Wednesday, August 15, 2012

பெரியாரின் குரு, வ..உ .சி.யின் உயில் ! செ.திவான்

வ.உ.சியும் அவரது துணவியார் மீனாட்சி அம்மையாரும்
http://www.natpu.in/?p=724
கப்பல் விடுமளவுக்கு வளமாக இருந்த வ.உ.சி. காலப் போக்கில் தனது மகனுக்கு போலீஸில் ஏதாவது வேலை வாங்கித் தருமாறு பெரியாருக்குக் கடிதம் எழுதினார். பெரியாரும் தனது அரசியல் குரு என்று குறிப்பிட்டிருப்பது வ.உ.சி.யைத்தான். 1938 


வ.உ.சி.யின் உயில் :-

தூத்துக்குடியிலிருக்கும் மகாஸ்ரீஅ.செ.க. கந்தசுவாமி ரெட்டியார் அவர்களுக்கு தூத்துக்குடியிலிருக்கும் 
வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிக்கொடுத்த உயில் சாசன நிருபம்.

அன்பார்ந்த ஐயா, நமஸ்காரம். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கடவுளையும் தங்களையொத்த உண்மை
தேசாபிமானிகள் சிலரையும் தவிர இவ்வுலகத்தில் வேறு தஞ்சம் ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.நான், இனிமேல் அதிக காலம் ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழி இல்லை. எனது குடும்ப நிலைமையையும் தாங்கல் முன்னின்று என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய காரியஙளையும் இதன்கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் கீழ்வரும் காரியஙளை செய்து முடித்துக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாற்றி
அருளும்படியாகத் தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது சொத்துக்கள் :-

எனக்கும் எனது மூத்த மகன் ஆறுமுகம் பிள்லைக்கும் பாகவிஸ்திரமாகி பல வருஷங்களாகின்றன. அதே தஸ்தாவேஜு என் மனைவியிடமிருக்கின்றது.

பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும், ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும் எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்திருக்கின்றேன்.ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறுக்கு மேல் எனக்கு இலாபம் ( Profits ) கிடைக்கக்கூடும். ஆனால் நான் ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறு கடன் வாங்கி இருக்கிறேன்.கடனுக்கும் இலாபத்திற்கும் அனேகமாக சரியாய்ப் போகும். இரண்டு கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியமும் கட்டப்படவில்லை.
அது கட்டப்பட வேண்டும்.மேற்படி இரண்டு இன்ஷுரன்ஸ் தொகையையும் பல வருஷங்களுக்கு முன்பெ என் மனைவி பேருக்கு டிரேன்ஸ்பர் செய்து வைத்திருக்கிறேன். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகைகள் தவிர என் ஓட்டப்பிடாரத்து (பிறந்த இடம் )
எனது பெரிய புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும் பதினாறு மரக்கால் நஞ்சையும் அதன் பக்கத்தில் கிணற்ருத் தோட்டம் என்ற ஒரு நிலமும் இருக்கின்றன. இது தவிர ஓட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று 3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும் இருக்கின்றன. என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ல அந்த இரண்டு
புஞ்சைகளையும் பயிர் செய்து கொள்ல முடியாது. அவற்றை ரூபாய் ஐந்நூறுக்குத் தங்கள் பேருக்குக் கிரயம் செய்து கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஓட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலைமையில் இருக்கின்றன. மேற்படி மச்சைப் பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் மூன்றடி உயர்த்தி தேக்கு மரக்கட்டை போட்டும் மேல் பக்கமுள்ள இரண்டு சன்னல்களுக்கு நேராகக் கீழ்ப் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்தும் அரைவீட்டை எடுத்து விட்டும் தாங்கள் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தபின் அவ்வீட்டில் என் மனைவி மக்கள் குடியிருந்து வரலாம். ஆத்தூர் பிரமு அம்மாள் ரூபாய் எழுநூர்ரைம்பதுக்கு என் மனைவி பேருக்கு ஒரு அடமான தஸ்தாவேஜ் எழுதிக் கொடுத்திருக்கிறாள். அடமானச் சொத்துக்கள் சுமார் இரண்டாயிரத்துக்கு விலைபோகும். என் மனைவி அடமான தஸ்தாவேஜை தங்கள் பேருக்கு மேடோபர் வாங்கிக் கொள்க. அதற்கு வசூலாகும் தொகையையும் மேலே கண்ட என் புஞ்சைக்கிரயம் ரூபாய் ஐந்நூறும் அவசியமானால் என் மைத்துனன்மார் குடும்பத்திலிருந்து என் குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய ரூபாய் 1500-ம் தங்களிடம் பற்றி வருகிற தொகைக்கு ஈடு செய்து கொள்க. இப்பொழுதும் ரூபாய் இருநூறு விலை போகக்கூடிய சட்டப் புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன. அவற்றை விற்க வேண்டும்.

