Sunday, August 5, 2012

சென்னை வறட்சியைப் போக்க வட்டக் கால்வாய்த் திட்டம் :-




                                                                           குமரி நம்பி

சென்னையில், வடகிழக்கு பருவமழை வரும்போதெல்லாம், 10 டி.எம்.சி., தண்ணீர், கடலில் வீணாக, கலக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வட்டக்கால்வாய் திட்டத்தை, அம்பத்தூரைச் சேர்ந்த சுதேசி இயக்கம் முன் வைக்கிறது. இத்திட்டம் செயல்படத்துவங்கினால், சென்னையில் உள்ள ஏரிகளை இணைத்து, அதை, சுற்றுலா தலமாக்கவும் இந்த இயக்கம் வரைவுத் திட்டம் வைத்துள்ளது. இது குறித்து விளக்குகிறார், சுதேசி இயக்கத்தின் தலைவர் குமரி நம்பி.

வட்டக்கால்வாய்த் திட்டம்:-

அடையாறு கூவம், கொசத்தலை ஆறு ஆகியவற்றை உள்ளடக்கிய, 7,282 சதுர கி.மீ., பரப்புடைய சென்னை படுகையின் முக்கிய பகுதிகளில், இந்த வட்டக்கால்வாய் திட்டம் அமைய இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், 11.4 டி.எம்.சி., மழைநீர் சென்னை படுகையிலிருந்து, கடலில் வீணாக கலக்கிறது. இவற்றை சேமித்து பயன்படுத்தும் நீர்வழியை, சுற்றுலா தலமாக அமைக்க முடியும். சென்னையைச் சுற்றி, 200 சதுர கி.மீ., பரப்பளவில் வரும் முக்கியமான சில ஏரிகளை, கால்வாய்கள் மூலம், இணைக்க வேண்டும். இதனால், அனைத்துப் பகுதிகளும் நீர்வளம் மிக்கதாக அமையும். ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், நிலத்தடி நீர்வளம் பெருகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நிலத்தினுள் கடல்நீர் புகுந்து, நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாத கடின நீராக உள்ளது. ஏரிகளை இணைக்கும் வட்டக்கால்வாய் மூலம், நல்ல தண்ணீர் நிலத்தினுள் புகுந்து, கடல் நீர் வெளியேற்றப்படும். இதனால், தூய்மையான நிலத்தடி நீரை பெறலாம். இத்திட்டம், சென்னையின் மழைநீர் வடிகாலாக அமையும். மழைத்தண்ணீர் நகருக்குள் தேங்காமல், அந்தந்த பகுதி கால்வாய் மூலம், வட்டக்கால்வாய் மற்றும் ஏரிகளில் சேமிக்கப்படும். திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக, 450 சதுர கி.மீ., பரப்பளவும், இரண்டாம் கட்டமாக, 1,050 சதுர கி.மீ., பரப்பளவுமாக, 1,500 சதுர கி.மீ., பகுதி, நீர்வளம் நிலவளம் மிக்கதாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.



உபரிநீர் சேமிப்பும் வெளியேற்றமும்:-

இரட்டை ஏரி, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, அலமாதி ஏரி, ஞாயிறு ஏரி, பெருங்காவூர் ஏரி, விச்சூர் ஏரி ஆகிய பெரிய ஏரிகள், 300 அடி அகலம், 20 அடி ஆழக்கால்வாய் மூலம், வட்டக்கால்வாய் திட்டத்தில் இணைக்கப்படும். இரட்டை ஏரியிலிருந்து கொரட்டூர், அம்பத்தூர், அலமாதி ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து, கொசத்தலை ஆற்றுடன் காரனோடையில் இணைக்கப்படும். கொசத்தலை ஆற்றிலிருந்து ஞாயிறு, விச்சூர், பெருங்காவூர் ஏரிகள், கால்வாய் மூலம் இணைக்கப்பட்டு, இரட்டை ஏரியுடன் சேர்க்கலாம். ஞாயிறு ஏரியிலிருந்து, பாடியநல்லூர் ஏரி வழியாக, அலமாதி ஏரிக்கு, 200 அடி அகலக்குறுக்கு கால்வாய் அமைக்கலாம். ஏறக்குறைய, 100 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் திட்டம் அமைக்கலாம். இந்த வட்டக்கால்வாயின் உட்புற நிலப்பகுதி, 200 சதுர கி.மீ., பரப்பாகவும், கால்வாய் பகுதிக்கு வெளியே, 250 கி.மீ., பரப்பளவு பகுதியும் நேரடி தொடர்புடையதாக மாற்ற வாய்ப்பு உள்ளது. கொசத்தலை ஆற்றுடன் வட்டக்கால்வாய் இணைக்கப்பட்டால், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், கடலில் கலக்காமல் சேமிக்கப்படும். வட்டக்கால்வாய், குறுக்கு கால்வாய் சேர்ந்து, 100 கி.மீ., நீளக்கால்வாய் அமையும். கொசத்தலை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். இதனால், நீர் சேமிக்கப்படுவதுடன், வட்டக்கால்வாய் பகுதி உபரி நீரை, இந்த வழியாக கடலுக்கு திருப்பி விடமுடியும்.



