Monday, August 27, 2012

ஈ.வே.ரா. ஆதரித்த தமிழிசை ! என்ன செய்தன திராவிட இயக்கங்கள் ?


தமிழிசையை மீட்டெடுத்த மூவர்

நன்றி :-http://www.periyarpinju.com
இசையைக் கேட்டு மகிழாதவர் எவருமிலர். ஒலியின் நளினம் இனிய ஓசையாகிறது; அதுவே இசை எனப்படுகிறது. வாய்க்குச் சுவையானவற்றைத் தேடுகிறவர்களை விட, செவிக்குச் சுவையானவற்றை நாடுகிறவர்கள் உயர்ந்தவர்கள் என்கிறார் திருவள்ளுவர். சொல்லின் ஆழ்ந்த பொருளும், அதன் இனிய ஓசையும் செவிக்கு உணவாகும். இனிய ஓசையைப் பழந்தமிழில் பண் எனச் சொன் னார். அது பாடலுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். பண் எண்ணாம் பாடற்கு இயைபு இன்றேல் எனக் கேட்கிறது 573ஆம் குறள். பண் என்பதை ராகம் எனத் தற்காலத்தில் கூறுகிறார்கள். மத்தளம், தபேலா முதலியவை தரும் இனிய ஓசை தாளம் ஆகும். பாடுவதை யும், புல்லாங்குழல், நாதசுரம் முதலியவற்றை வாசிப்பதையும், யாழ், வீணை, வயலின் போன்றவற்றை மீட்டுவதையும், வேறுபட்ட பல ராகங்களில் செய்து இசை இன்பம் ஊட்டுகிறார்கள்.

கரைநாடு

பண்டைக் காலத் தமிழிசை, இப்பொழுது கருநாடக இசை எனப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசூலிப் பட்டினம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் ஆகியவற் றிற்கு இடைப்பட்ட கடல் சார்ந்த நிலப் பகுதி கரைநாடு எனப்படுகிறது. பெரும்பாலும் இப் பகுதியில் தமிழ் இசை சிறந்து விளங்கியதால், அதைக் கரைநாட்டு இசை என்றனர். அதுவே நாளடைவில் கருநாடக இசை என மாறியது.

தியாகராஜ சுவாமிகள் (1767-1847), சியாமா சாஸ்திரிகள் (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776-1835) ஆகியவர்களைச் சங்கீத மும் மூர்த்திகள் என்றும், அவர்களால் கருநாடக இசை வளர்ந்தது என்றும் சொல்வார்கள். இவர்கள் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் பாடியதால், தமிழிசையில் இருந்து கருநாடக இசை தோன்றியது என்பது பலருக்குத் தெரியா மல் போகிறது. இவர்கள் பிற மொழியில் பாடினா லும், இவர்கள் திருவாரூரில் பிறந்து, அவ்வூர் சார்ந்த சோழ வள நாட்டில் வாழ்ந்தவர்கள்.

இம்மூவருக்கும் முன்பே, கருநாடக சங்கீதம் எனும் தமிழ் இசையில், தமிழ் மொழியில் பாடல்களை இயற்றி வழிகாட்டியவர்கள், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் ஆவர். ஆகையால், அவர்கள் கருநாடக சங்கீதத்தின் முன்னோடிகள் என்றும், ஆதிமும் மூர்த்திகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

1. முத்துத் தாண்டவர்

நாகப்பட்டினத்திற்கு வடக்கிலும், பூம்புகாருக்கு வட மேற்கிலும் இருப்பது சீர்காழி. தேவாரம் பாடிய திருஞானசம் பந்தர் வாழ்ந்த ஊர் அதுவாகும். அங்கு சிவனுக்குத் தோணியப்பர் என்ற பெயரில் ஒரு கோயில் உண்டு. அதில் நாதசுரம் வாசிப்பவரின் மரபில் பிறந்தவர் தாண்டவர். தேவாரப் பாடல்களைப் பண்ணுடன் தோணியப்பர் கோயிலில் பாடுவது இவர் வழக்கம். சொற்களை முத்து முத்தாகப் பலுக்கி (உச்ச ரித்து) இசையின்பம் அளித்தார். இவ்வாறு இவருடைய தேவார இசையைக் கேட்ட வர்கள் இவருக்கு முத் துத் தாண்டவர் எனப் பெயர் சூட்டினர்.

சீர்காழிக்கு வடக்கில், கடலூர் மாவட்டத்தின் தென்பகுதியில் இருப்பது தில்லை எனும் சிதம்பரம் அங்கு நடராசன் வடிவி லான சிவனின் கோயிலுக்குச் சென்றார். அப்பொழுது தாமே பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தார். ஆகை யால் அம்பலவாணர் எனப் படும் தில்லை நடராசர் மீது பல கீர்த்தனைகளும் பதங்களும் பாடினார். அவற்றுள் இப்பொழுது 110 மட்டுமே கிடைக்கின்றன. பூலோக கயிலாயகிரி சிதம்பர மல்லால், புவனத்தில் வேறு முண்டோ எனத் தொடங்கும் கீர்த்தனையை அவர் முதலில் பாடினார், என்பர். அது, பவப்பிரியா ராகத்தில், ஜம்பை தாளத்தில் அமைந்தது. சேவிக்க வேண்டுமையா - என்றும், தெண்டனிட்டேன் என்று சொல்லுவீர் - என்றும் தொடங்கும் இவருடைய கீர்த்தனைகளும், தெருவில் வாரானோ - என வரும் பதமும் ரசிகர்களின் மனங்கவர்ந்தவை ஆகும்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, 17ஆம் நூற் றாண்டில் 1625ஆம் ஆண்டு மறைந்த முத்துத் தாண்டவர், ஆதி மும்மூர்த்திகளில் முதலாவதா கத் தோன்றி, கருநாடக சங்கீதம் எனப்படும் தமிழ் இசைக்கு அடித்தளம் அமைத்தார்.

