவரும் புத்தகத் திருவிழாவைக் கண்டு மகிழ மேலுள்ள இணையதளம் செல்க.


ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆக.8-ம் தேதி நடந்த இலக்கியக் கூட்டத்தில் தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் இந்திரா பார்த்தசாரதி, விக்கிரமன், அசோகமித்திரன், நீலபத்மநாபன், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு படைப்பாளியையும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகப்படுத்தினார்.  ""அறிவாளியைப் பாராட்டாத நாட்டில் அறிவாளி உருவாகமாட்டான். தியாகியை பாராட்டாத நாட்டில் தியாகி உருவாகமாட்டான். படைப்பாளியை பாராட்டாத நாட்டில் படைப்பாளி உருவாகமாட்டான்...'' என மைக்கை பிடித்த ஸ்டாலின் குணசேகரன்,  ""மிக மூத்த படைப்பாளிகளைப் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் அழைக்கவில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற படைப்பாளிகளை நேரில் பார்ப்பதே அதிசயம் தான். எனவே,தான் இலக்கிய ஆர்வலர்கள் இவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அழைத்தோம்.

 8 ஆண்டு புத்தகத் திருவிழாவில் இந்த நிகழ்ச்சிதான் வித்தியாசமான நிகழ்ச்சி எனக் கருதுகிறேன்'' என்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, படைப்பாளிகளுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயத்தை வழங்கினார்.

 நாமக்கல்லில் இருந்து வந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி, ""பேசும்போது, எனது 60 ஆண்டுகால இலக்கிய வாழ்வில் இதுவரை இரண்டே இரண்டு பாராட்டு விழாக்களுக்குதான் சென்றிருக்கிறேன். பாராட்டு விழாக்களுக்குச் சென்றால் படைப்பாளிக்கு புகழ் மயக்கம் வந்துவிடும். இதனால் படைப்பில் கவனம் சிதறிவிடும் என எனது குருநாதர் கற்றுக்கொடுத்த பாடம். மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்கெனவே நடத்திய பாராட்டுவிழா ஒன்று, மற்றொன்று இப்போது நடைபெறும் மூத்தப் படைப்பாளிகளை பாராட்டும் நிகழ்ச்சி'' என்றார்.

எழுத்தாளர் நீல. பத்மநாபன்,""உடல் நலம் குறைவாக இருப்பதால் இப்போது இலக்கியக் கூட்டங்களுக்கு நான் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து செவிமடுத்துவிட்டு வந்துவிடுவேன்.  எழுதப் படிக்கத் தெரிந்த வயதில் இருந்தே புத்தகத்தின் மீது எனக்கு தீராத காதல். ஆனால், இப்போது எழுதவும், இலக்கிய கூட்டங்களில் பேசவும் வந்துவிட்டது. ஏனெனில் இப்போது படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. முனைவர் பட்டம் பெறுவோர்கூட புத்தகங்களை வாசிப்பதில்லை. எங்கள் காலத்தில் புத்தகங்களை தேடி ஒவ்வொரு நூலகமாகச் செல்வோம். இப்போது புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தகங்களே உங்களைத் தேடி வருகின்றன.  தரமான தமிழ்ப் படைப்புகள் இருந்தும் எத்தனை பேர் அதைத் தேடிச்சென்று படிக்கின்றனர் என்று தெரியவில்லை. வாசகர்களை மனதில் வைத்துத்தான் எழுத்தாளர்கள் எழுதுகின்றனர். வாசகர்கள் அதை படித்து சிந்திக்கும்போதுதான் அந்த எழுத்து உயிரோட்டம் பெறுகிறது. எழுத்தாளர்களின் ரத்தம்தான் படைப்புகள் என்பதை உணர வேண்டும்'' என்றார்.

