Tuesday, August 14, 2012

போலி நிறுவனத்தை நம்பி லட்சக் கணக்கில் ஏமாந்து நிற்கும் மக்கள் !


சென்னை: தமிழகம் முழுவதும் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களை ஆசைகாட்டி ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து முதலீட்டாளர்கள் போலீசாரிடம் புகார் கொடுக்கவும் பயந்து போய் நடந்ததை வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அரபு நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனம் பெயரில் நடந்துள்ள மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பேரீச்சம்பழம், பால், கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தும் தாங்கள் இந்தியாவில் பங்கு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் ஆறு மாதங்களில் முதலீட்டுத் தொகை இருமடங்காக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.3,000 என்றும், அதிக பட்சம் ரூ.5 லட்சம் என்று அறிவித்தது.

பிரான்ஸ், வெள்ளி, தங்கம், சூப்பர் தங்கம், பிளாட்டினம், சூப்பர் பிளாட்டினம் என திட்டமிட்டுள்ள இந்த பிரிவுகளில் ரூ.3,000 பணத்தை அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் போட வேண்டும். வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்ட மறுநாளில் இருந்து முதலீடு செய்தவரின் வங்கிக் கணக்கில் தினமும் ரூ.100 செலுத்தப்படும் (பணப்பரிவர்த்தனைக்காக ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு ரூ.80 தான் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது). இப்படியே ஆறு மாதங்கள் வரை தினசரி பணம் செலுத்தப்படும். ஆறு மாதங்கள் முடிந்த பிறகு முதலீடு செய்தவரின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 சேர்ந்திருக்கும். இது தான் திட்டம்.

ரூ.3,000க்கு 100 ரூபாயும், ரூ.5 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு ரூ.20,000ம் தினசரி செலுததப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க இணையதளம் மூலமாக மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்நிறுவனத்தின் முகவரி எதுவும் இருக்காது. இந்தியாவில் கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு எண் எதுவும் கொடுக்கப்படவில்லை. மற்ற மாநில எண்ணுக்கு தொடர்பு கொண்டால் ஒன்று பழுதடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் யாருமே எடுப்பதில்லை.

இதில் முதலீடு செய்ய நள்ளிரவு 12 மணிக்கு அந்த குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று கிளிக் செய்து வங்கி எண்ணை குறிப்பிட்டால் பணத்தை எடுத்துக் கொண்டு முதலீடு செய்தவரின் வங்கிக் கணக்கில் தினசரி பணம் செலுத்தப்படும். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணத்தை லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் முதலீடு செய்துள்ளனர். பத்துநாட்கள் வரை தினசரி பணத்தை செலுத்திய அந்த நிறுவனம் கடந்த 11 நாட்களாக யாருக்கும் பணத்தை செலுத்தவில்லை.

குறிப்பிட்ட அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் தங்களது பணப்பரிவர்த்தனையை இந்திய வங்கிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அது தொடர்பான ஆலோசனையில் இருப்பதாகவும் 15 நாட்களில் மீண்டும் பணம் செலுத்ததப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி 10 நாட்களாகியும் பணம் செலுத்தப்பட்ட பாடில்லை. இதனால் முதலீட்டாளர்கள் தினசரி அந்த இணையதளத்தை பார்ப்பதும் சோகமாக செல்வதுமாக இருக்கின்றனர். போலீசில் யாரும் புகாரும் கொடுக்கவில்லை.

இது குறித்து முதலீடு செய்து ஏமாந்த அன்பரசன் என்பவர் கூறுவதாவது:-

ஆறு மாதங்களில் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று எண்ணி ரூ.1 

லட்சம் முதலீடு செய்தேன். ஏழு நாட்கள் பணம் செலுத்தினர். கடந்த 10 

நாட்களாக பணம் செலுத்தவில்லை. நான் வேறு என்னுடன் பணியாற்றும் சக 

ஊழியர்களையும் இதில் சேர்த்துவிட்டேன். அவர்கள் என்னை கேள்வி 

கேட்கின்றனர். இதனால் பத்து நாட்களாக நான் வேலைக்கும் செல்லவில்லை 

என்றார்.


நன்றி: http://tamil.oneindia.in/news/2012/08/14/tamilnadu-when-ll-these-people-change-159636.html



--


0 comments:

Post a Comment

Kindly post a comment.