ஆக்கிரமிப்பைக் கையகப்படுத்துதல்:-

வட்டக்கால்வாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய சிரமம் இருக்காது. ஒவ்வொரு ஏரிக்கும் நீர்வரத்துக்கால்வாய், உபரிநீர் வெளியேற்றும் கால்வாய்கள் உண்டு. தற்போது அவை பயனற்றதாக உள்ளது. குறிப்பாக தூர்ந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. இவற்றை கையகப்படுத்தி, அகலப்படுத்தி, சீரமைத்து, திட்டத்தை நிறைவேற்றலாம். இந்த வட்டக்கால்வாய் பகுதிகளுக்குள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பாதுகாக்கப்பட்ட ஏரிகளான செங்குன்றம் ஏரி என்று அழைக்கப்படும் புழல் ஏரியும், சோழவரம் ஏரியும் உள்ளன. இந்த இரு ஏரிகளுக்கும், நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்ற கால்வாய்கள் உள்ளன. பல்வேறு திட்டங்களின் பெயரால், சில ஏரிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களையும் பயன்படுத்தலாம்.



வேலைவாய்ப்பு:-

சென்னை புறநகர் வட்டக்கால்வாய் திட்ட நிறைவேற்றத்திற்கு, 2,000 கோடி ரூபாயும், திட்ட பகுதிகளில் பாதிக்கப்படும் குடியிருப்போர் மற்றும் தொழில் துறையினருக்கு இழப்பீடு மற்றும் மாற்றுத் திட்டங்களுக்கு, 500 கோடி ரூபாயும், துணைத்திட்டங்களுக்கு, 500 கோடி ரூபாயுமாக மொத்தம், 3,000 கோடி ரூபாய் தேவைப்படும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், 50 ஆயிரம் பேர் நேரடி வேலை வாய்ப்பு பெறுவர். சுற்றுலாத் தொழில் மேம்பாட்டின் மூலம், அன்னியச் செலாவணி பெருமளவு கிடைக்கும். உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ஆட்டோ, கார் போன்ற போக்குவரத்து தொழில்கள் வளர்ச்சி அடையும்.



ஏரிகள் இணைப்பு:-

ஒவ்வொரு ஏரிப்பகுதியையும், ஒவ்வொரு சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும். இதில், மீன்காட்சி சாலை, மிருகக்காட்சி சாலை, நீர் விளையாட்டு, நீச்சல் குளம், சிறுவர் பூங்கா போன்ற பலவகை பொழுதுபோக்கு தலங்களை உருவாக்கலாம். 200 சதுர கி.மீ., பரப்பு நிலத்தைச் சுற்றிலும் உள்ள கால்வாய்களிலும், படகு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். 100 கி.மீ., நீளப்பரப்பு பகுதியில் அமைக்கப்படும் கால்வாய் மூலமாக, படகு போக்குவரத்து அமையும். படகுகள் மூலம் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வட்டக்கால்வாய் திட்டத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள ஏராளமான குளம், குட்டைகள் சிறிய ஏரிகளை சீரமைத்து, இதனுடன் இணைக்க வேண்டும்.சென்னையின் புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தின் அம்பத்தூரை மையமாகக் கொண்டு ஆவடி, அலமாதி, சோழவரம், காரனோடை, ஜனப்பன் சத்திரம், பஞ்செட்டி, தச்சூர், ஞாயிறு, அருமந்தை, பூதூர், விச்சூர், பெருங்காவூர், மணலி, மாதவரம், புழல், மூலக்கடை, வில்லிவாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதிகளடங்கிய, 450 சதுர கி.மீ., பரப்பளவு பகுதிகள், நேரடி தொடர்புடையதாக மேம்பாடு அடையும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டத்தின் பெரும் பகுதிகள், ஏறக்குறைய, 1,500 சதுர கி.மீ., பகுதி படிப்படியாக பயனடையும். நீர்வழிச்சுற்றுலா தலத்தை மையமாகக் கொண்ட நேரடி மற்றும் துணைத்தொழில்கள் மூலம், இப்பகுதிகள் பெருமளவு பொருளாதார வளர்ச்சி பெறும்.



