Wednesday, August 22, 2012

தாமிரபரணியில் ,பாம்புகளுடன் விளையாடிய பாடம் ஆசிரியர் அ.நாராயணன்.








இது மூன்றரை ஆண்டுகள் முன் சிதம்பரம் நகரில் உள்ள நந்தனார் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவச் செல்வங்களுடன் இணைந்து குப்பைக் கூடமாக காட்சியளித்த பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தபோது, அங்குள்ள அறிவியல் கூடத்திற்கு அருகில் உள்ள புதரில் இருந்து எடுக்கப்பட்ட ஆறடி நீள பாம்பு. அதைச் சமைத்துச் சாப்பிட்டுவிடுவார் காவலாளி என்று ஆசிரியர்கள் கூறியதால், பாம்பைக் காப்பாற்ற வேண்டுமே என்ற ஆதங்கத்தில், காவலாளிக்கு நூறு ரூபாய் இனாம் அளித்து, தயவு செய்து அதனை சாப்பிடவேண்டாம், அருகில் உள்ள நீரோடையில் விட்டுவிடுங்கள் என்று கூறியது ஞாபகம் வருகிறது. ஓடையில் விட்டிருப்பாரா, அல்லது சுட்டு சாப்பிட்டிருப்பாரா என்று அவ்வப்போது சந்தேகம் வந்து போகும்.

சிறு வயதில், நெல்லை தாமிரபரணி ஆற்றின் நீரை வயக்காடுகளுக்குப் பாய்ச்சும் வாய்க்காலில், கோடைகாலங்களில் நீர் வற்றும் பொது, சற்றும் இரக்கமில்லாமல், பாம்புகளைப் பிடித்து, சுழற்றி அடித்துக் கொன்று பருந்துகளுக்கு இரையாகப் போட்டு விளையாடியதும், முண்டந்துறை சேர்வலாறு காடுகளில் மரங்களையும், பாறைகளையும் நாள் முழுவதும் இழுத்துக் களைத்த வேலைக்கார யானைகளை,  பாகன்கள், பாலத்துக்கடியில் ஓடும் தெளிந்த தாமிரபரணி நீரில் குளிப்பாட்ட கொண்டு வரும்போது, சுகமாகப் படுத்துப்  போஸ் கொடுக்கும் யானைகளுக்கு செங்கலைக் கொண்டு அழுக்குப் போக தேய்த்து விட்ட ஞாபகமும், பதிலுக்கு யானைகள் சுடச்சுட பரிசாகக் கொடுக்கும் வாசனை வாசனையான, யானை விட்டைகளை கையில் ஏந்தி ஒருவொருக்கொருவர் எறிந்ததும், சூடான மணக்கும் விட்டைகளின் மீது ஏறி மிதித்து விளையாடியதும், தாமிரபரணி கரைகளில், பறந்து விரிந்த வெள்ளி மணல் கரைகளில், தினமும் தோழர்களுடன் காலை முதல் சுட்டெரிக்கும் மதியம் வரை சடுகுடு விளையாடியதும் ஒரு பெருமுச்சுப் பெருங்கனவாக வந்து போனது.

இருபது ஆண்டுகளுக்குப் பின், மனைவியுடனும் வளர்ந்த குழந்தைகளுடனும் பரவசத்துடன் ஊர் சென்று, விளையாடிய இடங்களைக் காட்ட முயன்ற பொழுது, தோற்று விட்டிருந்தேன்,

மணல் கொள்ளையர்களிடம். ஒட்டுமொத்தமாக வெள்ளி மணலைச் சுரண்டிவிட்டு, தாமிரபரணிக் கரைகளைக் குதறி மானபங்கப்படுத்தியிருந்தனர் மகாபாவிகள். பார்த்தபோது, அடையாளமே தெரியாமல் திகைத்து அதிர்ந்து விட்டேன்.

மினரல் வாட்டர் போன்ற தாமிரபரணி நீர், சாக்கடையாகக் கூனிப் போயிருந்தது. இன்றைக்கும் அதனை ஜீரணம் செய்துகொள்ள முடியவில்லை. எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ வந்துவிட்டேனோ?

பாடம் ஆசிரியர் நாராயணன்



0 comments:

Post a Comment

Kindly post a comment.