எனது கடன்கள்:-

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்துமாத வீட்டு வாடகை ரூபாய் 135/-

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி சுமார் ரூபாய் 30/-வன்னியஞ்செட்டியார் எண்ணெய்க் கடைக்கு சுமார் ரூபாய் 30/-இன்ஸ்பெக்டர்பிள்ளைக்கு ரூபாய் 20/-
சோமநாத்துக்கு ரூபாய் 16/-வேதவல்லிக்கு ரூபாய் 50/- ஆக, மொத்தம் ரூபாய் 86/-

எனது தம்பி மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்.

இப்போது செய்ய வேண்டிய அவசரக் காரியம் ருதுவாயிருக்கிற என் மக்களிருவரில் மூத்தவளாகிய செள்பாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்கு விரைவில் கலியாணம் செய்து வைக்க வேண்டும். சரியான மாப்பிள்ளை கிடையாததால் தாமதம். இப்போது சுமார் ஐந்நூறுக்கு அவளிடத்தில் நகைகள் இருக்கின்றன. இன்னும் ரூபாய் ஐந்நூறுக்கு அவளுக்கு நகைகள் போடவேண்டும். கலியாணப் பந்தல் செலவு, ஒரு வருஷத்து சீர் சீராட்டு செய்யவும் வேண்டும். அவற்றிற்கு ஒரு கம்பெனி இன்ஸ்யூரன்ஸ் பணம் 1000-ம்
சரியாய்ப் போகும்.செள்பாக்கியவதி மரகதவல்லி அம்மாள் கலியாணத்தை இன்னும் இரண்டு வருஷம் கழித்து நடாத்தி வைக்கலாம். அவளுக்கும் அவளிடமிருக்கிற நகைகளைச் சேர்த்து ரூபாய் ஆயிரத்துக்கு நகை போடவேண்டும்.ஒரு வருஷத்துக்கு சீர் சீராட்டும் செய்யவேண்டும்.அவற்றிற்கு மற்றொரு கம்பெனியின் இன்ஸ்யூரன்ஸ் பணம் ரூபாய் 100-மும் சரியாய்ப் போகும். என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகள் எல்லாம் தாங்களே வாங்கி வைத்திருந்து கோவாப்பிரேட்டிவ் சொஸைட்டியில் கொடுக்கிற கரண் டிபாஸிட் வட்டி போட்டுக் கொடுத்து வர வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுடைய அன்னவஸ்திர கல்விச் செலவுகளுக்கு யாதொரு ஐவ்கமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயலுகிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இர்ண்டு தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் மைத்துனன்மார் காரியம்:-

