Wednesday, August 29, 2012

இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை: நிறவேற்றம் !



பாக்தாத், ஆக.28: இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்பட 21 பேருக்கு திங்கள்கிழமை அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் இராக்கில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மரண தண்டனை அளிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவேயில்லை. இந்த ஆண்டில் இதுவரை 91 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் இதுபோல அதிக எண்ணிக்கையில் மரண தண்டனையை இராக் நிறைவேற்றியுள்ளது. கடந்த ஜனவரியில் 17 பேருக்கும் பிப்ரவரியில் 14 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இராக்கில் நீதிமன்ற நடைமுறைகள் வெளிப்படையானதாக இல்லை. இதனாலேயே அங்கு அதிக எண்ணிக்கையிலானோருக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்தார்.
 கடந்த ஜூன் மாதத்தில் கூட சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு இராக்கில் நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனை குறித்து கவலை வெளியிட்டிருந்தது.

First Published : 29 Aug 2012 12:34:55 AM IST  thinamaNi 29-08-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.