2. மாரிமுத்தாப் பிள்ளை

சிதம்பரத்திற்கு அருகில் இருப்பது தில்லை விடங்கன் எனும் ஊர். அங்கு, தெய்வப் பெரு மாள் பிள்ளையின் மகனாக 1712இல் பிறந்தவர், மாரிமுத்தாப் பிள்ளை. சிவகங்கநாத தேசிகர் இவருக்குத் தமிழ், மற்றும் சமய நூல்களைத் கற்றுத் தந்தார். அத்துடன் இவர் தம் இசைத் திறனை வளர்த்துக் கொண்டார். இவர் தில்லை நடராசர் மீது பல கீர்த்தனைகளையும் பதங் களையும் பாடினார். அவற்றுள் 25 மட்டுமே இப்பொழுது கிடைத்துள்ளன. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - எனைக் கைதூக்கி ஆள் தெய்வமே எனத் தொடங்கும் கீர்த்தனை யதுகுல காம்போதி ராகத்தில் அமைந்ததாகும். இதைப் போன்றே, என்ன பிழைப்பு உன்றன் பிழைப்பையா, எனவும், ஒருக்கால் சிவசிதம்ப ரம் என்று சொன்னால், எனவும் தொடங்கும் பாடல்கள் கருநாடக இசை உலகில் பிரபலமா னவை. இவை அல்லாமல் வட திருமுல்லைவா யில், கொடியிடை அம்மை பேரில் பஞ்சரத் தினமும், தில்லைவிடங்கன் அய்யனார் மீது பதிகங்களும், மற்றும் பிறவும் இயற்றி இசைத் தமிழை வளர்த்தார்.

3. அருணாசலக் கவிராயர்

சீர்காழிக்கு அருகில் இருப்பது தில்லையாடி எனும் ஊர். அங்கு நல்லதம்பிப் பிள்ளை, வள்ளியம்மை எனும் வாழ்வு இணையருக்கு 1711இல், அருணாசலம் பிறந்தார். இளம் வயதில் பெற்றோரை இழந்த இவரைத் தமையன்மார் வளர்த்தனர். முதலில் தில்லையாடியிலும், அடுத்து தருமபுரத்திலும் பயின்றார். அம்பல வாணக் கவிராயரிடமும், தருமபுர ஆதீனப் புலவர்களிடமும், தமிழ் இலக்கியங்களையும் சமய சாத்திரங்களையும் கற்றார். ஒழுக்கமும் அறிவும் வாய்ந்த இவரை, ஆதீனத் தலைமை ஏற்கும் வகையில், துறவியாக வேண்டினர். ஆனால் இவருக்கு அதில் ஆர்வம் இல்லை. மேலும் கல்வி அறிவை வளர்த்துக் கெண்டார். 30ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். காசுக் கடைத் தொழில் செய்தார். அத்துடன் அனை வரும் விரும்பும் வகையில் புராண இலக்கியச் சொற்பொழிவுகள் செய்தார். இந்நிலையில், அருணாசலக் கவிராயர் என அழைக்கப் பெற்றார்.

சிதம்பரநாத முனிவர், சீர்காழியில் தருமையா தீன மடத்தைச் சேர்ந்தவர். பள்ளுப் பிரபந்தம் ஒன்றைத் தொடங்கி, முடிக்காமல் இருந்தார். அதை ஒரே இரவில் அருணாசலக் கவிராயர் பாடி முடித்தார். பினபு, குடும்பத்துடன் சீர்காழியில் குடியேறினார். புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, நாடகம், வண்ணம், பிள்ளைத் தமிழ் எனும் வெவ்வேறு வகையான நூல்கள் இயற்றினார். தமது 60ஆவது வயதில் இராமநாடகக் கீர்த்தனை களை யாத்தார். இதில், 40 பண்களைப் பயன்படுத்தி, தரு எனும் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். ஆரோ... இவர் ஆரோ... என்ன பேரோ ... அறியேன்... எனத் தொடங் கும் பாடல், கருநாடக இசைப் பாடல்கள் விரும்பிப்பாடும் ஒன்றாகும். ஏன் பள்ளி கொண்டீரையா, சிறீரங்க நாதரே, என்பது இவருடைய பாடல்களில் புகழ்பெற்ற ஒன்றாகும்.

இவ்வாறு ஆதி மும்மூர்த்திகளால் மீட்டளிக்கப்பட்ட தமிழிசை கர்நடக சங்கீதமாக மாறியபொழுது, தமிழ்நாட்டில் பிறமொழி ஆதிக்கம் ஊன்றிவிட்டது.

ஆகையால் 1940களில் அண்ணாமலை அரசர் போன்றவர்கள், தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவிக்கும் தேவை ஏற்பட்டது. மக்களின் மொழியில், அவர்களுக்குப் பயன்தரும் கருத்துகளை இனிமையுடன் தரவிரும்பிய பெரியார், பொருளும் பண்பும் இல்லாத, தீமை தரும் பாடல்களை விடுத்து, அறிவார்ந்த செய்திகளை உணர்வுடன் தரும் தமிழிசையை ஆதரித்தார்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.