வீரபாண்டியன் பட்டணம் பூபாலராயன் இடமிருந்து ரொக்கமே வாங்க வேண்டும். சொத்து ஒன்றும் வாங்கக் கூடாது. திருச்செந்தூர் உண்டியல் கடை சரசிணை ஐயர் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மாத்திரம் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தால் அவரிடமிருந்து என் மைத்துனன்மார் அடமானத்தை விடுதலை செய்து தஸ்தாவேஷ் எழுதி ரிஜிஸ்டர் செய்து வாங்க வேண்டும். அவர் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறுக்குச் சம்மதிக்காவிட்டால் அவர் நம்பர் போட்டுக் கொள்ளும்படி விட்டு விடவேண்டும். என் மைத்துனன்மார் சகோதரியாகிய செள்பாக்கியவதி ஆறுமகத்தம்மாளுக்கு நகைப் பாவத்து வகைக்குக் கொடுக்க வேண்டிய ரூபாய் ஐந்நூறு அவள் இஷ்டப்படி ரொக்கமாகவோ, நகையாகவோ கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டியது. என் மைத்துனன்மார்கள் பெரும் செலவாளிகளாய் இருக்கிறபடியால் பாக்கித் தொகையில் யானையப்ப பிள்ளை சத்திரத்துப் பக்கத்தில் மரக்கால் ஒன்றுக்கு ரூபாய் நூறு விலைக்கு நல்ல நஞ்செய் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் மூன்று கோட்டை விரப்பாடு தங்கள் பேருக்குக் கிரயத்திற்கு வாங்கி அவற்றையும் பாக்கித் தொகையும் என் மைத்துனன் மூவரும் மூன்று பங்கு வைத்து தங்கள் மனைவி மக்களுடன் அவர்கள் யாதொரு வில்லங்கத்திற்கும் உள்படுத்தாமல் அனுபவித்துக் கொள்ளும்படிக்கும் அவர்கள் மக்கள் மெஷர் ( மேஜர் ) அடைந்தபின் அவர்கள் சர்வ சுதந்திர பாத்தியமாக அனுபவித்துக் கொள்ளும்படி தாங்கள் அவர்களுக்கு நன்கொடை தஸ்தாவேஜ் எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுக்கவேண்டும். என் பெரிய மைத்துனன் சுப்பிரமணிய பிள்ளை ஒருக்கால் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லையானால் அவன் பாகச் சொத்துக்களை அவனுடைய சகோதரர் இருவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து நன்கொடை தஸ்தாவேஜில் எழுதி வைக்க வேண்டும். ஆனால் எனது பெரிய மைத்துனன் தனது வீட்டை வில்லங்கம் செய்யாத காலம் வரையில் அவன் அன்னவஸ்திரச் செலவிற்கு அவன் பாகச் சொத்துக்களிலிருந்து மற்றைய இருவரும் நபர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து வீதம்  மொத்தம் ரூபாய் பத்து மாதந்தோறும் கொடுத்து விட வேண்டும். திருச்செந்தூர் வீடுகளில் தெற்கு வீடு சுப்பிரமணியத்திற்கும், வடக்கு வீடு வெங்கிடாசலத்திற்கும் சேர வேண்டும். வடக்கு வீட்டிற்கு எதிரேயுள்ள காலி மனைதான் மைனர் குஞ்சரத்திற்குச் சேரக்கூடியதாக இருக்கிறது. வடக்கு வீட்டையும் தெற்கு வீட்டையும் கிரயம் போட்டு தேற்கு வீட்டிற்குப் போகும் கிரயத்தில் அதிகப்படும் தொகையை வெங்கிடாச்சலத்திற்கும் சுப்பிரமணியன் சொத்துக்களிலிருந்து கொடுக்க வேண்டும். குஞரம் வீடு கட்டுவதற்கு இவ்வளவு என்று இப்பொழுதே தீர்மானித்து மற்றைய இருவரும் அவருக்குச் செலுத்திவிட வேண்டும். 19 பனை புஞ்சையையும் சமமாகப் பங்கிட்டு மூன்று பேருக்கும் கொடுத்துவிட வேண்டியது. மைனர் குஞ்சரத்திற்குக் கார்டியனாக வெங்கிடாச்சலத்தையும் மேற்படியார் அத்தான் சண்முகம் பிள்ளையை நியமித்து அவனுடைய வரவு செலவுகளுக்குச் சரியான கணக்கு வைத்திருந்து அவன் மெஷ்ரடைந்த ( மேஜர் ) பின் சொத்தையும் கணக்கையும் அவனிடம் ஒப்படைக்கும் படியாக நன்கொடை தஸ்தாவேஜில் எழுத வேண்டும். பூபாலராயரிடமிருந்து தொகை பூராவும் வசூலாகிவிட்டால் அவருக்குத் தாங்களும், நான் ..... ( இந்த இடத்தில் ஒரு வரி சிதிலமடந்துள்ளது ) ரூபாய் 1500-ம் நான் என் மைத்துனன்மார் குடும்பத்திற்குச் சென்ற பத்து வருஷமாகப் பாடுபட்டு வந்ததற்கு பிரதிபிரயோஜனமாக என் குடும்பத்தாருக்குக் கொடுக்க வேண்டும். பூபாலராயரிடமிருந்து வரவு வந்திருக்கிற தொகைக்கும் பற்றாயிருக்கிற தொகைக்கும் பேரேட்டுப்படி ஒரு நகல் தயார் செய்வித்துக் கூடிய விரைவில் எனக்குக் கொடுக்கும்படி உத்தரவு செய்க.

