Sunday, August 5, 2012

அண்ணப்பிளவு குழந்தைகளின் பிதாமகன்!

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 05-08-2012

 மழலைச் செல்வங்களின் இனிமையை அனுபவிக்க எத்தனையோ கனவுகளுடன் காத்திருக்கும் வேளையில், பிறக்கும் குழந்தைக்கு மேல் உதடுகள் பிளந்து, பேச்சு வராமல், முகத்தின் தோற்றமும் மாறியிருந்தால் பெற்ற தாய்-தந்தையரின் மனதில் எத்தகைய வேதனை உருவாகும்? கோடீசுவரராக இருந்தால் முகச்சீரமைப்பு செய்யமுடியும். ஏழைகளுக்கு இது சாத்தியமா? இதுபோன்ற குழந்தைகளை தேடிக் கண்டறிந்து முற்றிலும் இலவசமாக முகச்சீரமைப்பு செய்யும் சேவையைச் செய்து வருகிறார் ஈரோடு இதயம் நற்பணி இயக்க அறக்கட்டளைத் தலைவர் எஸ்.வி.மகாதேவன். அவரிடம் பேசியதிலிருந்து...


 ""1981-ல் ஈரோடு கே.என்.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நற்பணி இயக்கம் தொடங்கினேன். கமலின் அன்பைப் பெற்று என்னை சமூகசேவையில் ஈடுபடுத்திக் கொண்டேன். தொடக்கக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம், இலவச திருமணங்கள் நடத்தி வந்தேன்.
 2003-ல் ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினேன். 2005-ல் அதை அறக்கட்டளையாக மாற்றினேன். தொடர்ந்து நல்ல உள்ளங்களின் உதவியோடு கண் சிகிச்சை முகாம்கள், உடல் ஊனமுற்றோருக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன்.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 2004-ல் கண் சிகிச்சை முகாம் நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அண்ணப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பார்த்தேன். இதைச் சரிசெய்ய முடியுமா என அக்குழந்தையின் பெற்றோர்கள் கேட்டனர்.


 "முடியும்' என்ற பதிலுடன் ஈரோடு வந்து, அக்குழந்தைக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தபோது முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் செüமி சாமுவேல் என்னைத் தொடர்பு கொண்டார். முதல் முகாமில் 44 பேர் பங்கேற்றனர்.


பின்னர் உதடு பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். பின்னர் சென்னை மீனாட்சி க்ளெஃப்ட் அன்ட் கிரானியோ ஃபேசியல் சென்டர், மீனாட்சியம்மன் பல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து சுவிட்சர்லாந்து க்ளெஃப்ட் சைல்டு இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் டாக்டர் ஹெர்மன் செய்லர் உதவியுடன், பேராசிரியர் டாக்டர் ஆர்.மணிகண்டன் தலைமையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுவரை 1,640 பேருக்கு உதடு பிளவு, முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்ய உதவியுள்ளேன்.


பரம்பரை மற்றும் கருவுற்ற காலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகளை உண்டாக்கும். ஹார்மோன் மாற்றங்கள், கருக்காலத்தில் தாய் உட்கொள்ளும் மாத்திரைகள், தாய், தந்தைக்குப் போதை, புகை, மதுப்பழக்கம் இருந்தால் கருவில் உள்ள குழந்தையை அது பாதிக்கும். தாய்க்கு ஃபோலிக் அமிலக் குறைபாடு இருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்
.
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது யாருடைய சிபாரிசும் இன்றி, எனது பயோ-டேட்டாவை மட்டுமே பார்த்து நேரில் அழைத்துப் பாராட்டியது மட்டுமன்றி, எனது சேவை பற்றிய தகவல்களை எப்படி எளிதாக வடிவமைக்க வேண்டும் என்ற அறிவுரையையும் கூறினார். கலாமிடம் பாராட்டுப் பெற்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்
.
1991 முதல் 2010-ம் ஆண்டு வரை இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுபதி தலைமையில் ஈரோடு தன்வந்திரி கிரிட்டிக்கல் கேர் சென்டரில் மருத்துவத்துறை வரலாற்றில் முதல்முதலில் இருதய அறுவைச் சிகிச்சை தொடங்கி 38 பேருக்கு ஒபன் ஹார்ட் சர்ஜரி, வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையை இலவசமாக செய்து கொடுக்க காரணமாக இருந்திருக்கிறேன். ஈரோட்டில் உள்ள மருத்துவர்களின் புகைப்படத்துடன் கூடிய முகவரிகளை, மருத்துவர்களின் முகமும், முகவரியும் என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டு வருகிறேன். 
எந்த நோய்க்கு எந்த மருத்துவர்களை அணுக வேண்டும் என்ற விவரம் இதில் இருப்பதால் மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இப்புத்தகம் பயனாக இருக்கிறது'' என்றார் மகாதேவன்.
- பீ.ஜெபலீன் ஜான்

 

0 comments:

Post a Comment

Kindly post a comment.