Wednesday, August 29, 2012

இந்தியாவின் சில்லறை வணிக முதலீடு குறித்து ஒபாமா கவலை ?


இந்தியாவில் தொழில்முதலீட்டுக்கான சூழல் மோசமாகிக் கொண்டே வருகிறது'' என்று மிகுந்த அக்கறையுடன் கவலைப்பட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

சில்லறை வர்த்தகம் போன்ற பல துறைகளில் வெளிநாட்டு முதலீடு இடம்பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அல்லது முழுத்தடை விதிக்கப்படுவது குறித்து ""அமெரிக்க-இந்திய நல்லுறவில் அக்கறை கொண்டுள்ள'' அமெரிக்க வர்த்தக சமூகத்தினர் மிகவும் கவலை அடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 ""சில்லறை வர்த்தகத்தில் அமெரிக்க முதலீட்டை அனுமதிப்பதால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெருகும்'' என்றும் கூறியிருக்கிறார் ஒபாமா.

பல இலச்சினை சில்லறை வர்த்தகத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 51% வரை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவை மத்திய அரசு தாற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தாலும், வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் அதை அனுமதித்துவிடவே துடித்துக் கொண்டிருக்கிறது.
 அமெரிக்காவில் இப்போது வேலையில்லாதவர் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 8% ஆக இருக்கிறது.

இது அவர்கள் நாட்டு வாழ்க்கைத்தரத்துக்கு மிகவும் அதிகம். பொருளாதாரம் ஓரளவுக்கு மீட்சி பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி அளவானது எதிர்பார்த்த அளவைவிடக் குறைவு. சந்தைகளில் பொருள்களுக்கு போதிய கிராக்கி இல்லை. மக்களிடைய வருமானம் இல்லாததால் செலவு செய்வது குறைந்துவிட்டது. 2012-ல் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வெறும் 1.5% தான். எனவேதான் வெளிநாடுகளில் கிடைக்கும் புதிய சந்தையை நிச்சயம் பிடித்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது.

 முக்கிய இடத்தில் சில்லறை வர்த்தகம்:

சில்லறை வர்த்தகத்துறை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது. எந்தத் துறையில் எதை உற்பத்தி செய்தாலும் அதை நுகர்வோருக்கு சில்லறை வர்த்தகம் மூலம்தான் விற்க முடியும்.

உலகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 250 பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஓராண்டில் மொத்தமாக 3.94 டிரில்லியன் டாலர் அளவுக்கு விற்கின்றன. (ஒரு டிரில்லியன் என்பது லட்சம் கோடி! ஒரு டாலர் மதிப்பு சுமார் 55 ரூபாய்.)

அதில் முதல் 10 இடங்களில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களின் மொத்த விற்பனை மதிப்பு மட்டும் 1.16 டிரில்லியன் டாலர்கள். அதாவது உலகின் மொத்த சில்லறை வர்த்தகத்தில் 29.42% இந்த நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன.

 உலக சில்லறை வர்த்தகத்தில் அமெரிக்கா முக்கிய இடம் வகிக்கிறது. உலகப் பட்டியலில் முதல் 250 இடங்களில் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 81 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மொத்தமாக 712.80 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு விற்கின்றன. அதாவது முதல் 10 நிறுவனங்களின் விற்பனையில் 61.46% பங்கு இவற்றுக்கே உரியது.

 வளர்ந்த நாடுகள் அனைத்துமே இந்தியாவின் சில்லறை வர்த்தகத் சந்தை தங்களுடைய பொருள்களை விற்க ஏற்றது என்று கருதுகின்றன. இந்தியாவில் நடுத்தர மக்கள் என்று கருதப்படுகிறவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 35 கோடி. இவர்களிடம் வாங்கும் திறன் உள்ளது.

அத்துடன், "வெளிநாட்டுப் பொருள்களானாலும் வாங்கி நுகர்ந்துவிடவேண்டும்' என்ற எண்ணமும் நிலவுகிறது. எனவே அரசு மட்டும் குறுக்கே வராமல் இருந்தால், தங்கள் பொருள்களை நல்ல லாபத்துக்கு விற்றுவிடலாம் என்று கருதுகின்றன. (அட்டவணை காண்க)

 இந்தியாவில் இப்போதுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற அங்காடிகள் நாட்டு மக்களில் 3% பேருக்கு மட்டுமே பொருள்களை விற்கின்றன. எனவே தங்களுக்கு நிறைய விற்பனை வாய்ப்புகள் இருப்பதாக அவை நம்புகின்றன.
 இந்திய சில்லறை வர்த்தகத்துறையின் இப்போதைய சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்றும் இது 2020-ல் 400 பில்லியன் டாலர்களாக உயரும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அவை மதிப்பிட்டுள்ளன. எனவேதான் துடிக்கின்றன.