இதன் பிரதி ஒன்று என் மனைவியிடமும் மற்றொன்று என் மைத்துனன் வெங்கிடாசலமிடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் மேற்கண்ட காரியங்கள் எல்லாம் தாங்கள் இனிது செய்து முடித்து அருள்புரிக.

தூத்துக்குடி
26-10-36                                                   வ.உ.சிதம்பரம்பிள்ளை

வரலாற்றாசிரியர் செ.திவான் அவர்கள் எழுதி, 
சுஹைனா பதிப்பகம்,
106 F-4A, திருவனந்தபுரம்சாலை,
பாளயங்கோட்டை,
0462-2572665

முதற்பதிப்பு மார்ச் 1, 2003  

இந்நூல்,பெரியார் ஈவே.ரா. தலைமையில் திருமணம் செய்துகொண்டவர்களும், நெல்லை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மு.சுப்புரத்தினம் பி.எஸ்.ஸி.பி.எல் அவர்களின் தாய் தந்தையருமான, நாங்குநேரி செ.முத்துக்கிருஷ்ணந்மு.பாப்பம்மாளுக்குக் காணிக்கையாக்கி
உள்ளார், திரு.செ.திவான்,எம்.ஏ.எம்.ஃபில். 

பலநாட்கள் இதனை வலைப்பூவில் பதிவு செய்யும் ஆர்வம் இருந்து வந்தது.  இன்று சுதந்திரத்திருநாள். பலர் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் ஏதேதோ எழுதிப் பிதற்றுகின்றனர். அடுத்த கட்டத்திற்குச் செல்ல என்ன செய்யவேண்டும் என்பதில் ஒற்றுமை இல்லை. பெற்ற சுதந்திரத்தைக் குறை சொல்லி என்ன பயன்? 

இல்லை என்று சொல்லாது அள்ளிக்கொடுத்த வள்ளல் வ.உ.சி. இறுதிக்காலத்தில் எஞ்சியிருந்த சட்டப்புத்தகங்களுக்குக்கூட விலைபேசவேண்டிய அவல நிலையை எய்துகின்றார்.

அந்த நிலையிலும், தன் குடும்பத்தவருக்கும், மைத்துனன்மாருக்கும் தக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு நல்லவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து எழுதப்பட்ட இந்த உயிலினைச் சுதந்திரதினத்தன்று அனைவரது பார்வைக்கும் கொண்டு
வரப்படுகின்றது. 

மனமிருந்தால் ஒரு நகலெடுத்து உங்கள் பகுதியில் வலம் வருகின்ற அரசியல் அதிகாரத்தால் கிடைத்த பதவியில் உள்ள, பதவியைத் தேடி அலைகின்ற,
அத்தகையோரைச் சுற்றிச் சுற்றி வந்தால் தேறிவிடமாட்டோமா என்ற கூட்டத்தாருக்கும்
கொடுங்கள் 

.அவர்கள் திருந்தினால் சுதந்திரம் எல்லோருக்கும் இனிக்கும்.

இவரைப்பற்றி எழுத இன்னும் எண்ணற்ற தகவல்கள் உள்ளன. அவையும் இந்த வலைப்பூவில் அவ்வப்பொழுது இடம்பெறும். ஒன்று மட்டும் சொல்ல முடியும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இவரது வக்கீல் தொழிலுக்கான சன்னத்தும் பறிக்கப்பட்ட் பின்னரும் தேசத்தின் மீது கொண்ட பற்றினை இழந்தாரில்லை. 

