Sunday, August 5, 2012

சேர்ந்திசைக் குழுவின் தந்தை எம்.பி.சீனிவாசனுக்கு மற்றொரு மகுடம்!


பாடிப் பரிசு பெற்றோம்!

First Published : 05 Aug 2012 12:00:00 AM IST

தொண்ணூறு நாடுகள். 400 சேர்ந்திசைக் குழுக்கள். பதினைந்தாயிரம் பாடகர்கள்-பாடகிகள். "கோரல் மியூசிக்' எனப்படும் சேர்ந்திசையில் இது ஓர் ஒலிம்பிக்ஸ். அமெரிக்க சின்சினாட்டி நகரில், ஜூலை 4 முதல் 14 வரை நடைபெற்ற ஏழாவது சேர்ந்திசைக் குழு போட்டியில் இந்தியாவும் கலந்துகொண்டு ஒரு தாமிரப் பதக்கத்தைத் தட்டிக்கொண்டுவந்திருக்கிறது என்பதுதான் பெருமையளிக்கும் செய்தி
.
எம்.பி. சீனிவாசனை சென்னை சேர்ந்திசைக்குழுவின் தந்தை என்று கூறுவார்கள். எந்தப் பாடலையும் எல்லோரும் பாடும் வகையில் இசையை இளைய தலைமுறையிடம் கொண்டு சென்றவர் எம்.பி.எஸ். அவரிடம் பயிற்சி பெற்ற சுதா ராஜா, தன் அக்ஷ்யம் குழுவில் உள்ள பத்துப் பேருக்குப் பயிற்சி அளித்து, இந்த உலக சேர்ந்திசை ஒலிம்பிக்ஸில் பதினைந்து நிமிடங்களில் நான்கு பாடல்களைப் பாட வைத்துப் பரிசைப் பெற்று வந்திருக்கிறார். அவரிடம் நாம் பேசியதிலிருந்து...


 என்னென்ன பாடல்கள்?


முதலில் ரவீந்திரநாத் தாகூரின் "ஆனந்த லோகே' என்ற வங்காளிப் பாடல். அதைத் தொடர்ந்து, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சுத்ததன்யாசி ராக வர்ணம், மூன்றாவதாக மலையாளக் கவிஞர் பி. பாஸ்கரன் எழுதிய "காற்றாலுணருந்நு' என்ற படகோட்டிப் பாடல். முத்தாய்ப்பாக மகாகவி சுப்பிரமணிய பாரதியின் "பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா'. நான்கு பாடல்களுக்கும் ஏற்கெனவே மெட்டமைத்திருந்தார் எம்.பி.எஸ். முதல் பாடலைப் பாடி முடித்தவுடனே எழுந்த கைதட்டலை நிறுத்தவே இல்லை.


இரண்டாவது பாடலை, அது வெறும் சுவரங்கள் அடங்கிய வர்ணம் என்றாலும் அவர்கள் ரசித்த விதம் இருக்கிறதே, எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. அதற்கும் இடைவிடாத கைதட்டல். ஆனால், நாங்கள் குறிப்பிட்ட பதினைந்து நிமிடங்களுக்குள் முடித்தாக வேண்டுமே! கைதட்டலோடே மூன்றாவது பாடலுக்குள் நுழைந்துவிட்டோம்.


 அங்கே உங்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?


விமான நிலையத்திலிருந்தே அமைப்பின் தொண்டர்கள் - வாலன்டியர்கள் - வந்து கவனித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் எதற்கும் காத்திருக்கவோ, கவலைப்படவோ தேவையிருக்கவில்லை. போட்டிகள் நடந்த இடம் "அர்னோப் சென்டர்'. மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நடந்தது எங்கள் பிரிவுப் போட்டிகள். காலை ஒன்பதரை மணிக்கே தொடங்கிவிடும். "பிராக்டர் அன்ட் கேம்பிள்' நிறுவனம்தான் இந்த சேர்ந்திசை ஒலிம்பிக்ஸின் ஸ்பான்சர்கள். ஆன்ட் தாமஸ் என்பவர் நீதிபதி. அமெரிக்கா முழுக்க ஒளிபரப்பினார்கள். இது ஏழாவது போட்டி என்பதால், மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மணியை ஏழு தடவை ஒலிக்கச் செய்தார்கள். எங்களுக்கு ஒரு பேனா தேவையாக இருந்தால்கூட வாலன்டியரிடம் சொன்னால் போதும், அடுத்த நிமிடமே அது கைக்கு வந்து சேர்ந்துவிடும். வெளியே ஷாப்பிங் போனபோதுகூட, உலக சேர்ந்திசை ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள வந்திருக்கும் பாடகர்கள் நாங்கள் என்றவுடன் கூடுதலாக 25 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்தார்கள்


 அங்கே போயும் "ரிகர்சல்' பண்ண முடிந்ததா?


பண்ணாமலா? மேப்பிள் நோல் வில்லேஜில் ஒரு முதியோர் இல்லம். அங்கே சிநேகமாக ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். மேலும் இரண்டு குழுக்களும் அங்கே அவர்களுக்காக நிகழ்ச்சி வழங்கினார்கள். முதல் நாள் ரிகர்சலின்போது எங்களுக்கு ஃபீட்-பேக் ஸ்பீக்கர் எங்கோ தள்ளி தூரத்தில் வைத்திருந்தார்கள். நாங்கள் பாடுவது எங்களுக்குக் கேட்கவே இல்லை. ஃபீட்பேக் ஸ்பீக்கரை எங்கள் முன்னால் கொண்டுவந்து வையுங்கள் என்றேன். முதலில் தயங்கினார்கள். நான் பிடிவாதமாக இருந்தேன். அவர்கள் நான் கேட்டுக்கொண்டபடி ஒலிபெருக்கிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆனால் மறுநாள் நிகழ்ச்சியின் போது பார்த்தால், அத்தனை குழுக்களும் ஃபீட்பேக் ஸ்பீக்கர்களை முன்னால் கொண்டு வைத்துக்கொண்டிருந்தார்கள். நான் சுட்டிக்காட்டிய குறை அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது என்று தெரிந்துகொண்டேன்.