 ஏமாற்றும் பசப்பு மொழிகள்:

அந்நிய நேரடி முதலீட்டால் வேலைவாய்ப்பு பெருகும், உயர்ந்த தரமுள்ள பொருள்கள் விலைமலிவாக நுகர்வோருக்குக் கிடைக்கும், விவசாயிகளுக்கு அவர்களுடைய பொருள்களை லாபகரமாக விற்கவும் சந்தைப்படுத்தவும் நிரந்தர வழி கிடைத்துவிடும், மிக நவீனத் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 ஆனால் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களின் செயல்களை ஆய்வு செய்ததில் இவற்றுக்கு நேர்மாறான முடிவுகளே கிடைத்தன.

அந்நிய சில்லறை வர்த்தகப் பெரு நிறுவனங்கள் கால் ஊன்றிய இடங்களில் எல்லாம் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன, உள்நாட்டு சிறு வியாபாரிகள் ஏராளமானோர் வேலையிழந்தனர், வாழ்விழந்தனர் என்பதுதான் உண்மை.

 சில்லறை வர்த்தகம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் எத்தகைய முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை அரசின் புள்ளிவிவரங்களே எடுத்துக்கூறுகின்றன.

 இந்தியத் தொழிலாளர்களில் 7.7% பேர் சில்லறைத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். 2007-08 காலத்தில் இவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சம்
.
வேளாண்மைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் துறை சில்லறை விற்பனைத்துறைதான். மிக நவீனத் தொழில்நுட்பத்துடன் வரும் வெளிநாட்டு சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளால் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியாது.

 இப்போதுள்ள சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வேலையைவிட்டால் வேறு வேலை தெரியாது, தெரிந்தாலும் செய்யமுடியாது. எனவே இதில் தொடர்ந்தால் குறைந்த வருவாய், விற்றுமுதலுடன் திண்டாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கைத்தரம் குலைந்துவிடும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டில் அல்லது தங்களுக்குச் சாதகமான இடத்தில் தயாரிக்கப்படும் பொருள்களையும் சாதனங்களையும்தான் விற்பனைக்குக் கொண்டுவரும் என்ற அச்சம் நிலவுகிறது. "அப்படியெல்லாம் இறக்குமதி செய்ய அனுமதித்துவிட மாட்டோம், விழிப்புடன் கண்காணிப்போம்' என்கிறது அரசு.

அந்நிய வர்த்தக நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடமிருந்துதான் கொள்முதல் செய்யும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்கிறது அரசு. விவசாயிகளுக்கு அதிகக் கொள்முதல் விலையும் நுகர்வோருக்குக் குறைந்த விற்பனை விலையிலும் எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டுப் பொருள்களை இங்கே வந்து விற்கப்போவதில்லை என்றால், இந்தியப் பொருள்களை இந்தியாவிலேயே வாங்கி, இந்திய நுகர்வோர்களுக்கே விற்கப் போகிறார்களா?

இதைச்செய்வதற்கு அவர்கள் ஏன்? இடைத்தரகர்களை ஒழிக்கும் இந்த வேலையை மத்திய அரசு செய்யவிடாமல் தடுப்பது எது?

ஒரு வேளை, இந்த நிறுவனங்கள் விலை மலிவாகத் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களைத்தான் இந்தியாவில் கொண்டுவந்து விற்கப்போகின்றனவா?

அப்படி என்றால் நம் நாட்டுப் பொருள் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட மாட்டாவா? எப்படிப் பார்த்தாலும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஏற்க முடியாததாகவே இருக்கிறதே?

அந்நிய நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுடைய விளைபொருள்களை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் என்கின்றனர் சிலர். இது நடக்கவே நடக்காது.
ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் நடுத்தர, விளிம்புநிலையில் உள்ளவர்கள், மிகக் குறைந்த அளவுக்கே நிலம் வைத்திருப்பவர்கள். எனவே லட்சக்கணக்கான விவசாயிகளிடம் இந்த நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்துகொள்ளமுடியாது.
 அப்படியே அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், எந்தப் பயிரை சாகுபடிச்செய்வது என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் இனி விவசாயிகளுக்கு இருக்காது.

தங்களால் விற்க முடிந்த, அதிக லாபம் தரக்கூடிய பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்று அன்னிய நிறுவனங்கள் சாகுபடியாளர்களிடம் பிடிவாதம் பிடிக்கும்.

 இதை இப்படியும் சொல்லலாம் - உயர் வகுப்பினர் வாங்கக்கூடிய, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபம் தருகிற அல்லது பணக்காரர்கள் விரும்பும் பயிர்களை மட்டும்தான் சாகுபடிசெய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

 இந்தியாவின் பெரும்பாலான மக்கள் குறைந்த வருவாய் பெறுபவர்கள்; அவர்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள். மக்களுடைய வருவாய் உயராமல், வாழ்க்கைத்தரம் உயராமல் விற்பனையை அதிகரித்துவிட முடியாது.