பல்லாண்டுகள் சிறைப்பட்டிருந்து வெளிவந்த இவரை வரவேறகக் காத்திருந்தது சுப்பிரமணிய சிவா மட்டும்தான். சிந்தாதிரிப்பேட்டையிலும், மயிலாப்பூரிலும், பெரம்பூரிலும் வாழ்ந்தபோது அரிசி மற்றும் நெய் வியாபாரமும் செய்திருக்கின்றார். காங்கிரசின் சமரசப் போக்குப் பிடிக்காமல் காங்கிரசை விட்டு வெளியேறியும் இருக்கின்றார்..

இவரது இலக்கியப் படைப்பாற்றலையும், மொழியாக்கம் செய்யும் திறன் பற்றியும், செய்நன்றிமறவாத் தன்மை குறித்தும் நிறைய எழுதலாம். தகவல்கள் அவ்வப்பொழுது மேலும் வரும்.

தோற்றம்: 05-09-1872   மறைவு :18-11-1936 ( இரவு 11.30 மணி ).

                              ( உயில் எழுதியது மறைவிற்கு 23 நாட்கள் முன்னால் )

செ.திவான்  அருமுயற்சிகளுக்கு அவரது திருவடிகளை வணங்கி நன்றியும் சொல்வது கடமையாகின்றது.




கோயிற் பூசை செய்வோர், சிலையைக் கொண்டு விறறல் போலும்
  வாயில்  காத்து நிற்போன், வீட்டை வைத்திழத்தல் போலும்
  ஆயிரங்களான நீதி, அவை உணர்ந்த தருமன்
  தேயம் வைத்திழந்தான்,சிச்சீ, சிறியோர் செய்கை செய்தான்.

   நாட்டு மாந்தரெல்லாம், தம்போல் நரர்களேன்று கருதார்
   ஆட்டு மந்தையா மென்றுலகை, அரசரெண்ணி விட்டார்
   காட்டு முண்மை நூல்கள், ப்லதாங் காட்டினார்களேனும்
   நாட்டு ராஜ நீதி மனிதர் நன்கு செய்யவில்லை   


.                              பாஞ்சாலி சபதத்தில் 
                          மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

3 comments:


  1. Subashini Tremmel
    04:02 (8 hours ago)

    to mintamil
    இப்பதிவு மனதை உருக்கியது. வ.உ.சி. அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைவு கூறிக் கொண்டே இருத்தல் வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    சுபா

    2012/8/14 Rama Samy

    ReplyDelete

  2. TVSKRISHNAN
    Dear Sir, ullam kothikirathaiyya indraya arasaial vathigal patithavathu thiru...
    05:36 (8 hours ago)

    Innamburan Innamburan
    12:16 (2 hours ago)

    to mintamil
    நான் என்றுமே வ.உ.சி. அவர்களின் அடிமை. நீங்கள் இத்தனை விஸ்தாரமாக, அதுவும் இன்று, எழுதியது நல்ல காரியம். நன்றி. எல்லாரும் அவரது அஞ்சா நெஞ்சத்தைப் போற்றுங்கால், அவரது சட்ட அணுகுமுறையை மறந்து விடுகின்றனர். இந்த உருக்கமான 'கடன்பட்டார்' உயில் உருக்கமானது. ஒரு நிகழ்வு.

    என்றுமே அமைதியின் மறு உரு ஆகிய திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் அலுவலகத்தை போலீஸ் சோதித்தப்போது, சினம் மிகுந்து, தகராறு செய்தார். போலீஸ் அதிகாரியான முதலியாரோ, ஒரு திரு.வி.க. விசிறி. அவர் பொறுமையாக தன் கடமையை செய்தார். கூட இருந்த வ.உ.சி. அவர்கள் திரு.வி.க. அவர்களை, சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு எச்சரிக்கை செய்தார்.

    சான்றோர் இருந்தனர், அக்காலத்தில்.
    இன்னம்பூரான்
    இந்திய சுதந்திர தினம்.

    ReplyDelete

Kindly post a comment.