படகுத் துறையாகும் ஏரிகள்:-

சென்னை மாநகர எல்லையான மூலக்கடையை ஒட்டிய இரட்டை ஏரியை, தொடக்க இடமாக அமைக்க @வண்டும். ஜி.என்.டி., சாலைக்கு இருபுறமும் இரட்டை ஏரி உள்ளது. சாலையில் மேம்பாலம் அமைத்து, இந்த இரண்டு ஏரிகளையும் ஒருங்கிணைத்து, இந்த ஏரியின் ஒரு பகுதியில் நீச்சல் குளம் அமைக்கலாம். இரட்டை ஏரியின் மறுபகுதியை படகு துறையாக மாற்றி, சுற்றுலா படகு போக்குவரத்து மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து, சரக்கு படகு போக்குவரத்தையும் நடத்தலாம். மற்ற ஏரிகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு சுற்றுலா மையமாக ஏற்படுத்துவதால், அந்தந்த ஏரிப்பகுதிகள் அதற்கேற்ற வகையில் அமைக்கப்படும். காலை, இரட்டை ஏரியிலிருந்து துவங்கும் சுற்றுலா பயணம், படகு மூலம், மீண்டும் இரட்டை ஏரியை மாலையில் வந்தடையும். காலை முதல், மாலை வரை, 100 கி.மீ., தூரம் தண்ணீரில் பயணம் செய்து, பல்வேறு பொழுதுபோக்கு மையங்களை கண்டுகளித்து, படகு மூலம் சுற்றி வந்து விடலாம்.



மழைநீர் சேமிப்பு:-

இத்திட்டத்தின் மூலம், நேரடியாக, 450 சதுர கி.மீ., பகுதியின் நீர்வளம் மேம்படும். கடினநீர் நல்ல நீராகும். அதனால், அப்பகுதி முழுக்க மரங்களை நட வேண்டும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால், மரங்களும் செழித்து வளரும். மரங்கள் அதிகமாகும் போது, வெயிலின் கடுமை தன்மை குறையும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், எளிதாக தண்ணீர் கிடைக்கும். சென்னையில் இருந்த ஏரி, குளம் குட்டைகள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டதால், மழைநீர் முழுவதும் கடலில் கலக்கிறது. 200 அடி ஆழமும், 300 அடி அகலமும் கொண்ட இந்த வட்டக்கால்வாய் செயல்படத் துவங்கினால், மழைநீர் முழுவதும் சேமிக்கப்படும்



சுற்றுலாத் தலமாகிவிடும் ஏரிகள்:-

இத்திட்ட செயல்பாட்டிற்கு தேவையான, 3,000 கோடி ரூபாயை அரசு செலவிட வேண்டியதில்லை. அப்பகுதியிலுள்ள வேலை தேடுவோரை, தொழில் முனைவோரை ஒருங்கிணைத்து, கூட்டுறவுத் துறை 
நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும். வங்கி மூலம், கடனுதவி பெற்று, இந்நிறுவனத்தை செயல்படுத்திடலாம். வங்கிக் கடன் மிக எளிதாக, திருப்பி செலுத்தப்படும். வட்டக்கால்வாய் திட்டம் செயல்படத் துவங்கியதும், 450 சதுர கி.மீ., பரப்பளவு நிலம், உடனடியாக நீர்வளம் பெறும்; பசுமைப் பகுதியாக மாறும். சென்னையின் பிற பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிறிய, பெரிய ஏரிகளையும் இத்திட்டத்துடன் இணைக்கலாம். இதனால், நீர்பரப்பு மேலும் அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஏரிகள், குளம், குட்டைகள் சீரமைத்து உபரிநீர் வட்டக்கால்வாய் பகுதிக்கு வந்தடைய வழியமைத்து விட வேண்டும்.இந்த இரண்டாம் கட்ட செயல் திட்டத்தின் வாயிலாக, 1,050 சதுர கி.மீ., பரப்பளவு பகுதி, வளம் பெறும். 1,500 சதுர கி.மீ., இந்நீர்வளச் சுற்றுலா தலம், உலகளாவிய அளவில் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக அமையும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு அதிகரிக்கும். நீர்வழி போக்குவரத்து, படகு போக்குவரத்து முக்கியத்துவம் பெறும். பஸ், ரயில் போக்குவரத்தைத் தொடர்ந்து, நீர்வழி போக்குவரத்தான படகு போக்குவரத்து மூலம், சென்னை புதிய தோற்றத்தைப் பெறும்.