அமெரிக்கா போவதென்றால் விமானப் பயணத்துக்கே செலவாகி இருக்குமே யாராவது உதவினார்களா?
அதுதான் கடைசிவரை கிடைக்கவே இல்லை. அரசாங்க உதவியும் இல்லை. தனியார் ஸ்பான்சர்ஷிப்பும் இல்லை. எல்லாம் ஆர்வத்தில் நாங்கள் சொந்தப் பணத்தைப் போட்டுக்கொண்டுதான் போனோம். ஆனாலும் என்ன நாட்டுக்கு ஒரு பரிசை வாங்கிக்கொண்டு வந்துவிட்டோமே என்ற மகிழ்ச்சி மனசில் நிறைந்திருக்கிறது. இது ஒருவகையில் கலாசார பரிவர்த்தனை மாதிரிதான். அதுவுமல்லாமல், இந்த மாதிரி உலகளவிலான போட்டியில் கலந்துகொள்வது இதுதான் முதல் முறை. முதலில் கலந்துகொண்டபோதே பரிசை வாங்கிக்கொண்டு வருவது எங்களுக்குப் பரவச உணர்வைத் தந்தது. ஹார்மோனியம், மிருதங்கம் என்று இரண்டு பக்க வாத்தியங்கள். நிர்மல் குமார், சங்கரபாண்டியன், முரளி, ஷரத், பத்மா, அகிலா ஜகன்னாதன், வி.ஜி.லக்ஷ்மி, மாலா வெங்கடகிருஷ்ணன், லதா கிருஷ்ணகுமார், சாந்தி (எழுத்தாளர் ரசவாதியின் மகள்), சீதாலக்ஷ்மி, அமுதா ஆனந்த், விஜயஸ்ரீ ராமன், இந்திரா ராமநாதன் என்று எங்கள் குழுவில் இருந்தோம். எங்களுக்கு எந்தவிதமான அசௌகரியமும் பயணத்தில் ஏற்படவில்லை. எத்தனை மகிழ்ச்சியுடன் போனோமோ, அதற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.


எத்தனை வகைகளாகப் பாடல்களைப் பிரித்திருந்
 தார்கள்?


இருபத்து மூன்று பிரிவுகள். குழந்தைப் பாடல்கள், உலக ஒத்திசைவுப் பாடல்கள், ஃபோக் எனப்படும் நாடோடிப் பாடல்கள், இளைஞர் பாடல்கள், பாப் பாடல்கள், என்று பல வகைகள். நாங்கள் போட்டியிட்டு வென்றது ஃபோக் பாடல்கள் என்ற 21ஆவது பிரிவில். சீனர்கள் குழுவில் நாற்பது பேர் வந்திருந்தார்கள். அவர்களை சீன அரசாங்கமே அனுப்பிவைத்திருந்தது. இந்தியாவிலிருந்து போயிருந்த நாங்கள் தெளிவாக, அழகாக ஆங்கிலம் பேசியதைக் கேட்டு அமெரிக்கர்களுக்கு வியப்பு. உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று வியப்புடன் கேட்டார்கள். ஃபீனிக்ஸிலும், சிகாகோவிலும் இரண்டு பயிற்சிப் பட்டறைகள் நடத்தினோம். அதில் இந்தியர்களும் இருந்தார்கள், அமெரிக்கர்களும் சிலர் பங்கு கொண்டார்கள்.


 மறக்க முடியாத நிகழ்ச்சி?


நகரில் ஒரு சிறு ஃபவுண்டன் அருகே அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, எங்களைப் பாட்டுக்குழு என்று அறிந்தவுடன், எனக்காக ஒரு பாட்டுப் பாடுவீர்களா என்று கேட்டார். அந்த நடைபாதையிலேயே நின்றுகொண்டு அவருக்காகப் பாடினோம். அந்தப் பாட்டியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவருக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது, இந்திய இசையும் அவர் கேட்காதது. ஆனால் அவர் மனம் அந்த இசையில் உருகிப்போய், கண்ணீர் வடித்தார் அல்லவா அன்றைக்கே, அந்தக் கணமே எங்களுக்குப் பரிசு கிடைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டோம்.


- தமிழ் நாட்டுக் குழுவுக்குத் தாமிரப்பதக்கம். சீனாவுக்கு தங்கப் பதக்கம். வெனிசூலாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.


சுதா ராஜா, இந்திய சேர்ந்திசைக்கு எம்.பி.சீனிவாசனின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். மறைந்த பாடகி சுலோசனா பட்டாபிராமனிடம் முறையாக கர்நாடக இசை பயின்றவர். பள்ளிக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சேர்ந்திசை வகுப்புகள் நடத்தி வருபவர். அடுத்த ஆண்டு பாலி நகரில் நடக்க இருக்கும் ஆசிய சேர்ந்திசைப் போட்டியில் கலந்துகொள்ள இப்போதே உற்சாகம் காட்ட ஆரம்பித்து விட்டனர் டாக்டர் சுதா ராஜாவும் குழுவினரும்!

 
நன்றி:- தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 05-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.