 எழுத்தாளர் விக்கிரமன்,""வாசகர்கள்தான் எனது எஜமானர்கள்.. இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை பார்க்கும்போது இனிமேல் படைப்பாளிகளும், பதிப்பகங்களும் நூலகங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். வாசகர்களை நம்பி புதிய படைப்புகளை வெளியிடலாம் என்ற நம்பிக்கை, உணர்வு ஏற்பட்டுள்ளது.  உடல் நலம் சரியில்லாததால் வீட்டை விட்டே வெளியே நான் வருவதில்லை. 5 ஆண்டுகளுக்கு பின்பு முதல்முறையாக வீட்டை விட்டே வெளியே வந்திருக்கிறேன். ஈரோட்டில் ஆயிரக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இக்கூட்டத்தில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மக்கள் கொடுத்த விருதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.  இந்த விருதை எனது வீட்டில் எளிதில் தெரியும் இடத்தில் வைப்பேன். இனிமேல் சாகித்ய அகாதெமி விருது எனக்குத் தேவையில்லை. அதைவிட பெரிய விருதை பெற்ற மகிழ்ச்சியை இப்போது அடைந்துவிட்டேன்.  ஈரோட்டுக்கு வந்து இதே மேடையில் எனது உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். ஈரோடு ரயில் நிலையத்தில் நள்ளிரவு 2 மணிக்கு இறங்கியதும் பாரதி உருவம் பொறித்த பனியன் அணிந்திருந்த மக்கள் சிந்தனைப் பேரவைத் தன்னார்வத் தொண்டர்கள் என்னை அலேக்காகத் தூக்கியபோது பாரதியே வந்து தூக்கி வந்ததாக உணர்ந்தேன். இதே போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க ஆர்வலர்களை தமிழகத்தில் நான் வேறு எங்கும் கண்டதில்லை. அடுத்த ஆண்டு சக்தி இருந்தால் இவ்விழாவுக்கு வருவேன்'' என்றார்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி,""சரஸ்வதி சம்மான் விருது, சாகித்ய அகாதெமி விருது பெறும்போது நான் பெற்றதைவிட ஈரோடு புத்தகத் திருவிழாவில் மக்கள் கொடுத்த விருதைப்  பெருமையாகக் கருதுகிறேன். அதைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.

எழுத்தாளர் அசோகமித்திரன்,""உடல் நிலை சரியில்லாததால் சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கே நான் செல்வதில்லை. பபாசி முன்னாள் தலைவர் சேது.சொக்கலிங்கமும், ஸ்டாலின் குணசேகரனும் 6 மாதங்களுக்கு முன்பாக என்னை நேரில் சந்தித்து ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கும்போது முயற்சி செய்கிறேன் என்றேன். தொடர்ந்து அழைத்ததால் இங்கு வந்தேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற மேடையில் நான் ஏறியதில்லை'' என்றார்.

 எழுத்தாளர் டி.செல்வராஜ்,"" நானும், கு.சின்னப்ப பாரதியும் எழுதத் தொடங்கிய காலத்தில் எங்களது எழுத்துக்களை வெளியிட யாரும் முன்வரமாட்டார்கள். இடதுசாரி சிந்தனையுடன் தொழிலாளர், பாட்டாளி வர்க்கத்தின் குரல்களை நாங்கள் பதிவு செய்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது.  எழுத்தாளர்களுக்கு வயது ஆகலாம். ஆனால், எழுத்துக்கு வயது ஆகாது. சிந்திக்கும் எழுத்துக்களை மூத்த படைப்பாளிகளாலும் இப்போதும் படைக்க முடியும். சிந்தனையில் இப்போதும் உயிரோட்டமாகத்தான் இருக்கிறோம்'' என்றார்.

 எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தி.க.சிவசங்கரன்,""ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா எப்போது வரும் என்று எண்ணிக்கொண்டிருப்பேன். இதுபோன்ற திருவிழாக்களை ஒவ்வொரு ஊரிலும் நடத்த வேண்டும்''என்றார்.

இத்தனை படைப்பாளிகளையும் ஒரே மேடையில் ஏறியது 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை என மிகமூத்த இலக்கியவாதிகள் சிலர் பேசிக்கொண்டே சென்றது நம் காதில் விழுந்தது.

 ஊருக்கொரு ஸ்டாலின் குணசேகரின்  உருவாகவேண்டும். 

0 comments:

Post a Comment

Kindly post a comment.