Sunday, August 5, 2012

ஏ.ஜி. அலுவலகத்தில் பணிபுரிந்த எழுத்தாளர் மகரம்-!

2012/8/5 Kannan Natarajan <tharagai@gmail.com>
எழுத்தாளர்கள் பலரோடு இணக்கமான நட்புறவு கொண்டு அதன் காரணமாகவே இலக்கியத்தை வளர்த்தவர் என்ற பெருமை மகரத்திற்குப் பொருந்துவதுபோல் மற்ற எந்த எழுத்தாளருக்கும் பொருந்தும் என்று தோன்றவில்லை. 1919ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர்.


தொகுப்பு நூல்கள்தானே தமிழின் மரபு. அகநானூறு, புறநானூறு என்றெல்லாம் சங்கப் பாடல்கள் பலவும் தொகுப்புதானே! அந்தச் சங்ககாலப் பழைய தொகுப்பு மரபு நவீன இலக்கியத்திலும் தொடரக் காரணமாக இருந்தவர் மகரம்தான்.


"எழுதுவது எப்படி?" என்ற தலைப்பில் பற்பல முக்கியமான எழுத்தாளர்களின் கட்டுரைகளைக் கேட்டுப் பெற்றுப் புத்தகங்களாக்கினார். சக எழுத்தாளர்கள் அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவர் கேட்டபோதெல்லாம் கட்டுரை கொடுத்தார்கள்.


"விமர்சனம் எழுதுவது எப்படி?", "சிறுகதை எழுதுவது எப்படி?", "கவிதை எழுதுவது எப்படி?", "நாவல் எழுதுவது எப்படி?", "திறனாய்வு எழுதுவது எப்படி?" என்றெல்லாம் அவர் கேட்டு வாங்கிய "எப்படி" வகைக் கட்டுரைகளை எப்படித்தான் வாங்கினார் என்று இப்போது நினைத்தால் மலைப்பு ஏற்படும். அந்தளவு தமிழ்மொழியின் அவர் காலத்துச் சாதனையாளர்கள் அனைவரிடமும் அவரால் கட்டுரை வாங்கிவிட முடிந்தது. அத்தனை அன்பு எல்லோருக்கும் அவர் மீது. அவருடைய குழந்தை மனமும் வெகுளிக் குணமும் பலரும் அவர்மீது பாசம் கொள்ளக் காரணங்களாக அமைந்தன. (எழுதுவது எப்படி வரிசைத் தொகுப்புகளை ஆர்வத்தோடு தொகுக்கச் செய்து புத்தகமாக வெளியிட்ட பெருமை பழனியப்பா பிரதர்ஸ் அதிபர் செ.மெ.பழனியப்பச் செட்டியாருக்குரியது.)


கே.ஆர். கல்யாணராமன் என்ற இயற்பெயர் கொண்டவர் மகரம். இவருக்கு "மகரம்" என்ற பெயரைச் சூட்டியவர் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் தேவன். இலக்கியக் கூட்டங்கள் பலவற்றுற்கும் (வெளியூரானாலும் கூட) தம் மனைவி சங்கரியோடு செல்வது மகரத்தின் வழக்கம். பல எழுத்தாளர்களை அன்போடு தம் இல்லத்திற்கு அழைத்துத் தம் மனைவியின் கையால் உணவு பரிமாறச் செய்து அதை அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வதும் கூட அவர் பழக்கம்தான். அவரது இல்லத்தில் சாப்பிட்டிராத எழுத்தாளர்கள் அந்தக் காலத்தில் அபூர்வம்.


மகரம் ஏ.ஜி. அலுவலகத்தில் பணிபுரிந்தவர். கதரே அணிந்த காந்தியவாதி. "காந்தி வழிக் கதைகள்" என்ற ஒரு தொகுப்பையும் கொண்டுவந்தார்.  இராஜாஜி, கல்கி, வசந்தன், புதுமைப்பித்தன், தொ.மு.சி.  இரகுநாதன், மாயாவி, அநுத்தமா உள்ளிட்ட 50 எழுத்தாளர்களின் காந்தியக் கதைகள் அந்தத் தொகுப்பை அலங்கரித்தன.


வானதி திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டபடி, 101 சிறுகதைகளைப் புகழ்பெற்ற எழுத்தாளர்களிடமிருந்து கேட்டுவாங்கித் தொகுத்துக் கொடுத்தார். அவை "சிறப்புச் சிறுகதைகள்" என்ற தலைப்பில் மொத்தம் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.


மகரம் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் 10 நூல்களாகவும், சிறுகதைத் தொகுதிகள் 2 நூல்களாகவும் வந்துள்ளன. மகரம் எழுதிய படைப்புகள் க.நா.சு. நடத்திய சந்திரோதயம், வசந்தன் நடத்திய பாரிஜாதம், பி.எஸ். இராமையாவின் மணிக்கொடி போன்ற பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் வானொலி எழுத்தாளர். இவரது படைப்புகள் பலவற்றை வானொலி தொடர்ந்து ஒலிபரப்பியுள்ளது.


நிறைய பயணம் மேற்கொண்டவர். இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் போய்வந்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை எல்லாம் அந்தக் காலத்திலேயே போய்ப் பார்த்து வந்திருக்கிறார். தமிழ்மொழியின் மிக முக்கியமான ஓர் எழுத்தாளர் உருவாவதற்கு மகரம் ஒரு காரணம். உலகத் தரத்தில் அமைந்த சிறுகதைகளை எழுதியவரும், தமது பத்துகோடி ரூபாய் சொத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் அநாதை இல்லத்திற்கு வழங்கியவருமான அமரர் ஆர்.சூடாமணியின் எழுத்துலக வளர்ச்சியின் பின்னணியில், தொடக்கத்தில் உதவிய பாசமிகு கரங்கள் மகரத்தினுடையவை.


"கேட்ட வரம்" என்ற தலைப்பில் எழுத்தாளர் அநுத்தமா கேட்டவரம்பாளைய ஸ்ரீராமநவமி உற்சவத்தை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்த நாவலில் வரும் கேட்டவரம்பாளையத்திற்கு பஜனை நிகழ்ச்சிக்காகச் செல்லும் வழியில், மதுராந்தகம் அருகே பேருந்திலேயே காலமானார் (4.4.2001) மகரம். "அநாயாச மரணம் வேண்டும்" என்று மகரம் இறைவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கேட்டவரம்பாளையம் செல்வதற்குள், அவர் "கேட்ட வரம்" அவருக்குக் கிடைத்துவிட்டது.


எழுத்தாளர்கள் அடக்கத்தோடும் பிற எழுத்தாளர்களிடம் நட்புறவோடும் திகழ்ந்தால் எப்படிப்பட்ட இனிமையான எழுத்துலக வாழ்வை வாழலாம் என்பதற்கு மகரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

திருப்பூர் கிருஷ்ணன்

நன்றி:- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.