சென்னையின் அபரிமிதமான நெருக்கடி குறையும். சென்னையின் புறநகர் பகுதிகள் இயற்கை வளத்துடனும், கிராமியச் சூழலுடன் அமையும். சென்னையின் மற்ற கால்வாய்களான பக்கிங்காம் கால்வாய், அடையாறு கால்வாய், கூவம் கால்வாய் போன்றவற்றை சீரமைத்து, படகு போக்குவரத்தை ஏற்படுத்தி, வட்டக்கால்வாயுடன் இணைக்கலாம். இதன்மூலம் ஒட்டுமொத்த சென்னைப் பகுதிகளும், படகு போக்குவரத்தைப் பெறும். வட்டக்கால்வாய் திட்டம் செயல்படுத்தத் துவங்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள், சென்னையின் நிலத்தடிநீர் மட்டம் படிப்படியாக நன்னீராக மாறி விடும். இதனால், சென்னை நகரின் நிலத்தடி நீரை, குடிநீராக பயன்படுத்தும் நிலை உருவாகும்.தாராளமான தண்ணீர், சுலபமான போக்குவரத்து, மிதமான தட்பவெட்ப நிலை போன்ற காரணங்களால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இயற்கை எழில் பகுதியாக மாறும். தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்விடம் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த இடமாக அமையும். மிதமான தட்பவெட்ப நிலை, சிறந்த வாழ்க்கைச் சூழலை உருவாக்கும். அம்பத்தூர், கிண்டி, மாதவரம், திருவொற்றியூர், திருமழிசை, ஸ்ரீபெரும்பதூர், மணலி, கும்மிடிப்பூண்டி போன்ற தொழிற்பேட்டைப் பகுதிகள் அதிக அளவிலான வளர்ச்சி பெறும்.



10 டி.எம்.சி., தண்ணீர் சேமிப்பு:-

குடிநீர் வழங்கல் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும், பல நூறு கோடிகள் செலவழிக்கப்படுகிறது. இந்நிலைக்கு மாற்றாக, 3,000 கோடி ரூபாய் செலவில், 5 டி.எம்.சி., தண்ணீரையும், படிப்படியாக 10 டி.எம்.சி., மழைநீரை சேமிப்பதுடன், படகு போக்குவரத்து நெருக்கடியையும் குறைத்திடலாம். ஒவ்வொரு ஏரியிலும் அமைக்கப்படும் சுற்றுலாத் தலம் மூலம், உலகின் தலை சிறந்த நீர்வழிச் சுற்றுலா தலமாகச் சென்னையை மாற்றலாம். அன்னிய முதலீடுகள் உதவிகள் இல்லாமல், மிகச் சிறந்த முறையில் சுதேசிப் பொருளாதார மேம்பாட்டிற்கான வளர்ச்சியை, இத்திட்டத்தின் மூலம் எளிதாகப் பெறலாம்.



குமரி நம்பி, தலைவர், சுதேசி இயக்கம் :- 

காலை, இரட்டை ஏரியிலிருந்து துவங்கும் சுற்றுலா பயணம், படகு மூலம் மீண்டும் இரட்டை ஏரியை மாலையில் வந்தடையும். காலை முதல், மாலை வரை, 100 கி.மீ., தூரம் தண்ணீரில் பயணம் செய்து, பல்வேறு பொழுதுபோக்கு மையங்களை கண்டுகளித்து, படகு மூலம் சுற்றி வந்துவிடலாம்.



  நன்றி :-தினமலர் முதல் பக்கம் » பொதுச் செய்தி »தமிழ்நாடு  மார்ச் 3, 2012 

0 comments:

Post a Comment

Kindly post a comment.