Wednesday, August 29, 2012

வதந்திகளைத் தடுப்பதற்கு இணையதளங்களில் பாதுகாப்பு- இந்திய சைபர் சொசைட்டி ..


 .
 இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் கே.சீனிவாசன், வி. ராஜேந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வதந்தி, மெஹந்தி வைத்தவர்கள் இறந்ததாக வதந்தி என பலவாறு வதந்திகள் பரப்பப்பட்டன.

இச் சம்பவம் பரவுவதற்கு காரணமாக இருந்த 250 இணையதளங்களை உடனடியாக முடக்கி, செல்போன் எஸ்.எம்.எஸ். சேவையை தாற்காலிகமாக சில நாள்கள் ரத்து செய்தது.

அரசு இப்படிப்பட்ட சைபர் தாக்குதல்களை சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். இணையதள நிறுவனங்கள், இ-மெயில் சேவை அளிக்கும் நிறுவனங்கள் இணையதளங்களில் அதிக பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும். இ-மெயில் கணக்கு தொடங்குவோரும், கணக்கு வைத்திருப்போரும் கண்டிப்பாக அவர்களது செல்போன் எண்ணை, சம்பந்தப்பட்ட இ-மெயில் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
 வதந்திகளைத் தடுப்பதற்கு அரசின் பாதுகாப்பு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 எந்தவொரு பாதுகாப்பு நிறுவனத்துக்கு கிடைக்கும் ரகசியத் தகவலும், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ராணுவம், ஐ.பி., ரா, சி.பி.ஐ.,மாநில காவல்துறை ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால், வதந்திகளை பெருமளவு தடுக்கலாம்.

 மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி செயல்படும் மத்திய அரசின் அவசரகால கம்ப்யூட்டர் நடவடிக்கை குழு, சைபர் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேகமாகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எழுத்துரிமை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில் நீண்டகால நடவடிக்கையில் இணையதள சேவையில் வெளிநாடுகளை நம்பி இருக்கும் சூழல் இருப்பதால், அந்த நிலையை மாற்றுவதற்கு அரசு ஆலோசிக்க வேண்டும். வெளிநாடுகளை நம்பி இருப்பதால் வதந்திகளும், தகவல்கள் திருடப்படுவதும் தடுக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இணையதளத்துக்கு தேவையான ஹார்டுவேர், சாப்ட்வேர், ஆபரேடிங் சிஸ்டம் போன்றவை நம் நாட்டிலேயே
 உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளதுபோல நம் நாட்டு இணையதளத்துக்கு என்று தனியாக பயர் வால் உருவாக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் தாக்குதல், ஹக்கர்ஸ் தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியும்.

அரசு அலுவலகங்களில் தனியார் இ-மெயில் சேவையை பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். தனியார் இ-மெயில்களில் உள்ள தகவல்களைத் திருடுவதற்கு வாய்ப்பு எளிதாக இருப்பதால், ஒவ்வொரு துறைக்கும் அரசு கொடுத்திருக்கும் இ-மெயில் சேவையை பயன்படுத்த வேண்டும் என்று 

அவர்கள்  பேட்டியின்போது அவர்களுடன் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பிரசன்னா, எஸ்.என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

நன்றி :-தினமணி, 29-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.