 இதிலிருந்து புரிவது என்னவென்றால் இப்போதிருக்கும் சில்லறை வியாபாரிகளின் கணிசமான பணக்கார வாடிக்கையாளர்களைத்தான் வெளிநாட்டு சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் கவர்ந்துசெல்லப்போகின்றன.

அடுத்ததாக விவசாயத்தில் முதலீடு, சாகுபடி போன்றவைகூட பெரும் மாற்றங்களைச் சந்திக்கும். பணக்காரர்கள் வாங்க விரும்பும் பொருள்களுக்கே முக்கியத்துவம் தரப்படும்.

 அவர்கள் சாப்பிடும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் சாகுபடிக்கே முன்னுரிமை இருக்கும். சாமான்யர்கள் வாங்கும் பண்டங்களின் சாகுபடிப்பரப்பு குறையும். அதன் விளைவாக அவர்கள் பயன்படுத்தும் அரிசி, புன்செய் தானியம் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துவிடும்.

வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பத்தில் உள்ளூர் வியாபாரிகளைவிட விலை குறைவாக விற்பார்கள். இதன் மூலம் ஏற்கெனவே விற்ற வியாபாரிகளின் வியாபாரம் படுத்துவிடும். அவர்கள் தொழிலைவிட்டே போகவோ அல்லது ஒடுங்கவோ நேரிடும்.
அதன் பிறகு படிப்படியாக விலையை உயர்த்திவிடுவார்கள்.

 இதை 2 விதங்களில் செய்வார்கள். பணவசதி படைத்த மக்கள் வாங்கும் பொருள்களுக்குச் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள். என்ன விலையானாலும் பரவாயில்லை, பொருள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அவர்கள் இருக்கும்போது விலையை உயர்த்தி விற்பார்கள்.
 பொருள்களைக் கொள்முதல் செய்வதில் ஏகபோக உரிமை பெற்றவர்களானதும் அதற்குண்டான விலையை நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்டு, விலையை உயர்த்திவிடுவார்கள்.

குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதே அவர்களுடைய வியாபார யுக்தி. அதன் அடிப்படையில் கொள்முதல் விலையாக குறைவாகவே கொடுப்பார்கள், கூலி அல்லது சம்பளத்தையும் மிகவும் குறைவாகவே தருவார்கள்.

 நுகர்வோர்களுக்கு விற்கும்போது அதிகபட்ச லாபம் தங்களுக்குக் கிடைக்கும்வகையில் விற்பார்கள். இது ஊகமோ அனுமானமோ இல்லை, இதுவரை அவர்களுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து ஆவணப்படுத்தியதில் கிடைத்துள்ள தகவலாகும்.

 இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பரிசீலித்தால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும், வேலைக்கு வைத்துக்கொள்ளப்படுபவர்களுக்கும் குறைந்த ஊதியமே தரப்படும், ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியம்தான் கிடைக்கும், நுகர்வோர்கள் அதிக விலை கொடுத்துதான் பொருள்களை வாங்க முடியும் என்பது தெளிவாகிறது.

 மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு பகாசுர சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் சந்தையின் போக்கும் மாறிவிடும்
.
 முதல் 10 சில்லறை வர்த்தக நிறுவனங்கள்

(விற்றுமுதல் பில்லியன் டாலர் கணக்கில்)



1.         வால்மார்ட்                      அமெரிக்கா                  418.95

2.        கேர்ஃபோர்                         பிரான்ஸ்                    119.64

 3.        டெஸ்கோ                         பிரிட்டன்                      92.17

 4.        மெட்ரோ                            ஜெர்மனி                       88.93

 5.        குரோகர்                            அமெரிக்கா                    82.19

 6.        ஷ்வார்ஸ்                          ஜெர்மனி                        79.11

 7.        காஸ்ட்கோ                      அமெரிக்கா                    76.25

 8.        தி ஹோம் டெபோ        அமெரிக்கா                    67.99

 9.        வால்கிரீன் கோ             அமெரிக்கா                    67.42

10.      ஆல்டி                                   ஜெர்மனி                        67.11



 ஆதாரம்: டெலாயிட்ஸ் அறிக்கை: உலக சில்லறை வர்த்தகம்-2012.

 நன்றி தினமணி  29-08-2012 பி.எஸ்.எம்.ராவ்.


http://rssairam.blogspot.in/2012/08/blog-post_9770.html

மலை விழுங்கி மகாதேவர்கள் வலைப் பதிவினையும் காண்க.

1 comments:

  1. மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு பகாசுர சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் இந்திய சந்தையின் போக்கும் மாறிவிடும்.திரு கலாம் அவர்கள் இதை எப்படி ஆதரிகின்றார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete

Kindly post a comment.