Wednesday, August 22, 2012

ஐந்து ஆண்டுகளாகக் கசியும் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள்கள்






தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வினாத்தாள்கள், 2007-ம் ஆண்டிலிருந்தே தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வெளியாவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோட்டிலுள்ள இணையதள மைய கம்ப்யூட்டரை அரசு அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்மைக் காலங்களில் நடைபெற்ற குரூப் 4 உள்ளிட்ட சில டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகின. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஈரோட்டில் கையால் எழுதப்பட்ட குரூப் 2 வினாத்தாள்களின் பிரதிகளை பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
2007-ம் ஆண்டு முதல்...இணையதள மையத்தின் கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ள பதிவுகளை நீக்கும் போது (பிறருக்கு அனுப்பியவை மற்றும் நமக்கு வந்த மின்னஞ்சல்கள்) அவை மொத்தமாக ஒரு இடத்தில் ("டிராஷ்') சேகரமாகும்.
அந்தப் பகுதியைச் சோதித்துப் பார்த்ததில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்கள் கையால் எழுதப்பட்டு அவை பிறருக்கு அனுப்பப்பட்டு பின்னர் அனுப்பும் பகுதியில் (சென்ட் பாக்ஸ்) இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வினாத்தாள்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் என்பவை, சம்பந்தப்பட்ட தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தமிழகம் முழுவதும் நடத்திய தேதிகளுக்கு முன்பானவை எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள்கள் வெளியாகி இருப்பது தெளிவாகத் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வுகள் ரத்தாகின்றன? கடந்த ஓராண்டுக்குள்ளாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப் 4 உள்ளிட்ட முக்கியப்க் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில், முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளையும் ரத்து செய்யலாமா என்பது குறித்து தேர்வாணையத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. தேர்வாணைய உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஒருமித்தமாக இது குறித்த முடிவை எடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

2007-ம் ஆண்டிலிருந்தே தேர்வாணைய வினாத்தாள்கள் கசியும் நிகழ்வுகள் நடைபெற்றாலும் இப்போதுதான் அவை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அரசு அதிகாரிகளின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நன்றி :-தினமணி 22-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.