Wednesday, August 29, 2012

89 கிரானைட் குவாரிகளில் விதிமீறல்; 700 ஏக்கர் பாசன நிலம் அழிப்பு: முதல்கட்ட ஆய்வில் தகவல் !



First Published : 29 Aug 2012 12:23:13 AM IST சென்னை பதிப்பு 29-08-2012


 மதுரை, ஆக. 28: மதுரை மாவட்டத்தில் மேலூர், கீழையூர், கீழவளவுப் பகுதிகளில் 89 கிரானைட் குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது. அதே பகுதியில் குவாரிகளால் 700 ஏக்கர் பாசன நிலமும் அழிக்கப்பட்டிருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இத் தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.

 மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்த குவாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதமாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குவாரிகளின் விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

 இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பி.ஆர்.பி நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிசாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாரி உரிமையாளர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவாரிகள் தொடர்பான ஆய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந் நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மதுரையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

கிரானைட் குவாரிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 175 குவாரிகளில் ஆய்வு செய்து முடிக்கப்பட்டது. இரண்டாம்கட்டமாக, இந்தக் குவாரிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட அளவு, பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது.

 கிரானைட் கற்கள் மதிப்பீடு: கிரானைட் கற்களின் ரூபாய் மதிப்பு சராசரியாக கன அடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கிரானைட் கழிவுக் கற்கள் கன அடி ரூ.10 ஆயிரம் எனக் கணக்கிடப்படுகிறது.

 மேலும், கிரானைட் கற்களின் வகை, தரம் ஆகியவற்றுக்கு ஏற்ப அவற்றின் மதிப்பை நிபுணர் குழு மதிப்பீடு செய்யும். கனிம வளம், வருவாய்த் துறையினர், சந்தை மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்த நிபுணர் குழுவில் இடம் பெறுவர்.

 மேலூர் பகுதியில் மட்டும் கிரானைட் குவாரிகளால் 700 ஏக்கர் பாசன நிலம் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை கணக்கீடு செய்துள்ளது. மேலூர், கீழையூர், கீழவளவுப் பகுதியில் 89 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

 இதில் 51 குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்துள்ளன. 45 ஆயிரம் கற்கள் இதுவரை கணக்கிடப்பட்டுள்ளன.

 15 நாள்களில் ஆய்வு முடிக்கத் திட்டம்: கிரானைட் கற்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வை இன்னும் 15 நாள்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

 இதன் நிபுணர் குழு மதிப்பீடு செய்த பிறகே அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை முழுமையாகக் கணக்கிட முடியும்.

கோப்புகள் மாயம்: கிரானைட் குவாரிகள் நிலம் வாங்கிய விவரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நில மாறுதல் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கீழையூர், கீழவளவு கிராமத்தில் குறிப்பிட்ட சில குவாரி நிறுவனங்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட கோப்புகள் மாயமாகியுள்ளன. இதுகுறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 கைது நடவடிக்கை: கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம் முறைகேடு தொடர்பாக யார் மீதெல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்டதற்கு மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

ஆட்சியருக்கு பிஎஸ்ஓ பாதுகாப்பு: கிரானைட் நிறுவனங்கள் மீதான அதிரடி நடவடிக்கை, கிரானைட் அதிபர்கள் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு, தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள காவல் துறை அதிகாரியை ஆட்சியரின் பாதுகாப்புக்காக அரசு நியமித்துள்ளது.



First Published : 25 Aug 2012 02:59:17 AM IST

89 கிரானைட் குவாரிகளில் விதி மீறல்; 700 ஏக்கர் பாசன நிலம் அழிப்பு !

கிரானைட் முறைகேடு: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மதுரை, ஆக. 24: கிரானைட் முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அருகே உள்ள மேலூர் பகுதியில் கிரானைட் கற்கள் விதிமுறை மீறி வெட்டியெடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி, மதுரா கிரானைட் நிறுவன அதிபர் பன்னீர் முகமது உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவன அதிபர் பாலசுப்பிரமணியன், கிரானைட் முறைகேடுக்குத் துணை புரிந்ததாகக் கூறப்படும் கனிமவள அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஆர்பி நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிசாமியின் மகன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேடுக்கு துணைபோனதாகக் கூறப்படும் வருவாய்த் துறையினர் 9 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 கிரானைட் கற்களை எடுத்துச் செல்லும்போது போலி பெர்மிட், ரசீதுகள் பயன்படுத்தப்பட்டதாக 2009-2010-ல் காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், வழக்குப் பதிவின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட காலத்தில், மேலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன் (தற்போது இவர் விருதுநகர் பகுதியில் ஆய்வாளராக இருக்கிறார்) மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தற்போதைய மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன், மதுரை சரக டிஐஜி பி.பாலநாகதேவிக்குப் பரிந்துரைத்துள்ளார்.

 அவரது பரிந்துரையின்பேரில் ராமகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரைத் தினமணியில் 25-08-2012-ல் வெளியான செய்திகளும்,

சென்னைத் தினமணியில் 29-08-2012-ல் வெளியான செய்திகளும்

உள்ளது உள்ளவாறே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

நன்றி :-தினமணி.

எல்லா ஊர்களுக்கும் ஒரே மாதிரியான செய்திகள் தரப்படுவதில்லை.

அதே போன்று பல  பத்திரிக்கைகளின் விலையும் எல்லா ஊர்களிலும் 

ஒரே மாதிரி இருப்பதில்லை> அந்தந்தப் பகுதியில் இருக்கும் வலைப் 

பதிவர்கள் முக்கிய நாளிதழ்களின்  பேரையும், விலையையும் 

தந்துதவுமாறு வேண்டப்படுகின்றனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.